Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மார்ச் 12 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்களுடைய நிகழ்காலம், எதிர்காலம் குறித்த நிதி மேலாண்மைக்கான ஓர் அங்கிகாரம்
மு.திலீபன்
கொழும்பு பங்குப் பரிவர்த்தனை, யாழ்ப்பாணம்
(சென்ற வாரத் தொடர்ச்சி)
வாழ்க்கை நிலைகளின் இடர்நேர்வு சுயவிவரம்
முதலாவது நிலை
சிந்து மகேஸ் என்பவர் தனது பட்டப்படிப்பை யாழ். பல்கலைக்கழகத்தில் முடித்த கையுடன் அபிவிருத்தி உத்தியோகத்தராக அரசதுறையில் தனது முதலாவது தொழிலைப் பெற்றுக் கொண்டார்.
அவர் தனது பெற்றோருடன் வசித்துவருவதால், ஒப்பீட்டளவில் உணவு, இருப்பிடத்துக்கான செலவுகள் மிகக்குறைவாக அமைந்திருந்தது. அவருடைய வாழ்க்கையின் இந்த காலகட்டத்தில், அவரால் நீண்டகால முதலீட்டு வரம்புகளுக்கு அமைவாக, எதிர்காலத்துக்கான அதிக இடர்நேர்வுகளை எடுத்துக் கொள்ளக் கூடியதாக அமைந்திருக்கும்.
இரண்டாவது நிலை
எட்டு வருடங்களுக்குப் பின்பு, திருமணம் செய்து கொண்ட சிந்து, ஓர் இல்லத்தின் தலைவி. அவருக்கு என்று ஒரு குடும்பம்; அவருடைய நிதிப் பொறுப்புகள் கடன்கள், செலவுகளால் அதிகரித்துள்ளமையால் அவருடைய இடர்நேர்வு சுயவிவரமானது பழைமை வாய்ந்ததாக, அதாவது ஆபத்துகளைத் தவிர்ப்பதாக மாறுகின்றது. இருந்தும் அவருடைய பக்கத்தில் அதிக காலம் இருக்கின்றது. அவர் அதிக விவேகமான அணுகுமுறைகளை எடுக்க முடியும்.
மூன்றாவது நிலை
ஓய்வுகாலத்தை நெருங்குகின்ற போது, சிந்துவினுடைய இடர்நேர்வு சுயவிவரம் மீளவும் மீளாய்வுக்கு உள்ளாகின்றது. அவர் அதிக காலத்துக்கு மாதாந்த சம்பளத்தைப் பெறமுடியாது. அத்துடன், கிடைக்கும் ஓய்வூதியத்தைக் கொண்டு நாளாந்த செலவுகளைக் கூட, முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாது போகலாம். சிந்து, தனது வாழ்க்கையின் இக்காலகட்டத்தில் அவளால் உழைக்கப்பட்ட சொத்துகளின் பெறுமதி குறையாது பேணிப்பாதுகாத்தல் தொடர்பாகக் கவனம் செலுத்துவதுடன், தனது உழைப்பின் பயனை அனுபவிக்கின்றாள்.
படிமுறை - 5
அடிப்படை நிதித் திட்டமிடல் நடைமுறைப்படுத்துவதற்கான வேலை
• எதிர்கால நுகர்வு அல்லது செலவு
• காப்புறுதி
• ஓய்வூதியத் திட்டம்
• கடன் பொறுப்பு
• உடைமை கையகப்படுத்தல் திட்டம்
எதிர்கால நுகர்வு அல்லது செலவு
வாழ்க்கை நிகழ்வுகளாகத் திருமணம், உயர்கல்வி, சொத்துகளின் பெருக்கம், குழந்தைகள், பெற்றோர்களின் நலன், தொழில் மாற்றம், புதிய தொழில் முயற்சி, ஓய்வு போன்ற பலவற்றை எதிர்காலத்துக்கான நுகர்வுகளாக, செலவுகளாகக் கொள்ளப்படும். இவ்வாறான செலவீனங்கள் உங்களுடைய செல்வங்களை வெறுமைப் படுத்துவதுடன் நீண்டகால நிதி பொறுப்புகளாகவும் மாறுகின்றன.
