2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

தொழிற் சட்டங்களும் தொழிலாளர்கள் நிலையும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதியாக உள்ள தரவுகளின் பிரகாரம், 2013ஆம் ஆண்டில் மொத்த ஊழியப்படையின் வேதனத்தில்,  56 சதவீதமான 2.6 மில்லியன் வேதனமானது, நிரந்தரத் தொழிலைக் கொண்டிராதத் தொழிலாளிகள் மூலமே பெறப்பட்டுள்ளது. இது, இலங்கையில் எத்தகையச் சட்டத் திட்டங்கள் உள்ளபோதிலும் தொழில்தருனரும் தொழிலாளியும், குறுகிய வருமானப் பெறுகைக்கானச் சட்டங்களுக்குப் புறம்பான தொழில் முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்குவதை எடுத்து காட்டுகிறது. இதன்காரணமாக, இறுதியில் மோசமாகப் பாதிக்கப்படுபவர்களாக தொழிலாளிகள் உள்ளபோதிலும் அவர்களது அறியாமையும் வறுமையும், இ​ைதயே தொடரச் செய்வதுதான், இன்றைய சாபக்கேடாக உள்ளது.  

அதுமட்டுமல்லாது, நிரந்தரத் தொழிலைக் கொண்டிராத ஊழியர்களில், 90 சதவீதமானவர்கள், தனியார் துறையிலேயே தங்கியுள்ளார்கள். அதிலும், இந்தத் தொகை, மிக அண்மையக் காலத்திலேயே அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இறுதி பத்து வருடங்களில் நிரந்தரமற்ற ஊழியப்படையினர் சுமார் 350,000 பேர் தெரிவாகியுள்ளபோதும் நிரந்தரத் தொழிலாளர்கள் சுமார் 15,000 பேர்தான் தெரிவாகியுள்ளனர். 

அதுபோல, நிரந்தரத் தொழில்வாய்ப்பைப் பெறாதோர் அல்லது நிறுவனத்தினதோ உரிமையாளரதோ ஒப்பந்தத்தைப் பெறாதோர் இலங்கையின் சமூக நலன் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் கூட பாதுகாப்​ைபயோ, நன்மையையோ பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைதான் காணப்படுகிறது. இங்கே சமூக நலன் திட்டங்கள் எனப்படுவது, நிரந்தரத் தொழில் உரிமையைப் பெற்றுள்ள ஊழியர் ஒருவர் இலங்கையின் தொழிலாளர் சட்டத்தின் கீழ் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் ஒரு தொகையை, மாதம்தோறும் பங்களிப்பு செய்வதன் மூலம், முதுமையில் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளுவதற்கான ஒரு முறையாக உள்ளது. ஆனாலும், நிரந்தரத் தொழில் வாய்ப்பைக் கொண்டிராத ஊழியர்களைக் கொண்டுள்ள சில தனியார் நிறுவனங்கள், அவர்களுக்கென பிரத்தியேக ஓய்வூதியத் திட்டங்களை வழங்கியுள்ளன. ஆனாலும் இது ஒப்பீட்டளவில் வெறும் 14 சதவீதமாகும். மிகுதி 86 சதவீதமானோர், எதிர்காலம் தொடர்பில் எத்தகையத் திட்டங்களையும் தன்னகத்தேக் கொண்டிராதவர்களாக உள்ளார்கள். 

இலங்கையின் தொழிற்சட்டங்களுக்கு அமைவாக, உரிமையாளர் எவ்வகையான ஊழியரையும் வேலைக்கமர்த்தும்போது, எழுத்து மூலமான உறுதி வழங்கவேண்டியது அவசியமாகிறது. ஆனாலும், இலங்கையில் உள்ள 83 சதவீதமான தற்காலிக ஊழியர்கள், சாதாரண வேலைக்கமர்த்தப்படும் ஊழியர்கள் அனைவருக்குமே எழுத்துமூலமான எவ்வித உறுதிப்படுத்தலும் வழங்கப்படுவதில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ஆவணப்படுத்தல்கள் முழுமையடையாத போது, ஓர் உரிமையாளர்-ஊழியர் உறவை முழுமைபடுத்த முடியாததாக அமைவதுடன், ஊழியர் சார் நலன்களைப் பெற்றுக்கொடுக்கவும், சட்டங்களுக்கு அமைவாக வாய்ப்பில்லாமல் போகிறது. 

நிரந்தரத் தொழிலைக் கொண்டுள்ள ஊழியர்களுக்கும் அல்லாத ஊழியர்களுக்குமிடையிலான வருமான பரம்பல் மிகவும் வேறுபாட்டைக் கொண்டதாக அமைந்துள்ளது. இது ஒரு நாட்டின் வருமான ஏற்றதாழ்விலும் பிரதிபலிக்கக் கூடியது. குறிப்பாக, நிரந்தர, நிரந்தரமல்லாத ஊழியர்களின் வேதனங்களுக்கு இடையில் மாத்திரம் சுமார் 89 சதவீதமான வருமான வேறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதுவும் நிரந்தரத் தொழிலற்றத் தொழிலாளர்களுக்கான இறுக்கமானச் சட்டங்களை உருவாக்கவேண்டியத் தேவைகளை உருவாக்கியுள்ளது. 

