Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
ச. சந்திரசேகர் / 2018 நவம்பர் 13 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் இரு பிரதமர்கள் பதவிக்காக அரசியல் சிக்கலை தோற்றுவித்திருந்த நிலையில், இந்தச் செயற்பாடு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, துறைசார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
குறிப்பாக நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக இரு பிரதான அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்கள் பொதுக்கூட்டங்களிலும், ஊடகவியலாளர் சந்திப்புகளிலும் வெளிப்படுத்தி வந்த இரத்தக் களரி தொடர்பான கருத்துகள் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்நாட்டு அரசாங்கங்கள், தம் நாட்டு மக்களுக்கு இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியமை தொடர்பான அறிவித்தல்களை வெளியிட்டுள்ளன.
குறிப்பாக டிசெம்பர்-ஜனவரி மாதங்கள், இலங்கைக்கு பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் பருவமாக அமைந்திருக்கும். மேலைத்தேய நாடுகளில் நிலவும் அதிக குளிருடனான காலநிலை, அவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதற்கு தூண்டுவதாக அமைந்திருக்கும்.
இந்நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக, உள்நாட்டு சுற்றுலா ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த முற்பதிவுகள் பலவும் இரத்துச் செய்யப்பட்ட வண்ணமுள்ளதாக குறித்த ஹோட்டல்களின் நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்தனர்.
“வழமையாக டிசெம்பர் - ஜனவரி மாத காலத்தில் எமது ஹோட்டலில் 90-95 சதவீதமான அறைகள் எப்போதும் நிரம்பிக் காணப்படும். குறிப்பாக ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இந்தக் காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவு வருகை தருவார்கள். இந்த ஆண்டும் எமக்கு பெருமளவு முற்பதிவுகள் இணையத்தளங்களினூடாகவும், பயண முகவர்களினூடாகவும் கிடைத்திருந்த நிலையில், தற்போது அவை படிப்படியாக இரத்துச் செய்யப்படுகின்றன. இதனால் எமது வருமானத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதுடன், நாட்டுக்கு கிடைக்கும் அந்நியச் செலாவணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என கொழும்பில் அமைந்துள்ள சொகுசு நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நிறைவேற்று அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
உத்தியோகபூர்வ பெறுமதிகள் எதுவும் தற்போது வெளிப்படுத்தப்படாத நிலையில், கடந்த 15 நாட்களில் மாத்திரம் குறிப்பிடத்தக்களவு இரத்துச் செய்கைகள் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் ஜனவரி 5ஆம் திகதி இடம்பெறும் என அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த நிலைமை மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் அடையாளத்தை மேம்படுத்துவதற்காக 314 மில்லியன் ரூபாய் செலவில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு சபையினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ‘ஆகவே, ஸ்ரீ லங்கா’ (So, Sri Lanka), கடந்த வாரம் இலண்டனில் இடம்பெற்ற வேர்ள்ட் ட்ராவல் மார்ட் (WTM) நிகழ்வின் போது அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதுவும் புதிதாக நியமனம் பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சர் வசந்த சேனநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நாட்டில் உறுதியற்ற ஓர் அரசியல் சூழல் காணப்படும் நிலையிலும், வெளிநாட்டு அரசாங்கங்கள் தமது நாட்டு மக்களுக்கு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பில் எச்சரிக்கைகளை விடுக்கும் நிலையில், இது போன்றதொரு மில்லியன் கணக்கான ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் ஊக்குவிப்புத் திட்டங்கள் எந்தளவுக்கு நாட்டுக்கு அனுகூலமாக அமைந்திருக்கும் என்பது துறைசார் வல்லுநர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
நவம்பர் மாதம் இன்னும் முடிவடையாத நிலையில், ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இதில், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 0.5 சதவீத அதிரிப்பையே காண்பித்திருந்தது. அதுவும், இந்தியா, சீனா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை தந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் வெளித்துறைசார் பெறுபேறுகள் தொடர்பான பிந்திய அறிக்கையில், 2018ஆம் ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் சுற்றுலாத் துறையினூடாக நாட்டுக்கு 2,935 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை பிரதான அங்கம் வகிக்கிறது. கடந்த ஆண்டில் மாத்திரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்திருந்தனர். இவர்களினூடாக இலங்கைக்கு 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்திருந்தது. இந்தப் பெறுமதி நடப்பு ஆண்டில் 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கும் என அதிகாரிகள் மதிப்பிட்டிருந்தனர்.
நாட்டில் எவர் பிரதமர் பதவியை வகித்தாலும், வெளிநாட்டு வருமானம் என்பது நாட்டின் பொருளாதாரத்தை சீரான நிலையில் பேணிச் செல்வதற்கு மிகவும் முக்கியமான தேவையாக அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago