2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

SLT குழுமத்தின் செயற்படு இலாபம் 55%ஆல் அதிகரிப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 16 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா ரெலிகொம் பிஎல்சி (SLT) குழும நிறுவனம், 2020 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான அதன் நிதித் தகவல்களை வெளியிட்டுள்ளது. நாட்டில் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக ஏற்பட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், அதன் செயற்படு இலாபத்தில் ரூபா 6.9 பில்லியன் அதாவது 55% வளர்ச்சியை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

2020 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில், குழுமத்தின் வருமானம் ரூபா 44.1 பில்லியனாகக் காணப்பட்டது. இது, வருடாந்த அடிப்படையில் 3.6% மிதமான வளர்ச்சியைக் காட்டுகிறது. இதற்கு பிரதான காரணம், SLT மற்றும் அதன் இணை நிறுவனமான மொபிடெல் பிறைவேட் லிமிட்டெட் என்பன இணைந்து, தொற்று நோய்க் காலப்பகுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு உதவி புரியும் முகமாக, பல்வேறு இலவச பெக்கேஜ்கள், இலவச தரவுகள் போன்றவற்றை வழங்கியமையாகும்.

மேலும், முதலீடுகள் மூலம் கிடைக்கப்பெற வேண்டிய வருமானம், தொற்று நோய்க் காலப்பகுதியினால் பின்னடைந்ததும் மொத்த வருமானத்தைப் பாதிக்கக் காரணமாக அமைந்திருந்தது. எவ்வாறாயினும், புரோட்பாண்ட் பயன்பாட்டில் ஏற்பட்ட அதிகரிப்பு, IPTV மற்றும் Career Business services ஆகிய பிரிவுகளில் தனி நபர் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் வளர்ச்சி காணப்பட்டது.

இவ்வாறு குழுமத்தின் வருமானம் அதிகரிக்கப் பிரதான காரணம், பல்வேறு கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த காலப்பகுதிகளில், வீடுகளில் இருந்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மக்கள் இணையத் தளத்தைப் பயன்படுத்தியமை ஆகும். 

கடுமையான செலவினக் கட்டுப்பாடுகள் மூலம் தேய்மானத்துக்கு முந்திய செலவினங்கள் பெரிதும் குறைக்கப்பட்டதோடு, அது வருடாந்த அடிப்படையில் 7% அதிகரிப்பைக் காண்பித்துள்ளது. அத்துடன், EBITDA  சதவீதமானது, 40.5% வரை வளர்ச்சியடைந்துள்ளது. அத்துடன், இவற்றை வாடிக்கையாளர்களின் தேவைகளையும் புதிய வளர்ச்சிகளையும் பூர்த்தி செய்வதற்காக இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்நியச் செலாவனிகளில் ஏற்படும் நட்டங்கள் ரூபாய் 0.9 பில்லியனாகக் காணப்பட்டது. இது, கடந்த வருடத்தில் ரூபாய் 15 மில்லியனாகக் காணப்பட்டது. குழுமத்தின் ஏனைய வருமானம் ரூபாய் 0.5 பில்லியன் வரை வளர்ச்சியடைந்து, வருடாந்த அடிப்படையில் 85% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

குழுமத்தின் வரிக்கு முந்திய இலாபம் ரூபாய் 5.7 பில்லியனாகக் காணப்பட்டது. இது, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 22% வளர்ச்சியைக் காண்பித்துள்ளது. அத்துடன், வரிக்குப் பிந்திய இலாபம் ரூபாய் 4.6 பில்லியனாகக் காணப்பட்டதோடு, இது வருடாந்த அடிப்படையில் 31% வளர்ச்சியாகும். இந்த இலாபங்களின் வளர்ச்சிக்கு பிரதான காரணம், செயற்திறன் மிக்க செலவின முகாமைத்துவ முறைகளாகும். 2020 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக் காலப்பகுதியில் SLT ரூபாய் 8.1 பில்லியனை நேரடி, மறைமுக வரிகளாகச் செலுத்தியது. இது அரசாங்கத்துக்குக்  கிடைத்த சிறந்ததொரு வருமானமாகும்.

குழுமத் தலைவர் ரொஹான் பெர்ணான்டோ, கருத்து வெளியிடுகையில், “கொவிட்-19 காரணமாக, புதிய வகையிலான பல்வேறு வர்த்தக சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிட்டாலும், தலைமைத்துவம் பல்வேறு சவால்களை, ஒரே குடும்பமாக இணைந்து செயற்பட்டு சமாளித்தமைக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். முழு நாட்டுக்கும் எந்தவிதமான தடங்கலற்ற சேவைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதோடு, அதற்கு மேலதிகமாக, சலுகை பெக்கெஜ்கள், இலவச டேட்டா வழங்கல்கள் என்பனவற்றையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

குழும பிரதம நிறைவேற்று அதிகாரி  லலித் செனவிரத்ன தெரிவிக்கையில், “சவால்கள் நிறைந்த இந்தச் சூழ்நிலையில், எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதும் நிதி திரவத்தன்மையைப் பேணுவதும் சவால் மிக்கதாகவே இருந்தது. இவற்றில் எமது குழும நிறுவனம், இணை நிறுவனங்கள் ஆகிய அனைத்தையும் ஒன்றாகக் கருதி செயற்பட்டோம். இதன் ஓர் அம்சமாக SLT Human Capital Solutions (Pvt) Ltd (HCS) இன் ஊழியர்களை SLT க்குள் நிரந்தர ஊழியர்களாக இணைத்துக் கொண்டமை ஊழியர்கள், முகாமைத்துவத்துக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதாக அமையும்” என்று கூறினார்.

குழும நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கித்தி பெரேரா கூறுகையில், “SLT பல்வேறு குழும சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, ‘ SMILE WITHIN ‘ என்ற தொனிபொருளின் கீழ் நடத்தப்பட்ட வேலைத் திட்டத்தின் மூலம், எமது துணை நிறுவனமான மொபிடெலுடன் இணைந்து ஒரு மில்லியன் முகக் கவசங்களை இலவசமாக வழங்கியதோடு, ‘AL Kuppiya’, ‘ e-Siphala ‘ ஆகிய ஒன்லைன் ஊடான கல்வித் திட்டங்களை மாணவர்களுக்கு அறிமுகப்டுத்தினோம். மேலும், லங்கா சதொசவுடன் இணைந்து ஒன்லைன் வர்த்தகத் தளம் ஒன்றை உருவாக்கியதோடு, EPIC நிறுவனத்துடன் இணைந்து ‘ Helaviru ‘ பொருளாதார நிலையம் என்ற ஒன்லைன் தளத்தை உருவாக்கி, விவசாயம், கால்நடை வள உற்பத்திகளுக்கான சந்தை ஒன்றை உருவாக்கிக் கொடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

பிரதம செயற்பாட்டு அதிகாரி பிரியந்த பெர்னாண்டஸ் கூறுகையில், “கொவிட்-19இனால் ஏற்பட்ட சவால்கள் மூலம், எமது பைபர் விஸ்தரிப்பு வேலைத் திட்டம் சற்று பின்னடைவைக் கண்டது. இதனால் FTTH (Fiber to the Home) (வீடு தோறும் பைபர்) இணைப்புகளாவன, தேசிய Fiberization வேலைத் திட்டம் ஊடாக முன்னெடுக்கப்பட இருந்தது. SLT அண்மையில் இலங்கை துறைமுக அதிகார சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் Data, Voice தீர்வுகளை Fiber  தொழில்நுட்பம் மூலம் பெற்றுக்கொடுக்க இருக்கிறது. இதற்கு மேலதிகமாக, SLT Microsoft Azure stack hub என்ற புதிய தொழில்நுட்ப தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, SLT Akaza என்ற கிளவுட் தொழில்நுட்பத்தின் மற்றுமோர் இணைப்பாகக் காணப்படுகிறது” என்று கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X