காப்புறுதி
வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள், அவசர நெருக்கடி நிலைமைகளான விபத்துகள், நோய்கள், இறப்பு போன்ற நிகழ்வுகளால் உங்கள் சேமிப்பு கரைக்கப்படுவதுடன், சொத்துகளும் இல்லாது ஒழிக்கப்படுகின்றன.
இவ்வாறான எதிர்பாராத நிகழ்வுகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையிலான காப்புறுதி உடன்படிக்கைகளை, உங்கள் நிதித் திட்டமிடலில் மிக முக்கிய அங்கமாக உள்ளடக்கப்படல் வேண்டும். அல்லது குறைந்தபட்சம் விபத்து, சிக்கலான நோய் போன்றவற்றுக்கான காப்புறுதி உடன்படிக்கை ஒவ்வொருவரும் கட்டாயம் கொண்டிருத்தல் வேண்டும். மேலும், உங்களுடைய மூன்று தொடக்கம் ஆறு மாதகாலச் செலவுகளை ஈடுசெய்யக்கூடிய அளவிவான அவசரகால நிதியமொன்றை உருவாக்கிப் பேணிக்கொள்ள வேண்டும்.
கடன் பொறுப்பு
நிதித் திட்டமிடலின் ஒன்றிணைந்த ஓர் அங்கமாக, கடன்பொறுப்பு அமைந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில், வசதிக்கேற்ப கடன்அட்டைகளைப் பயன்படுத்தி மிகவும் சுலபமாகச் செயற்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு மேலாக தனிப்பட்ட மற்றும் பொறுப்புக் கடன்களை உதாரணமாகக் கொள்ள முடியும். இவைகள் உங்கள் நிதி குறிக்கோள்களை அடைவதற்கான அடிப்படைகளாக அமைந்துள்ளன.
இருந்தும் அளவுக்கு அதிகமாக கடன்பட்டால், அவை உங்கள் கட்டுப்பாட்டை மீறி வாழ்க்கையின் குறிக்கோள்களைச் சிதைத்துவிடும். இதற்கு மாற்று வழி எதுவும் இல்லை. எனவே, கடன்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் பேணிக்கொள்ளுதல் மிக முக்கியமாகும்.
உங்களுடைய கடந்த கால கடன்கள் தொடர்பான பதிவுகள், உங்கள் எதிர்காலக் கடனுக்கான செலவுகளின் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஒய்வூதியத் திட்டம்
உங்களுடைய ஒய்வுகாலம் மிகவும் அமைதியாகவும், சிறப்பாகவும் அமைந்து கொள்ளும் வகையில் போதுமான நிதியை எவ்வாறு திட்டமிட்டுச் சிக்கனப்படுத்திச் செயற்படுத்தும் செயன்முறை ஒய்வூதிய திட்டம் என வரையறுக்கலாம்.
உங்களுடைய ஒய்வுகாலத்தில் எவ்வளவு பணம் தேவைப்படலாம் என்ற தீர்மானங்களுக்கு உதவுவதுடன், எதிர்காலத்தில் எற்படுகின்ற செலவுகள், அதற்கான நிதியீட்டங்களுக்கும் இத்திட்டமானது துணைபுரிகின்றது.
உடைமைகள் கையகப்படுத்தல் திட்டம்
உங்களுடைய சொத்துகளின் கையகப்படுத்தல்கள் தொடர்பான முன்திட்டம். ஆரம்பத்தில் இது விரும்பத் தகாததாக அமைந்திருக்கலாம். ஆனால், நீண்டகால நிதித் திட்டமிடலின் ஒரு முக்கிய பாகமாக இது அமைகின்றது.
இயலாமை, கடுமையான நோய், இறப்பு போன்ற துன்பியல் நிகழ்வுகளால் எதிர்காலத்தில் உங்கள் குடுப்பத்தினருக்கு ஏற்படுகின்ற நிதி நெருக்கடிகளைச் சரியான முறையில் எதிர்கொள்ள, இத்திட்டமானது இன்றியமையாததொன்றாக அமைகின்றது.
(மிகுதி அடுத்த வாரம் தொடரும்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago