Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மார்ச் 12 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கடந்த வாரத் தொடர்ச்சி)
விலை உழைப்பு விகிதத்தை தீர்மானிப்பதற்கு, ஏதுவான காரணிகள் (Determinants of PE Ratio)
விலை உழைப்பு விகிதத்தைப் பயன்படுத்தி, கம்பனியொன்றின் பங்கின் பெறுமதியைத் தீர்மானிப்பதற்கான அணுகு முறையைப் பற்றி நாம் பார்ப்போம்.
ஏதாவது பங்கொன்றின் பெறுமதியை தீர்மானிக்கும்போது, இந்த விகிதத்தில் செல்வாக்களிக்கும் காரணிகள் பற்றி முதலீட்டாளர்கள் அறிந்திருத்தல் அவசியம். இவ்வாறான, அறிவின்றி வெறுமனே PE விகிதம் எனப்படும் எண்ணொன்றின் அடிப்படையில், முதலீட்டுத் தீர்மானங்கள் மேற்கொள்வது நல்லதல்ல.
முதலீடு செய்யும்போதுள்ள முக்கியமான அடிப்படைக் கொள்கை யாதெனில், அக்கம்பனி தொடர்பாகவும் அக்கம்பனியின் பங்கொன்றின் பெறுமதி தீர்மானிக்கப்படும் பலவிதமான காரணிகள் பற்றியும் நல்ல அறிவு இருத்தல் அவசியம்.
PE விகிதத்துக்கு செல்வாக்களிக்கும் முக்கிய காரணிகள் சில சுருக்கமாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பங்கொன்றுக்கான உழைப்பின் வளர்ச்சி (Earnings per share Growth)
கம்பனியின் பங்கொன்றுக்கான உழைப்பின் வளர்ச்சி, உயர்வடைதலானது PE விகிதம் உயர்வடைவதற்குக் காரணமாகும்.
வேறு விதமாகக் குறிப்பிடின், ஏதாவது ஒரு கம்பனியின் எதிர்கால உழைப்பில் கூடுதலான வளர்ச்சியை எதிர்பார்க்கும்போது, முதலீட்டாளர்கள் அப்பங்கு தொடர்பாக உயர்ந்த PE விகிதத்தைச் செலுத்துவதற்கு சம்மதம் தெரிவிப்பார்கள்.
கம்பனியின் உழைப்பின் தளம்பல் (Earnings Volatility)
கம்பனியொன்றின் உழைப்பின் தளம்பல் நிலை அதிகரிக்கும்போது, அதன் நட்டஅச்சமும் அதிகரிக்கின்றது. இதனால் கூடுதலான தளம்பல் நிலையானது விலை கீழிறங்கவும் PE விகிதம் கீழ் செல்லவும் காரணமாகும்.
இணைப்பு விகிதம் (Leverage)
கம்பனியொன்றில் இணைப்பு எனப்படுவது, நிரந்தர செலவையுடைய சொத்தைப் பாவித்தல், நிரந்தர வட்டியையுடைய தொகுதிக் கடன்களைப் பயன்படுத்துவதாகும்.அதிக இணைப்பானது நட்ட அச்சத்தை அதிகரிப்பதற்கும் பங்குவிலை குறைவடைவதற்கும் காரணமாயிருக்கும். இதன் காரணமாக இணைப்பு அதிகமாக உள்ள கம்பனிகளில் PE விகிதமானது கீழ் மட்டத்தில் காணப்படும்.
மொத்தச் சந்தையின் விலை உழைப்பு விகிதம் (RE Ratio of the Market)
மொத்தப் பங்குச் சந்தையின் செயற்பாடானது, கம்பனியின் பங்கு விலைகளில் மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்தும். மொத்தப் பங்குச் சந்தையின் செயற்பாடானது நல்ல நிலைமையில் காணப்படும்போது, அதாவது விலை மட்டங்கள் உயர்வடையும் போக்கையுடைய சமயம் மொத்தச் சந்தையின் PE விகிதமானது உயர்வடையும் நேரம் கம்பனியின் PE விகிதமும் உயர்வடையும் போக்கைக் கொண்டிருக்கும்.
அதேபோன்று, மொத்தச் சந்தையில் விலை மட்டங்கள் குறைவடையும் போக்கைக் கொண்டுள்ளபோது, கம்பனிகளது விலைகளும் வீழ்ச்சியடைந்த PE விகிதமும் கீழிறங்கும். இதன் காரணமாக மொத்தச் சந்தையானது பயணிக்கும் திசை தொடர்பான நல்ல அறிவு முதலீட்டாளர்களுக்கு இருத்தல் அவசியம்.
ஒத்த பங்குகளின், துறைகளின் விலை உழைப்பு விகிதம் (PE Ratios of Similar Stocks or Industries)
இதற்கு முன்னர் குறிப்பிட்டது போன்று, ஏதாவது துறையில் இருக்கும் கம்பனிகளின் பங்கு விலைகள் அனைத்தும், ஒன்றாக மேலே அல்லது கீழே செல்லும் போக்கைக் கொண்டிருத்தல். இதன் காரணமாக, பொருத்தமான துறையிலுள்ள ஏனைய கம்பனிகளின் பங்குகள் தொடர்பாக, முதலீட்டாளர்கள் செலுத்தும் விலை உழைப்பு விகிதம் பற்றியும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
ஏதாவது துறையில், முதலீட்டாளர்களுக்கு உள்ள கவர்ச்சியானது குறைவடையுமாயின் அத்துறையிலுள்ள கம்பனிகளின் பங்குகளது விலையும் PE விகிதமும் குறைவடையலாம்.
பன்முகப்படுத்தல், சந்தையை ஆதிக்கம் செலுத்தும் தன்மை (Diversification and market Dominance)
கம்பனியொன்று வியாபார ரீதியாக பன்முகப்படுத்தப்படும்போது அங்கு நட்ட அச்சம் குறைவடையும். இதன் காரணமாக பன்முகப்படுத்தப்பட்ட கம்பனிகளது PE விகிதமானது பன்முகப்படுத்தப்படாத கம்பனிகளிலும் பார்க்கக் கூடுதலான பெறுமதியைக் கொண்டிருக்கும் இயல்பு காணப்படுகின்றது.
அதேபோன்று, தமக்குரிய வியாபாரத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் தன்மையை உடைய கம்பனிகளது PE விகிதமானது கூடுதலான பெறுமதியைக் கொண்டிருக்கலாம்.
ஊக வியாபாரம் (Speculation)
சில கம்பனிகளின் பங்குகள் கூடுதலாக ஊக வியாபாரத்துக்கு உள்ளாகின்றன. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள், சம்பவங்கள் நிமித்தம் ஏதாவது பங்கொன்றின் விலை எதிர்காலத்தில் மேலெழும் தன்மையுடையதாயின் அதன் பங்குகளை, அப்பங்குகளைக் கொள்வனவு செய்வது ஊக வியாபாரத்தின் பண்பாகும்.
ஊக வியாபாரத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு எதிர்பார்த்த காரணிகள் நடைபெற்றால் எதிர்காலத்தில் விலை மேலெழுந்து அதிகமான இலாபத்தை அடையவும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காதவிடத்து விலை கீழிறங்கி நட்டமேற்படவும் வாய்ப்புண்டு.
ஊக வியாபாரத்துக்கு உள்ளாகும் கம்பனிகளின் பங்குகள் கூடுதலான PE விகிதத்துக்கு கொடுக்கல் வாங்கல் செய்யப்படுதல் சாதாரணமாக இடம்பெறுவதாகும்.
வட்டி வீத மட்டங்கள் (Level of Interest Rates)
மொத்தப் பொருளாதாரத்தில் வட்டி வீதங்களில் ஏற்படும் மாற்றமானது மொத்தப் பங்குச் சந்தையைப் போலவே துறையிலும் செல்வாக்கை உண்டுபண்ணும். வட்டி வீதங்களில் அதிகரிப்பானது பங்குச் சந்தையின் விலை மட்டங்கள் வீழ்ச்சியடைவதற்கும் PE விகிதங்கள் கீழிறங்குவதற்கும் காரணமாகும்.
அதே போன்று வட்டி வீதங்களின் அதிகரிப்பானது விசேடமாக வங்கி, நிதி, காப்புறுதித்துறையில் செல்வாக்கை உண்டுபண்ணும்.
PE விகிதத்தைத் தீர்மானிப்பதற்குச் செல்வாக்கைச் செலுத்தும் காரணிகள் சிலவற்றை மேலே குறிப்பிட்டிருந்தோம். எனவே, பங்கொன்றை மதிப்பிடும் போது இக்காரணிகள் தொடர்பாகக் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
பங்குகளைத் தெரிவு செய்யும்போது கவனிக்க வேண்டிய ஏனைய காரணிகள் (Other Factors Considered in Selection of Shares)
முதலீட்டாளர்களால் பங்குகள் மதிப்பீடு செய்யும்போதும் தெரிவு செய்யும்போதும் பயன்படுத்தப்படும் பிரபல்யமடைந்த விலை உழைப்பு விகிதம் தொடர்பாக நாம் பார்த்தோம். இருப்பினும் PE விகிதத்தின் அடிப்படையில் மாத்திரம் முதலீட்டுத் தீர்மானம் மேற்கொள்வது பொருத்தமானதல்ல. அது பங்கொன்றின் பெறுமதி தொடர்பாக, அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான எண்களாலான அளவீடு மாத்திரமே. இதற்கும் மேலாக முதலீட்டாளர்களால் கவனிக்க வேண்டிய காரணிகள் பலவற்றைக் குறிப்பிடலாம்.
(மிகுதி அடுத்த வாரம் தொடரும்)
-இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago