Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 13 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொகுதிக்கடன்களின் வரைவிலக்கணம்
முதலீட்டாளருக்கு, ஏதாவது காலத்துக்கொருமுறை வட்டியைச் செலுத்துவதற்கு அல்லது முதிர்வுக்காலத்தின் முடிவில் அல்லது வேறு குறிப்பிட்ட காலத்தில் முகப்பெறுமதியைச் செலுத்துவதற்கான உத்தரவாதத்துடன் கம்பனியொன்றால் வழங்கப்படும் நீண்டகாலக் கடன் பத்திரமானது கம்பனித்துறைத் தொகுதிக்கடன் எனக் கருதப்படும்.
இதற்கமைய கம்பனித்துறைத் தொகுதிக்கடன் தொடர்பான மூன்று பிரதான பண்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன.
முகப் பெறுமதி (Face Value)
முகப்பெறுமதி எனப்படும் பெயரளவுப் பெறுமதியானது (Nominal value) தொகுதிக்கடன் ஒன்றுக்காகக் கம்பனியால் முதிர்வுக்காலத்தின் இறுதியில் செலுத்துவதற்காக உத்தரவாதமளிக்கப்பட்ட நிதியாகும்.
முகப்பெறுமதியின் அளவானது தொகுதிக்கடன் வழங்கப்படும் கம்பனியால் தொகுதிக்கடன் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் நிச்சயிக்கப்படுகின்றது. இதுவரைக்கும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட தொகுதிக்கடன்கள் ரூ. 100 அல்லது ரூ. 1,000 பெயரளவுப் பெறுமதியுடன் வழங்கப்பட்டுள்ளது.
வட்டி வீதம்
தொகுதிக்கடன் ஒன்றின் வட்டி தொடர்பாக உள்ள நிபந்தனைகளுக்கேற்ப, தொகுதிக்கடன் வகைகள் நான்காக வகுக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, தொகுதிக்கடன்களுக்கு வட்டி செலுத்தப்படுமா இல்லையா என்பதற்கமைய வட்டியுடனான தொகுதிக்கடன் மற்றும் வட்டியற்ற தொகுதிக்கடன் என இருவகைத் தொகுதிக்கடன்களை அறிந்துகொள்ளலாம்.
வட்டியுடனான தொகுதிக்கடன்கள்
வட்டியுடனான தொகுதிக்கடன் என்பது நிச்சயிக்கப்பட்ட காலத்துக்கொருமுறை வட்டிப்பணத்தைச் செலுத்தும் தொகுதிக்கடன்களாகும். தற்போது வழங்கப்படும் தொகுதிக்கடன்களில் மிகவும் பிரபல்யமான தொகுதிக்கடன் வகை இதுவாகும்.
வட்டியற்ற தொகுதிக்கடன்கள்
தொகுதிக்கடன் ஒன்றுக்குக் காலத்துக்கு ஒருமுறை வட்டிப்பணம் செலுத்தப்படாத தொகுதிக்கடன் வட்டியற்ற தொகுதிக்கடன் எனப்படும். இவ்வாறு வட்டி செலுத்தப்படாத காரணத்தால் இத்தகைய தொகுதிக்கடனானது கம்பனியால் முகப்பெறுமதிக்கும் பார்க்கக் குறைவான விலைக்கே வழங்கப்படுகின்றது.
வட்டியுடனான தொகுதிக்கடனைப் போன்று வட்டியற்ற தொகுதிக்கடனுக்கும் முகப்பெறுமதியானது முதிர்வுக்காலத்தின் இறுதியில் செலுத்துவதற்கு கம்பனியானது கடமைப்பட்டுள்ளது. வட்டியற்ற தொகுதிக்கடன் ஒன்றைக் கொள்வனவு செய்யும் நபரொருவரின் இலாபமானது முதிர்வுக்காலத்தின் இறுதியில் கிடைக்கும் பெயரளவுப் பெறுமதிக்கும் அவரது கொள்விலைக்கும் இடையில் காணப்படும் வித்தியாசமாகும்.
வட்டியுடனான தொகுதிக்கடன்களின் வட்டிவீதமானது நிலையானதாகவோ அல்லது மாற்றமடையக்கூடியதாகவோ காணப்படலாம். இதற்கமைய நிலையான வட்டித்தொகுதிக்கடன் மற்றும் மாற்றமடையும் வட்டித் தொகுதிக்கடன் என இரண்டு விதமான தொகுதிக்கடன்களை அறிந்து கொள்ளலாம்.
நிலையான வட்டித் தொகுதிக்கடன்
நிலையான வட்டித் தொகுதிக்கடனின் வட்டி வீதமானது, இத்தொகுதிக்கடனின் முழுமையான முதிர்வுக் காலத்திலும் மாற்றமடையாது காணப்படும். தற்போது பங்குச் சந்தையில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள 59 தொகுதிக்கடன்களில் 36 நிலையான வட்டித்தொகுதிக்கடன்களாகும்.
மாற்றமடையும் அல்லது மிதக்கும் வட்டி வீதத் தொகுதிக்கடன்கள்
மாற்றமடையும் மிதக்கும் வட்டித் தொகுதிக்கடனுக்கு வட்டி வீதமானது முதிர்வுக் காலத்துக்குள் ஒரே மட்டத்தில் காணப்படாது.வழங்கப்பட்ட கம்பனியால் இத்தகைய தொகுதிக்கடனுக்கான வட்டி வீதமானது பொருளாதாரத்தின் மற்றுமொரு வட்டி வீதத்துடன் தொடர்புபடுத்தி நிச்சயிக்கப்படும்.
இந்த மற்றுமொரு வட்டி வீதமானது பிரமாண வட்டி வீதம் (Bechmark Interest Rate) என அழைக்கப்படும். பிரமாண வட்டி வீதம், மேல் உயரும்போது தொகுதிக்கடனின் வட்டி வீதம் மேலெழுந்தும் பிரமாண வட்டி வீதம் கீழ் இறங்கும்போது தொகுதிக்கடனின் வட்டி வீதம் வீழ்ச்சியடைந்தும் காணப்படும்.
பிரமாண வட்டி வீதமாக இலங்கையில் மிகவும் பிரபல்யமாகப் பயன்படுத்தப்படுவது திறைசேரி உண்டியல்களின் வட்டி வீதமாகும். பொதுவாக, வழங்கப்படும் கம்பனியால் மாற்றமடையும் வட்டி வீதத்துக்க ஆகக்குறைந்த எல்லை (Floor) மற்றும் ஆகக்கூடிய எல்லையும் (Cap) காணப்படும்.
இத்தகைய தருணத்தில் தொகுதிக்கடனின் வட்டி வீதமானது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆகக்குறைந்த எல்லைக்குக் குறைவாக வீழ்ச்சியடையாது. முதலீட்டாளரது பார்வையில் இந்த ஆகக்குறைந்த எல்லையானது எதிர்காலத்தில் பிரமாண வட்டிவீதம் வீழ்ச்சியடைவதால் ஏற்படும் தொகுதிக்கடனின் வட்டி வீத வீழ்ச்சி நட்ட அச்சத்தை வரையரைக்குட்படுத்துவதால் முக்கியத்துவம் பெறுகின்றது.
அதேபோன்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொகுதிக்கடனின் வட்டிவீதமானது ஆகக்கூடிய எல்லைக்கும் மேலாகச் செல்லாது. இதன்மூலம் தொகுதிக்கடனை வழங்கும் கம்பனிக்கு எதிர்காலத்தில் பிரமாண வட்டி வீதம் உயர்வடைவதன் நிமித்தம் தொகுதிக்கடன் உரிமையாளர்களுக்கு உயர்ந்த வட்டி வீதத்தைச் செலுத்த வேண்டிய நட்ட அச்சத்தை வரையறைக்குட்படுத்துவதால் உதவியாயிருக்கும்.
தொகுதிக்கடன்களின் வகைகள்
தொகுதிக்கடன்களின் வட்டி வீதத்துக்கேற்ப வட்டியுடனான, வட்டியற்ற, நிலையான வட்டியுடனான மற்றும் மாற்றமடையும் வட்டியுடனான தொகுதிக்கடன்கள் என நான்கு வகைகளை நாம் பார்த்தோம்.
இதன் பின்னர் நாம் தொகுதிக்கடன்களின் பண்பான பிணைசார் (Security), உத்தரவாதம் (Guarantee), தாழ்நிலை (Subordination), அழைக்கத்தகு (Call ability), மாற்றத்தகு (Convertibility) மற்றும் விற்பனை செய்யத்தகு (Putt ability) ஆகிய பண்புகளின் அடிப்படையில் தொகுதிக்கடன்களின் வகைகளை அறிந்து கொள்வோம்.
1.பிணைசார் தொகுதிக்கடன்கள்
தொகுதிக்கடன் வழங்கும் கம்பனியால் தொகுதிக்கடன் உரிமையாளர்களுக்குச் செலுத்துவதற்குப் பொறுப்பேற்ற வட்டி மற்றும் முகப் பெறுமதிக்காக கம்பனியின் ஏதாவது நிலையான வெளிப்படையான ஆதனத்தைப் பிணையாக வைத்து வழங்கப்படும் தொகுதிக் கடனானது பிணைசார் தொகுதிக்கடன் எனப்படும். கம்பனியால் பொறுப்பேற்கப்பட்ட பொறுப்புகளைச் செலுத்தத்தவறும் பட்சத்தில், பிணை வைக்கப்பட்டுள்ள சொத்துகளை விற்பனை செய்து, கிடைக்கும் பணத்தின் மூலம், இந்தப் பொறுப்புகளைத் தீர்ப்பதற்கான உரிமை தொகுதிக்கடன் உரிமையாளர்களுக்குக் கிடைக்கின்றது.
இது தொகுதிக்கடன் உரிமையாளர்களின் பார்வையில் மிகவும் சிறந்த பண்பாகும். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்த ஒரேயொரு பிணைசார் தொகுதிக்கடன் வழங்கலானது ஓவர்சீஸ் ரியலிட்டி கம்பனியின் தொகுதிக்கடன்களாகும். அவை முதிர்வடைந்ததன் காரணமாகச் சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. தற்போது சந்தையில் பிணைசார் தொகுதிக்கடன் ஒன்றும் பட்டியல்படுத்தப்படவில்லை.
2. பிணைசாரா தொகுதிக்கடன்கள் (Unsecured Debentures)
தொகுதிக்கடன் வழங்கும் கம்பனியால் செலுத்துவதற்குப் பொறுப்பேற்றுள்ள பொறுப்புக்காகக் கம்பனியின் நிலையான சொத்துகள் பிணையாக வைக்கப்படாது வழங்கப்படும் தொகுதிக்கடன்கள் எனப்படும்.
இத்தகைய தொகுதிக்கடன்களில் முதலீடு செய்யும்போது வழங்கப்படும் கம்பனியின் சாதாரண கடன்களைச் செலுத்தும் தகைமை பற்றி முதலீட்டாளர்கள் நம்பிக்கையை வைத்தல் வேண்டும். தற்போது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள தொகுதிக்கடன்கள் 59 இல் இரண்டைத்தவிர ஏனைய அனைத்தும் பிணைசாரா தொகுதிக்கடன்களாகும்.
பிணைசார் தொகுதிக்கடன்களில் கொடுப்பனவைச் செலுத்தத்தவறும் நட்ட அச்சமானது பிணைசாரா தொகுதிக்கடன்களிலும் பார்க்கக் குறைவானதால் பிணைசார் தொகுதிக்கடன்களைப் பிணைசாரா தொகுதிக் கடன்களிலும் பார்க்க குறைந்த வட்டி வீதத்துடன் விற்பனை செய்வதற்கு கம்பனிக்கு இயலும்.
3. உத்தரவாதமளிக்கப்பட்ட தொகுதிக்கடன்கள் (Guaranteed Debentures)
தொகுதிக்கடன் வழங்கும் கம்பனியால் செலுத்துவதற்கு பொறுப்பேற்ற வட்டி மற்றும் முகப் பெறுமதியைச் செலுத்துவதற்கு தவறும்பட்சத்தில் இப்பொறுப்பை நிறைவேற்றுவதாக மூன்றாம் பகுதியினரால் உத்தரவாதமளிக்கப்படும் தொகுதிக்கடன்கள் உத்தரவாதமளிக்கப்பட்ட தொகுதிக்கடன்கள் எனப்படும்.
இந்த உத்தரவாதமானது பெருமளவான நேரங்களில் நம்பிக்கையான நிதி நிறுவனத்தால் வழங்கப்படும். வட்டிக்கு அல்லது முகப்பெறுமதிக்கு அல்லது இவ்விரண்டுக்கும் உத்தரவாதமளிக்கப்படலாம்.
வழங்கிய கம்பனியானது கொடுப்பனவைச் செலுத்தத் தவறும்பட்சத்தில் இக்கொடுப்பனவைச் செலுத்துவதற்கு உத்தரவாதமளித்த நிறுவனம் கட்டுப்பட்டுள்ளதால் உத்தரவாதமளிக்கப்பட்ட தொகுதிக் கடன்களில் தவறும் நட்ட அச்சம் குறைந்து காணப்படுகின்றது. இது முதலீட்டாளரது பார்வையில் சிறந்த பண்பாகும்.
-இலங்கையின் நிதிச்சந்தை
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago