Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
அனுதினன் சுதந்திரநாதன் / 2018 ஜூன் 18 , மு.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய இலங்கையின் பொருளாதார நிலையானது, நமது வாழ்க்கை முறைமைக்கு சற்றும் பொருத்தமற்றதாக, இருக்கிறது. நமது பொருளாதாரக் கொள்கைகளும் நம்மவர்கள் தீர்மானங்களும் ஒரு மரத்தை நாட்டி, அதைப் பராமரித்து, அதிலிருந்து பழத்தைப் பெற்றுச் சுவைப்பதற்கு மாறாக, மரத்தை நாட்டுவதற்கு முன்னரே, பழத்தைச் சுவைக்க வேண்டும் என்பதற்கு ஒப்பானதாகவுள்ளது எனலாம்.
எமது நாட்டின் அரசியல்வாதிகளும், பொருளியல் கொள்கை வகுப்பாளர்களும் நடைமுறைக்குக் கொண்டு வரும் திட்டங்கள், நம்மிடமிருக்கும் நிதிவளங்களுக்கு அமைவாக வகுக்கப்படாமல், வகுக்கப்படும் திட்டங்களுக்கு அமைவாக, எப்படி நிதியைத் திரட்டிக்கொள்ளலாம் என்கிற அளவிலேயே இருக்கின்றன.
இதன் விளைவை, நாணய பெறுமதி இறக்கம் முதற்கொண்டு, வர்த்தகப் பற்றாக்குறை வரை அனைத்திலும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்.
கடனும் பற்றாக்குறையும்
இலங்கையின் பொருளாதார விளைவுகள் மற்றும் அதுசார் வினைத்திறனற்ற கொள்கைகளின் விளைவுகளால் கடனும் வர்த்தகப்பற்றாக்குறையும் அதிகரித்துக்கொண்டே செல்லுகிறது. குறிப்பாக, 2014ஆம் ஆண்டிலும், 2015ஆம் ஆண்டிலும் இடம்பெற்ற தொடர்ச்சியான தேர்தல்கள், ஆட்சி மாற்றங்கள் என்பன அரசாங்கத்தின் செலவீனங்களை அதிகரித்ததுடன், அவற்றை ஈடு செய்வதற்காகப் பெற்றுக்கொள்ளும் கடனையும் அதிகரித்திருந்தது. அதுமட்டுமல்லாது, இந்தக் கடனின் விளைவாக, அந்நிய செலவாணியில் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், அது ஒரு நிதிப் பற்றாக்குறையை அல்லது வெற்றிடத்தைச் சிறிது சிறிதாக உருவாக்கியுள்ளது.
நல்லாட்சிக்கு முன்பிருந்து, அரசாங்கமானது தனது வருமானத்துக்கு மிக மிக அதிகமாகவே தனது செலவீனங்களை கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களில் மட்டும், அரச வருமானத்தில் குறைந்தது 90% வருமானமானது இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கடனை மீளச்செலுத்தவோ அல்லது கடனுக்கான வட்டியை மீளச்செலுத்தவோ பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சில வருடங்களின்போது, அரச வருமானமானது முழுமையாகவே இந்தக் கடனைச் செலுத்துவதற்கு போதுமானதாகவே இல்லாத சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது. இந்த நிலை எதை வெளிப்படுத்துகிறது என்றால், வெற்றிகரமாக அரசாங்கத்தைக் கொண்டு நடாத்தவும், ஆட்சி நடாத்தும் அரசியல்வாதிகளின் இலாபங்களுக்காகவும் பொருளியல் கொள்கைகள் ஈடு வைக்கப்பட்டு, நாட்டின் பொதுபடுகடனும், பற்றாக்குறையும் அதிரிக்கச் செய்யப்பட்டிருக்கிறது என்பதேயாகும்.
அரசாங்கத்தின் வருமானம், செலவீனம் தொடர்பில் மக்களிடையே பொருத்தமான புரிதல் இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திகொள்ளும் அரசியல்வாதிகளும் அதற்கேற்ப செயல்படுகிறார்கள்.
உண்மையில், அரசாங்கம் தனது அரச வருமானம் மூலமாகச் செலவீனங்களையும் கடன்களையும் முழுமைபடுத்த முடியாதநிலையில், புதிய வரிச் சட்டங்களையோ, புதிதாகப் பணத்தை அச்சிடும் நடவடிக்கையையோ நடைமுறைப்படுத்துகிறது. இதன் விளைவாக, மறைமுகப் பணவீக்கம் அதிகரிப்பதுடன், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் அதிகரிக்கின்றன.
இது நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்களின் செலவீனத்தை அதிகரித்து, அவர்களின் சேமிப்பை இல்லாமல் செய்கிறது.
நம்மில் பெரும்பாலனவர்கள், அரசாங்கம் தன்னகத்தே முடிவில்லா வளங்களையும் நிதியையும் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள். அதன்மூலம் அரச வேலைவாய்ப்பு, இலவசப் பொதுச்சேவைகள், மானியங்கள் ஆகியவற்றை தொடர்ந்து அரசாங்கத்தால் வழங்க முடியும் எனவும் அவர்கள், நம்புகிறார்கள்.
இதனால், ஆட்சியில் தொடர்ச்சியாகவிருக்க விரும்பும் அரசியல்வாதிகளும் அந்த பிம்பத்தையே மக்களிடம் முன்னிறுத்தவும் விரும்புகிறார்கள்.
இதன்மூலம், அரசியல் பிரபலத்தைப் பெற்றுக்கொண்டு, தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தில் அவர்களால் இருக்க முடிகிறது. இதனால், தவறான நம்பிக்கையைக் கொண்டிருக்கும் மக்களுக்கு, மானியம், இலவசங்கள் என்கிற பெயரில் மிகச்சிறியளவில் நலன்கள் வழங்கப்பட்டு, கொல்லைப்புறத்து வழியாக, அதற்கான ஒட்டுமொத்தக் கடன்சுமையும் சுமத்தப்படுகின்றது.
வர்த்தகப் பற்றாக்குறை
இலங்கை வரலாற்றில், வர்த்தகப் பற்றாக்குறையற்ற ஆண்டுகளாக, மூடிய பொருளாதாரக் கொள்கையை கொண்டிருந்த ஆண்டுகளை மாத்திரமே குறிப்பிட முடியும். குறிப்பாக, 2016ஆம் ஆண்டில் வர்த்தகப் பற்றாக்குறையானது 8.87 பில்லியன் அமெரிக்க டொலராக அமைந்ததுடன், 2017ஆம் ஆண்டில், இது 9.62 பில்லியன் அமெரிக்க டொலராக அமைந்திருந்தது. இதுவே, வர்த்தகப் பற்றாக்குறையில் இலங்கையின் அதியுச்சமான பற்றாக்குறை காலமாகும். பொருளியல் மதிப்பீட்டாளர்களின் கணிப்பீட்டின்படி, இந்த வருடம் வர்த்தகப் பற்றாக்குறையானது இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு இறக்குமதி அளவு அதிகமாகவிருப்பதானால், உண்மையில், எத்தகைய பொருட்களை நாம் இறக்குமதி செய்கிறோம் என்பதனை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. பெரும்பாலானவர்களின் பார்வையில், இலங்கை அதிகளவில் உணவுசார் இறக்குமதிகளைச் செய்வதாகவே எண்ணுகிறார்கள்.
ஆனால், உண்மையில் இலங்கையானது ஒட்டுமொத்த இறக்குமதியில் 10%க்கும் குறைவாகவே உணவுசார் இறக்குமதிகளைக் கொண்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் இது 8.4%மாகவும், 2017ஆம் ஆண்டில் 8.7%மாகவுமே உணவு இறக்குமதியானது உள்ளது. உணவு இறக்குமதியில் அரிசி, கோதுமை மாவே மிக அதிகளவு இடத்தைப் பிடித்துள்ளது.
ஒரு காலத்தில், அரிசி உற்பத்தியில் தன்னிறைவைக் கொண்டிருந்த நாம், இப்போது நமது அத்தியாவசிய உணவுக்குக் கூடக் கையேந்தி நிற்கும் நிலை வந்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. இதற்கு, விவசாயத்துடன் இணைந்ததான பேண்தகு அபிவிருத்தியை, முன்னிருந்த அரசியல்வாதிகளும் சரி, தற்போதுள்ளவர்களும் சரி நடைமுறைக்கு கொண்டுவராமையே காரணமாகவுள்ளது.
இறக்குமதியைப் பொறுத்தளவில் மிக அதிகமாக இறக்குமதி செய்யப்படுவது இடைநிலைப் பொருட்களேயாகும். இவை மூலப் பொருட்களாகவும், எரிபொருள் சார் இறக்குமதிகளாகவும் உள்ளன.
போக்குவரத்து, மின்சார உற்பத்தி ஆகியவற்றுக்கு எரிபொருள்சார் இறக்குமதியிலேயே வெகுவாகத் தங்கியுள்ளோம். எரிபொருள்சார் இறக்குமதியின் விலையும் அளவும் ஒட்டுமொத்த இறக்குமதி செலவீனத்தை அதிகரிப்பதில் மிக முக்கிய காரணியாகவுள்ளது. ஏனைய ஆண்டுகளுடன் ஒப்பிடுமிடத்து, கடந்த ஆண்டு எரிபொருள் இறக்குமதி 38%த்தால் அதிகரித்திருந்ததுடன், அதற்காக சுமார் 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிடவேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது. இது கடந்த வருட ஏற்றுமதி வருமானத்தில் 30%மாகும்.
இவற்றை விடவும், அத்தியவசியமற்ற சில பொருட்களின் இறக்குமதியும் கடந்த ஆண்டில் அதிகரித்திருந்தது. வாகன இறக்குமதி, தங்க இறக்குமதி அவற்றில் சிலவாகும். கடந்த வருடத்தில் வாகன இறக்குமதி 772 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருந்ததுடன், தங்க இறக்குமதி சுமார் 74% அதிகரித்து 650 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தொட்டிருந்தது. இந்த அதிகரிப்புகள் நாம் நமது தேவைகளுக்கு மீறியதான செலவுகளுக்கு முக்கியம் கொடுப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவதாகவே உள்ளது.
தற்போதைய நிலையில், இலங்கையின் வெளிநாட்டு வருமானமும் அதன் பொருளாதாரத் தளர்வு நிலைக்கு கைகொடுப்பதாக இல்லை. கடந்த 2017ஆம் ஆண்டில் வெளிநாட்டு வருமானமானது 7.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருந்ததுடன், மொத்தத் தேசிய உற்பத்தியில் இது 9%மாக மட்டுமேயிருந்தது. இந்த வெளிநாட்டு வருமானமானது இறக்குமதி செலவீனத்தில் வெறுமனே 39.3%த்தை மட்டுமே ஈடுசெய்வதாக உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றியுள்ள அசாதாரணநிலை, நமது அரசாங்கத்தின் உறுதியற்ற பொருளாதாரக் கொள்கைகள் என்பன நாட்டின் வெளிநாட்டு வருமானத்தை மிக அதிகளவில் பாதித்துள்ளது.
இதன்காரணமாக, அதிகரித்துச் செல்லும் இறக்குமதிச் செலவீனத்தை ஈடுசெய்ய, வெளிநாட்டு வருமானம் போதுமானதாகவில்லை என்பதால், வெளிநாட்டுக் கடன்களுக்கு கையேந்தும் நிலை உருவாகியுள்ளது.
இந்தநிலையில்தான், மேற்கூறிய அனைத்தையும் அடிப்படையாகக்கொண்டு, இலங்கை அரசு 2020ஆம் ஆண்டுக்குள் வர்த்தகப் பற்றாக்குறையை மொத்த தேசிய உற்பத்தியில் 3.5%மாக குறைக்க வேண்டும் என்கிற கொள்கையை வகுத்துள்ளது.
ஒருவேளை, இந்தக் கொள்கை வெற்றியளித்தாலும், இலங்கையின் செலவீனங்கள் வேறுவிதமாக அதிகரிக்கும் அபாயமுள்ளது. வாழ்க்கை செலவு அதிகரிப்பு, அரச மானிய செலவீன அதிகரிப்பு, அரச ஊழியர்களின் வேதன அதிகரிப்பு என ஏனைய மேலதிக செலவீனங்கள் வழியாக வர்த்தகப் பற்றாக்குறைக்கு சமமான செலவீன அதிகரிப்பொன்று ஏற்பட வாய்ப்புள்ளது.
இவை அனைத்தையுமே இலங்கை அரசு சரியாகக் கையாளவேண்டுமெனில், அதற்கு அவர்கள் நடைமுறைபடுத்தியுள்ள புதிய இறைவரிச் சட்டத்தை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனாலும், அரசின் நிலையற்ற கொள்கைத் தன்மையும் முரண்பாடுகளும் இந்த வரிச்சட்ட அமுலாக்கலின் வெற்றியைப் பாதிப்பதாகவே உள்ளது.
அதுமட்டுமல்லாது, மிகச்சிறந்த நாணயக் கொள்கை அமுலாக்கலின் மூலமாக, இறக்குமதி நுகர்வை எதிர்வரும் காலத்தில் கட்டுப்படுத்த வேண்டியதும் அவசியமாகும். இதன்மூலமாக ஏற்படுத்தக்கூடிய வர்த்தகச் சமநிலை தொடர்பில், அரசு அக்கறை செலுத்துவதாகவில்லை. இதன் காரணமாக, மக்களின் நலனே பெரிதும் பாதிப்படைவதாக இருக்கிறது.
தற்போதைய நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களால் வழங்கப்பட்ட பொருளாதார வாக்குறுதிகள் கனவாகவே மக்களுக்கு உள்ளன.
இந்தநிலை நீடிக்குமானால், இதனால் வரக்கூடிய பாதிப்புகளுக்கு அரசியல்வாதிகள் பொறுப்பேற்றாலும், அதை அனுபவிக்க போகிறவர்கள் சாமானிய இலங்கை மக்களாகவே இருப்பார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago