2024 நவம்பர் 23, சனிக்கிழமை

பயங்கரவாதமும் இலங்கை பொருளாதாரமும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வரலாற்றில், கடந்துவந்தப் பாதையை மீண்டும் நினைவுபடுத்துவதாக அல்லது கடந்துவந்த பாதையிலேயே, மீண்டும் பயணிக்க வைப்பதாக, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் அமைந்துள்ளது.   

உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்பு, அபிவிருத்தி பாதையை நோக்கி, மெல்ல மெல்ல பயணித்துக் கொண்டிருந்த இலங்கையின் பொருளாதாரம், மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கே வந்திருக்கிறது. உள்நாட்டுப் போரைக் கையாண்ட அரசாங்கம், இப்போது உள்நாட்டின் ஒத்துழைப்புடன், சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான, அறிவிக்கப்படாதப் போரை நிகழ்த்தும் நிலைக்கு வந்துவிட்டது. 

இவையனைத்துமே, இலங்கைப் பொருளாதாரத்தையும் அபிவிருத்தியையும் அத்திபாரத்துடன் ஆட்டம்காண வைத்துவிட்டன.   

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் விளைவாக, சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், அவற்றில் 35க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகிறார்கள்.

இந்தப் பத்தியை எழுதும்வரை, இலங்கையில் தாக்குதலுக்குப் பின்னரான அசாதாரண நிலை தொடர்ந்து கொண்டிருப்பதுடன், அதன் வாயிலாக மக்களின் இயல்புவாழ்க்கையும் பாதிக்கப்பட்டதாகவே அமைந்துள்ளது. இவை அனைத்துமே, தாக்குதலின் தொடர்விளைவாகப் பார்க்கப்பட்டாலும் இந்தத் தாக்குதலால், இலங்கை அரசாங்கத்துக்கு, நீண்டகால அடிப்படையில் ஏற்படக்கூடிய இழப்பானது, நேரடியாக கண்களுக்குத் தெரியாத, இதைவிட பன்மடங்கான இழப்பாகும்.

இந்தத் தாக்குதல், இலங்கையின் பொருளாதாரத்தையும் சாமானிய இலங்கை மக்களையும் எந்தவகையில் பாதிக்கப்போகிறது என்பதே, தற்போதைய நிலையில் பல்வேறு ஆய்வாளர்களின் விவாதப்பொருளாக உள்ளது.  

சுற்றுலாத்துறை 

போருக்குப் பின்னான இலங்கையின் மிக முக்கியமான வருமான மூலமாக சுற்றுலாத்துறை அமைந்துள்ளது. தற்போது, தொடர்ச்சியாக நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையானது, சுற்றுலாத்துறையை முழுமையாகப் புரட்டிப்போடுவதாக அமைந்துள்ளது.

இவ்வாண்டின் தொடக்கத்தில் பிரபல இணையதளங்களினால், சுற்றுலா பயணிகள் செல்லத்தகுந்த இடங்களில் இலங்கைக்கு முதன்மையான இடம் வழங்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக, கடந்த வருடம் சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக்கொண்ட சுற்றுலாத்துறை, இம்முறை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும், தற்போதைய அசம்பாவித நிலையானது, இ​தைத் தலைகீழாக மாற்றிப்போட்டுள்ளது. இதன்போது, கடந்த வருடத்தில் கிடைக்கப்பெற்ற சுற்றுலாத்துறை வருமானத்தில் சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைவாகவே கிடைக்கப்பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது, இலங்கையின் பொருளாதாரத்துக்கும் சுற்றுலாத்துறையை நம்பியிருந்தோர்களுக்கும் பேரிழப்பாகும்.

உண்மையில், இலங்கையின் முறைப்படுத்தப்பட்ட சுற்றுலாத்துறைக்கே இத்தகைய வருமான இழப்புள்ளபோது, முறைப்படுத்தப்படாத பருவத்தின் அடிப்படையில், சுற்றுலா வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும், அதனை நம்பியிருக்கும் உரிமையாளர்கள், திறன் குன்றிய தொழிலாளர்கள் (Unskilled Workers) ஆகியவர்களின் வருமானம் மிகப்பாரிய அளவில் பாதிக்கப்படுவதாக அமையும்.  

குறிப்பாக, தாக்குதல் இடம்பெற்ற தினத்துக்கு அடுத்த நாளே, கொழும்பிலுள்ள பிரபல விடுதிகளின் முன்பதிவு வீதமானது (Advance Booking Occupancy Rate), 76சதவீதத்திலிருந்து 4சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதுவே, தற்போதைய சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியை சரிவரக் காட்டி நிற்கிறது.

நாட்டின் அசாதாரண நிலை முடிவுக்கு கொண்டுவரப்படாத நிலையில், இலங்கைக்குள் மீளவும் சுற்றுலாப் பயணிகள் வருவதையோ அல்லது சர்வதேச நாடுகள் தமது பிரஜைகளை இலங்கைக்குள் அனுமதிப்பதையோ குறைந்தது ஒரு வருடகாலத்துக்கு நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, சுற்றுலாத்துறை மூலமாக வருமானத்தின் மீளவும் நாம் கட்டியெழுப்ப காலமெடுக்கும் என்பதுடன், அதுவரை குறித்தத் தொழில்முறையை நம்பியிருப்பவர்களின் நிலை என்னவாவது என்கிற கேள்வியும் நம்மிடையே மேலோங்கி நிற்கிறது.  

ரூபாவின் பெறுமதி 

இலங்கையில் கடந்தாண்டின் இறுதியில் இடம்பெற்ற அரசியல் குழப்பநிலைகளின் விளைவாக, இலங்கை நாணயத்தின் பெறுமதியானது மிகப்பெரும் வீழ்ச்சியைக் கண்டிருந்ததுடன், தற்போதே அது மெல்ல மெல்ல வலுவடைந்து வந்துகொண்டிருந்தது.

ஆயினும், தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி சூழ்நிலையானது, இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் அச்சத்​தை  ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களது முதலீடு தொடக்கம் அந்நிய செலவாணி உள்வருகை ஆகியவற்றுக்கு முட்டுக்கட்டையாய் அமைந்துள்ளது. இதன்விளைவாக வலுவடைந்து கொண்டிருந்த இலங்கையின் நாணயப்பெறுமதியானது, மீளவும் வீழ்ச்சி பாதையைநோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த வாரத்தில்  அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிராக இலங்கையின் பெறுமதியானது, சுமார் 172 ரூபாயாக வலுவடைந்திருந்தது. ஆனால், தற்போது ஓர் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் பெறுமதியானது 175 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அசாதார நிலை மேலும் தொடருகின்றபோது, அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.  

இலங்கையின் பொதுபடுக்கடன் 

2018ஆம் ஆண்டைப்போல 2019ஆம் ஆண்டிலும் இலங்கை அரசாங்கமானது, மிகப்பாரிய பொதுபடுகடனை மீளச்செலுத்த வேண்டிய ஆண்டாக உள்ளது. இதற்கான வருமானங்களை ஒழுங்குபடுத்தும் விதமாகவும் பொதுபடுகடனை மீளச்செலுத்த திட்டமிடும் முகமாகவும், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ள நிலையில் இந்த அசாம்பாவிதமானது, இந்தச் செயல்பாடுகள் முழுமையாகவே பாதிப்பதாக அமைந்துள்ளது.

இதன்காரணமாக, இம்முறை இலங்கை பொதுப்படுகடனை முழுமையாக மீளச்செலுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. கடனை வழங்கியுள்ள நாடுகள், குறித்த நிலைமைகளை ஆராய்ந்து இலங்கைக்கு மேலதிக காலவசதி​யை  வழங்காதவிடத்து, நாட்டின் வருமானமும் பொருளாதாரமும் பொதுப்படுகடனை மீளச்செலுத்த முடியாத நிலையில் மிகப்பெரும் பின்னடைவை சந்திக்கக்கூடும்.   

இலங்கை மக்களின் நிலை 

மேற்கூறிய எல்லாவற்றுக்கும் மேலதிகமாக, இலங்கையில் வாழும் மக்களின் நிலையும் அவர்களின் பொருளாதாரமும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. கடந்த வார இறுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுதாக்குதலின் விளைவாக, கிட்டதட்ட கடந்தவாரத்தில் முழு இலங்கையினதும் அன்றாட செயற்பாடுகள் முழுமையாகவே பாதிக்கப்பட்டிருந்தன. இதில், மாதாந்த வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் ஊழியப்படையாகவுள்ளத் தரப்பினர் சற்றே தப்பித்துக்கொள்ள, நாளாந்த வருமானத்தையும் தமது வணிக வருமானத்தையும் நம்பியிருப்பவர்கள் நிலை மோசமானதாக மாறியுள்ளது.

குறிப்பாக, கொழும்பையே எடுத்துக்கொண்டால், மிகப்பிரபலமான சகல பொதுஇடங்கள், திரையரங்குகள், ஹொட்டல்கள், உல்லாச விடுதிகளென பெரும்பாலான இடங்கள் இயங்காத நிலையிலேயே உள்ளன. இதன்காரணமாக, திறன் குறைந்த (unskilled) ஊழியர்களின் வருமானமும் அவர்களது எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறியுள்ளன.   

இலங்கையின் முறைப்படுத்தப்படாத பொருளாதாரமானது, திறன் குறைந்த ஊழியர்களின் வருமானத்தில்தான் மறைமுகமாக தங்கியிருக்கிறது. எனவே, இவர்களது நிலை மோசமடையும்போது, 2009ஆம் ஆண்டுக்கு முன்பதாகவிருந்த பொருளாதார சூழ்நிலையை நோக்கி நாம் நகர்வதைத் தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.  

இலங்கையின் பொருளியல் வல்லுநர்களின் எதிர்பார்க்கைகளின் பிரகாரம், தற்போது இடம்பெற்றுள்ள தாக்குதல் சம்பவங்களானது இலங்கையின் பொருளாதாரத்தை மிகக் குறுகிய காலத்துக்கே பாதிக்குமெனவும், நீண்டகால அடிப்படையில் மிகவிரைவாக பழைய நிலைக்கு திரும்ப முடியுமெனவும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

ஆயினும், கடந்த வாரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளைக் கோர்வையாகப் பார்க்கும்போது, குறித்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர நீண்டகாலம் எடுக்குமென்றே தோன்றுகிறது. இதன் காரணமாக, இலங்கையின் பொருளாதாரத்தில் நீண்டகால அடிப்படையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படவுள்ளதுடன், அதனை இந்த நிச்சயமற்ற அரசு, எவ்வாறு கையாளப்போகின்றது என்பது தொக்கி நிற்கும் கேள்வியாகவே உள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X