2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

சென்மதி நிலுவையின் பலமும் பலவீனங்களும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார நிலையிலும் தளம்பல் நிலை ஏற்படத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக, இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல், தேர்தல் குழப்ப நிலைமைகள் என்பன சுற்றுலாத்துறையையும், பொருளாதாரத்தின் பெரும் தூணாகவுள்ள சேவைத்துறையையும் வெகுவாகப் பாதித்துள்ளன. இதன்காரணமாக, இலங்கையின் சென்மதி நிலை பாரதூரமான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.  

சென்மதி நிலுவை 

எளிமையான வகையில் சென்மதி நிலுவையை விளக்குவதெனில், நாடொன்றின் ஏற்றுமதி-இறக்குமதி, மூலதன உட்பாய்ச்சல், வெளிப்பாய்ச்சல் ஆகியவற்றின் தேறிய பெறுமதியை கணக்கில்கொள்ளும்போது, நிலுவையானது சாதகமாக உள்ளதா அல்லது பாதகமாக உள்ளதா என்பதன் அடிப்படையில் சென்மதி நிலுவையானது தீர்மானிக்கப்படுகிறது.  

இலங்கையைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் மிகப்பெரும் வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) நிலவுகிறது. அதாவது, இலங்கையின் ஏற்றுமதி வருமானம், இறக்குமதி செலவீனங்களைக்கூட பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் இல்லையென்பதையே காட்டுகிறது. இதனால், இலங்கையின் அந்நியசெலவாணி ஒதுக்கீடு, தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டே செல்கிறது. இவ்வர்த்தகப் பற்றாக்குறை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சென்மதி நிலுவையில் தாக்கத்தைச் செலுத்துவதுடன், அதன் மிகப்பெரிய பலவீனமாகவும் எதிர்காலத்தில் அமையவுள்ளது.   

சென்மதி நிலுவையின் பலமாக, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் அனுப்பிவைக்கப்படும் வெளிநாட்டுப் பணமும் சுற்றுலாத்துறை மூலமாக கொண்டுவரப்படும் அந்நிய செலவாணியும் ஏற்றுமதி வருமானங்களுக்கு மேலதிகமாகப் பார்க்கப்படுகிறது. இதுவே, கடந்தகாலங்களில் சென்மதி நிலுவையில் பாரதூரமான பற்றாக்குறை நிலை ஏற்படுவதைத் தவிர்த்துவந்த பலமான காரணிகளாகும். ஆனாலும், சென்மதி நிலுவையின் பலமான காரணிகளாலும் தொடர்ச்சியாக பற்றாக்குறை நிலையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையே எதிர்காலத்தில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கப் போகிறது என பொருளியலாளர்கள் எதிர்வு கூறியிருக்கிறார்கள். குறிப்பாக, தற்போதைய நிலையில் சுற்றுலாத்துறை வருமானத்தில் இடம்பெற்றுள்ள தளர்ச்சி நிலை இந்த சென்மதி நிலுவைப் பிரச்சினையை அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது.  

எதிர்காலப் பிரச்சினைகள்

 இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficits) 2017-19 காலப்பகுதியில் சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலராக்கு அமைந்துள்ளது. சென்மதி நிலையின் பலமாக கருதப்படும் வெளிநாட்டு வருவாய், சுற்றுலாத்துறை வருமானம் என்பனவும் இதனை ஈடுகட்டும் வகையில் அமைந்திருக்கவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது .   

எனவே, இந்தப் பற்றாக்குறை ஜனாதிபதித் தேர்தல் முடிவுக்கு வந்தபிறகு, மிகப்பெரும் அளவில் விஸ்வரூபம் எடுக்கக் கூடியதாகவிருக்கும். தற்போதைய நிலையில், ஆட்சியுள்ள பிரதிநிதிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அதீத முக்கியத்துவம் வழங்குவதால், இந்தச் சென்மதி நிலுவைப் பிரச்சினையின் தாக்கத்தை யாரும் உணர்ந்துகொள்ளவில்லை. இதன் காரணமாக, இதன் தாக்கத்தை உணர்ந்து கொள்ளும்போது, மக்கள் மீதே இந்தச் சுமை நிச்சயம் விலை உயர்வின் வாயிலாக இறக்கி வைக்கப்படும் என்பதே பரிதாபமானது.   

எதிர்பார்ப்புகள்

இந்த இக்கட்டான சூழ்நிலையில், இலங்கை முடிந்தவரை வெளிநாட்டு வருமானத்தையும், சுற்றுலாத்துறையும் அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருப்பதுடன், உடனடியாக இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக சென்மதி நிலுவையின் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில், அதிகரித்துச் செல்லும் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த முடியாதநிலையில், இதனைச் சமாளிக்க அந்நிய செலவாணியை மீண்டும் கடனாகப் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலையை இலங்கை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும் அல்லது அபிவிருத்தித் திட்டங்களுக்கென உள்வரும் நிதியை இந்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்கப் பயன்படுத்த வேண்டியதாக இருக்கும் . இவை, அனைத்துமே இறுதி நுகர்வோரான சாமானிய மக்களையே பாதிப்படையச் செய்வதுடன், இலங்கையின் அபிவிருத்திப்போக்கிலும் தேக்கநிலையை உருவாக்கும்.  

சென்மதி நிலுவை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நிலைப்பாடு  

சென்மதி நிலுவையின் பற்றாக்குறை தொடர்பில் தனது கருத்துகளை வெளியிட்டுள்ள இலங்கை வங்கியும், இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தை அதிகமாக வலியுறுத்தி உள்ளது. இன்றைய நிலையில், அத்தியாவசிய பொருள்களைக்கூட இறக்குமதி செய்யும்நிலையில் இலங்கை உள்ளபோது இது எவ்வாறு சாத்தியமாக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.  

குறிப்பாக, இலங்கையின் முதல் காலாண்டுப் பகுதியில் வெளிநாட்டு வருமான உட்பாய்ச்சலானது மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளின் வாயிலாகவும், இலங்கையில் நிகழ்ந்த பிரச்சினைகளாலும் குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், இந்த நிலை மேலும் சில மாதங்களுக்குத் தொடரக்கூடும் எனவும் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏற்றுமதியில் எதிர்பாராத அதிகரிப்பு இருந்தபோதிலும், அதற்கும் மேலான இறக்குமதிச் செலவீனங்கள் இருந்தமையால் அதன் தாக்கத்தினை இலங்கையின் வெளிநாட்டு வருவாயில் உணர முடியாது போயிருந்ததாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.   

சுற்றுலாத்துறையிலும் கடந்த சில மாதங்களில் தற்காலிக தேக்கநிலை ஏற்பட்டதன் விளைவும், சென்மதி நிலுவையின் பற்றாக்குறையில் பிரதிபலிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி, எதிர்வரும் காலாண்டில் சுற்றுலாத்துறை மூலமான வருமானம் மேலும் அதிகரித்து அதன் பங்கை நிவர்த்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், கடந்தகாலத்துடன் ஒப்பிடுமிடத்து சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஒரு நிச்சயமற்றதன்மையை உருவாகியுள்ளமை இலங்கையின் பொருளாதார சூழ்நிலைகளுக்குப் பாதகமானதொன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை சென்மதி நிலுவைக்கு சுற்றுலாத்துறைப் பங்களிப்பாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.   

சமனிலையற்ற சென்மதி நிலுவை

இலங்கை வரலாற்றில் சென்மதி நிலுவையில் பாரிய இடைவெளியை கொண்ட ஆண்டுகளாக கடந்த மூன்று ஆண்டுகளைக் குறிப்பிடலாம். இதற்கு காரணம், 2015ல் 5.6% மாகவும் 2016ல் 2.2%மாகவும் ஏற்றுமதி வருமானம் குறைவடைந்ததுடன், 2016ல் ஏற்றுமதியானது மொத்த இறக்குமதியில் வெறும் 55%த்தையே பூர்த்திசெய்யும் வகையில் பங்களித்திருந்தது. இதனடிப்படையில் சென்மதி நிலுவை பற்றாக்குறை 2014ல் $8.3 பில்லியனாகவும், 2015ல் $8.4 பில்லியனாகவும், 2016ல் $9.1 பில்லியனாகவும் அதிகரித்திருந்தது. இது மட்டுமல்லாது, இவ்வாண்டில் இந்தப் பற்றக்குறையானது குறைந்தது $11 பில்லியன்களை தொடக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  

இதற்குப் பிரதான காரணமாக இறக்குமதியில் ஏற்பட்டுள்ள அபரீதமான வளர்ச்சி பார்க்கப்படுகிறது. உடனடி பொருள்கள், எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட அதிகரிப்பே இறக்குமதிப் பொருள்களில் அதிக பங்களிப்பைக் கொண்டு இருக்கிறது.  

சென்மதி நிலுவையின் எதிர்காலம் ?

மேலான தகவல்களின் அடிப்படையில், சென்மதி நிலுவையின் பற்றாக்குறை ஒரு அபாயநிலையை நோக்கி நகர்ந்து செல்வதையே காட்டி நிற்கிறது. இதனால் நமக்கு என்னவகையான பாதிப்புக்கள் வரக்கூடும் எனச் சாமானியர்கள் நினைக்கலாம். சென்மதி நிலுவையின் பற்றாக்குறை அதிகரிப்பு நாணய பெறுமதியில் மேலும் வீழ்ச்சி நிலையை அதிகரிக்கச் செய்யும், வங்கிகளின் கடன் விகிதங்களை மறைமுகமாக அதிகரிக்கச் செய்வதுடன், வருமான வட்டி விகிதங்களைக் குறைவடையச் செய்யும், முதலீட்டாளர்களுக்கு அந்நிய செலவாணி பற்றாக்குறை ஒரு பாதுகாப்பற்றதன்மையை ஏற்படுத்துவதால் அவர்கள் மூலமான வருவாயும் குறைவடையும். இவை அனைத்துமே, பொருள்கள்,சேவைகளின் விலையிலும் தாக்கத்தைச் செலுத்துவதாகவே இருக்கும்.  

எனவே, இதற்கான சரியான பொறிமுறைகளையும் , திட்டமுறைகளையும் கொண்டுவர வேண்டியது அவசியமாகிறது. இல்லாவிடின், எதிர்பாராத பொருளாதார நெருக்குதலுக்குள் சிக்கவேண்டி ஏற்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X