ஆய்வுகளின் பிரகாரம், ஊழிய நிரம்பலில் (Labour Supplychain) குறைவானக் கல்வித்த​ைகமை,  திறமையற்றதன்மைக் கொண்ட ஊழியர்கள்,  தாமாகவே தம்மைத் தற்காலிக, சாதாரண வேலைக்கு அமர்த்தும் ஊழியப்படைக்குள் இணைத்துக் கொள்ளுகிறார்கள். இது, ஊழியர் தெரிவிலும் நிரந்தரத் தொழில்வாய்ப்பை நாடிச் செல்லும் ஊழியர்கள் தேர்விலும் எதிர்மறையானத் தாக்கத்தைச் செலுத்துவதாக, ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

இலங்கையில் நிலவும் வரையறுக்கப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களுக்கான வெற்றிடங்கள்,  மேற்கூறிய ஊழியர் நிரம்பலிலுள்ளப் பிரச்சினைகள் இரண்டுமே, தற்காலிக ஊழியர்களின் அளவை அதிகரிக்கும் காரணிகளில் முதன்மையாக உள்ளன. 

அதுபோல, கடந்த காலங்களில் நிரந்தரத் தொழிலாளர்களை விடவும் தற்காலிகத்தன்மைக் கொண்ட ஊழியர்களைத் தேர்வு செய்வது, நிறுவன இலாபத்துக்கு வலுசேர்ப்பதனால், அதை நோக்கியதாகத் தனியார்களது நடவடிக்கைகளும் அமைந்துள்ளது. இதன்போது, நிரந்தரத் தொழில் வாய்ப்பைக் கொண்டுள்ள ஊழியர்களைப் பார்க்கிலும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கான சந்தைக் கேள்வி அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாததாகவுள்ளது. எனவேதான், இத்தகையச் செயற்பாடுகளை வரையறுக்கக்கூடிய வகையில் தொழிலாளர் நியமங்களையும் சட்டங்களையும் உருவாக்கவேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலாக, திறன்மிகு தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடம் தொடர்பில் ஊழியப்படைக்குப் பொருத்தமான அறிவுறுத்தல்களை வழங்கி, அவர்களைத் தயார் செய்வதும் அவசியமாக உள்ளது. இதன் மூலமாகத்தான், ஊழியர் ஒருவர் நிரந்தரத் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடியதாக இருக்கும். 

அடுத்ததாக, எத்தகைய தொழிலாளராக இருப்பினும் அவர்களது அடிப்படை பாதுகாப்புத் தன்மைகள் உறுதி செய்யப்படுவதுடன், அவர்களுக்கான சமூகநலத் திட்டங்களும் தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதா என்ப​ைத அவதானிப்பதும் அவசியமாகிறது. குறிப்பாக, தொழிலாளர்கள் எத்தகையத் தொழிலாளருடனும் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும்போது, அவை எழுத்து மூலமானதாக அமைவதை உறுதிபடுத்துதல் அவசியமாகிறது. அப்போதுதான், எதிர்காலத்தில் ஊழியர்நலன் சார்ந்த விடயங்களில் எத்தகைய சட்ட முயற்சிகளையும் முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும். அதேபோல, ஊழியர் ஒவ்வொருவருக்கும் மாத ஊதியத்துடன், அதற்கான ஆவணப்படிவம் (Pay Slip) வழங்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான், ஊழியர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம், சமூக நலன் ஒதுக்கீடு, கொடுப்பனவுகள் என்பனவற்றை ஆவண ஆதாரத்துடன் கண்டறியக் கூடியதாக இருக்கும்.  

இவற்றுக்கு மேலாக, தற்காலிக ஊழியர்களைக் கொண்டு நடத்தும் செயலாண்மை நிறுவனங்களைக் (Agency Comapanies) கட்டுபடுத்தக்கூடிய சட்டவிதிகளும் நியமங்களும் அவசியமாகிறது. இவை, தேவைக்கு ஏற்ப ஊழியர்களை தனியார் நிறுவனங்களுக்குக் கட்டுபாடுகள் எதுவுமற்ற வகையில் வழங்குகின்ற தன்மை கூட, இந்தத் தற்காலிக தொழிலாளர் படையை ஒரு வகையில் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. அது மட்டுமல்லாது, மனித ஆற்றல் முகவர் நிலையங்களை (man power Agencies) தொழிலாளர் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். காரணம், மிக அதிகளவில் தற்காலிக ஊழியர்களின் எதிர்கால நிலை கேள்விக்குறியாக்கப்படுவது இத்தகைய முகவர் நிலையங்களாளாகும். எனவே, இவர்களை நெறிப்படுத்துவதும் கண்காணிப்பதும் அவசியமாகிறது. 

நிலையற்றத் தொழிலைக் கொண்டுள்ள ஊழியர்களின் எதிர்கால நலனைப் பாதுகாப்பதில் மேலே கூறியதுபோல, தனியான நியமங்களை அறிமுகம் செய்வதும் கண்காணிப்பை அதிகப்படுத்துவதும் நிச்சயம் முன்னேற்றகரமான பெறுபெற்றைத் தரும் எனும்போதிலும் அதற்கு மேலாக, சந்தையில் புதிதாக உள்நுழையும் ஊழியர்களுக்கும் கல்வித்தகமை ஒப்பீட்டளவில் குறைவாகவுள்ள ஊழியர்களுக்கும் தற்காலிக ஊழிய நிலையின் நிலைமை தொடர்பில் அறிவுறுத்துவதன் மூலமே இந்த ஒட்டுமொத்த செயற்பாட்டையும் முழுமையடையச் செய்ய முடியும். இதைச் செய்யக்கூடிய நிலையில் அரசாங்கமும் அதுசார்ந்த அதிகாரிகளும் உள்ளார்கள் என்கிறபோதிலும் அைத நடைமுறைபடுத்துவதில் பின்நிற்பது, நாளைய இலங்கையின் அபிவிருத்தி செயல்பாடுகளுக்கு ஒருவகை முட்டுக்கட்டையாகவே அமையக்கூடும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X