2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

CRIB தரப்படுத்தலும் அதன் தாக்கமும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரத்தில், இலங்கை கொடுகடன் பணியகத்தின் தொழிற்பாடுகள் தொடர்பிலும், அதனால் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகின்ற கடன் அறிக்கையான, CRIB அறிக்கை தொடர்பிலும் பார்த்திருந்தோம்.

இம்முறை, தனிநபரொருவர் தனது கடன்தரப்படுத்தல் அறிக்கையான CRIB அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும்போது, அதை எவ்வாறு புரிந்துகொள்வது என்பது தொடர்பிலும், குறித்த அறிக்கையின் விளைவாக ஏற்படக்கூடிய தாக்கம் பற்றியும் அதை நிவர்த்திக்க எடுக்கக்கூடிய முயற்சிகள் தொடர்பிலும் பார்க்கலாம்.  

இலங்கையின் கொடுகடன் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றங்களின் பிரகாரம், எந்தவொரு தனிநபருமே தனது CRIB கடன் அறிக்கையைப் பெற்று, தனது கடன்நிலையை மீளாய்வு செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, எந்தவொரு தனிநபரோ, நிறுவனமோ, தனக்கான புதிய கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ள, நிதி நிறுவனங்களை நாடுவதற்கு முன்ன​ரே, தமது கடன்நிலை தொடர்பில் அறிந்துகொள்ள முடிவதுடன், தமது கடன் மீளச்செலுத்தல் இயலுமைக்கு அமைவாக, தமது கடனின் மீளச்செலுத்தல் காலம், அளவை தீர்மானிக்க முடிகிறது.  

எனவே, உங்களது தற்போதைய, எதிர்காலக் கடன்பெறுதல், கடன்தொடர்பாக, நிதி நிறுவனங்களுடன் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு தீர்வாக, இந்த CRIB கடனறிக்கை உள்ளது. இலங்கை கொடுகடன் திணைக்களத்தில் விண்ணப்பித்து நீங்கள் பெற்றுக்கொள்ளும் இந்தக் கடன் அறிக்கையில், என்னென்ன விடயங்கள் இருக்கின்றன என்பதையும் அவற்றை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டுமென்பதும் அவசியமாகிறது.

எனவே, இலங்கை கொடுகடன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி CRIB அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, குறித்த அறிக்கையிலுள்ள விடயதானங்கள் எவையென்பதைப் பார்க்கலாம்.  
  
01. கடன் அறிக்கையின் தலைப்பு 

மேற்காட்டிய படத்திலுள்ளவாறு, அறிக்கையின் இடதுபக்க மூலையின் மேற்பக்கத்தில், கடன் அறிக்கை பெறுபவரின் பயனர் பெயர் (Username), தனித்துவமான முறையில் வழங்கப்பட்ட இலக்கமொன்றையும் காணலாம். இவை, குறித்த அறிக்கையைப் பெறுவதற்காக, முதலில் பதிவுசெய்யும்போது, உங்களுக்காகவென ஒதுக்கப்படுபவையாகும். மீளவும் ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் இதைப் பெற விரும்பின், இணைய வழியாக உங்கள் அறிக்கையை பார்வையிட விரும்பின் குறித்த தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.  

02. ஆய்வுத் தகவல் 

கடனறிக்கையைப் பெற்றுக்கொள்ளுவதற்காக நீங்கள் விண்ணப்பித்ததன் பின்பு, எவ்வகையான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு குறித்த கடன் அறிக்கையானது தயாரிக்கப்பட்டது என்பதை உள்ளடக்கியதாக இது அமைந்திருக்கும்.

குறிப்பாக, நீங்கள் கடனைப் பெற்றுக்கொண்ட வங்கிகள், அவற்றின் அமைவிடம், நீங்கள் அவற்றுக்கு வழங்கியுள்ள தகவல்கள், அவற்றிலுள்ள வேறுபாடுகள், நிதி வசதியை (கடன், கடனட்டை) பெற நீங்கள் வழங்கியிருந்த தனிப்பட்ட தகவல்களான தேசிய அடையாள அட்டை இலக்கம், பாலினம், பிறந்த திகதி போன்ற பல்வேறு தகவல்களை கொண்டதாக இதுவிருக்கும்.   

03. அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட பெயர்கள்

நீங்கள் நிதி வசதியை (கடன், கடனட்டை) பெற்றுக்கொள்ள, வெவ்வேறு நிறுவனங்களில் உங்களது பெயரை, வெவ்வேறு வகையில் வழங்கியிருப்பின், அவை தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்த அறிக்கை கொண்டிருக்கும்.

குறிப்பாக, சில நிறுவனத்தில் முழுப்பெயரையும் சில இடங்களில் சுருக்கப் பெயரையும் உபயோகப்படுத்தியிருப்பின், தேசிய அடையாள அட்டை எண்ணை அடிப்படையாகக் கொண்டு, இவை அனைத்தையுமே கடனறிக்கையில் கணினியானது வகைப்படுத்தியிருக்கும்.  

04. விலாசம், தொழில், உறவுத் தகவல்கள்   

நிதி நிறுவனங்களுக்கு, நீங்கள் வழங்கிய புதிய இறுதியான மூன்று விலாசங்கள் அறிக்கையிடப்படுவதுடன், ஒவ்வொரு நிதிநிறுவனத்திலும் உங்களுக்கான வசதியைப் பெற்றுக்கொள்ளும்போது, நீங்கள் வழங்கியிருந்த உங்கள் தொழில் தொடர்பான தகவல்களும் அறிக்கையிடப்பட்டிருக்கும். இவற்றுக்கு மேலாக, தனிநபராக மட்டுமல்லாது நீங்கள் ஏதேனும் வணிகத்தின் உரிமையாளராக, பங்குதாரராக இருப்பின் அது தொடர்பிலான விடயதானங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கும்.  

05. உத்தரவாதம் வழங்கிய மற்றும் தனிநபர் நிதிப்பொறுப்புகளின் சுருக்கம் 

இந்தச் சுருக்க அறிக்கையில், நீங்கள் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நிதிவசதிகள் சுருக்கமாகப் பட்டியலிடப்பட்டிருப்பதுடன், நீங்கள் வேறொருவர், வேறொரு நிறுவனம் நிதிவசதியை பெற்றுக்கொள்ள உத்தரவாத கையெழுத்து வழங்கியிருப்பீர்களானால், அதுதொடர்பான தகவல்களும் வகைப்படுத்தப்பட்டிருக்கும்.

இந்த அட்டவணையில் நீங்கள் இதற்கு முதல் செலுத்தி முடித்த, நீங்கள் உத்தரவாதம் வழங்கிச் செலுத்தி முடிக்கப்பட்ட நிதிவசதிகள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருக்காது.  

06. பெற்றுக்கொண்ட நிதிவசதியின் சுருக்கம் 

நீங்கள் இதுவரை பெற்றுக்கொண்டுள்ள நிதி வசதிகள் எத்தனை என்பதனையும் அவற்றில் இவற்​றை நீங்கள் பொருத்தமான முறையில் பராமரித்து வருகிறீர்கள் (குறித்த திகதிக்குள் மீளச்செலுத்தும் கடன்) என்பதையும், அவற்றில் எத்தனை நிலுவையாக உள்ளன என்பது போன்ற தகவல்களையும் உள்ளடக்கியதாக இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கும்.  

07. வழங்கப்பட்டு, மறுக்கப்பட்ட காசோலை விவரம்

குறித்தத் தலைப்பின்கீழ் இதுவரை உங்களால் வழங்கப்பட்டு, வங்கியில் பணமில்லாத காரணத்தால் மறுக்கப்பட்ட காசோலைகள் தொடர்பான சகல விவரங்களையும் உள்ளடக்கியதான அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் இந்தத் தலைப்பின் கீழுள்ள விவரமானது, வணிகச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள்,  நிறுவனங்களின் பெயரில் கடன் அறிக்கையைப் பெறுபவர்களுக்கே உபயோகமாக அமையும்.  

08. செலுத்தி முடிக்கப்பட்ட நிதிவசதிகள் தொடர்பான விவரங்கள் 

கடந்த ஐந்து வருடத்தில் நீங்கள் பெற்று மீளச்செலுத்திய நிதி வசதிகள் தொடர்பிலும், நீங்கள் உத்தரவாதம் அளித்து மீளச்செலுத்திய நிதிவசதிகள் தொடர்பிலானதுமான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். 

09. கடந்த ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் 

கடந்த ஆறு மாதங்களில் உங்கள் கடன்நிலை தொடர்பில் ஏதேனும் தனிநபர்கள் அறிய முயற்சித்திருப்பின், அவர்களுக்கு நீங்கள் அனுமதியளித்திருப்பின், நிதி நிறுவனங்கள் விசாரணை செய்திருப்பின், அது தொடர்பான மொத்தத் தகவல்களும் மேற்கூறிய தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருக்கும்.

உதாரணமாக, நீங்கள் ஏதேனும் நிதிநிறுவனத்தை அறிக்கைப்பெறும் தினத்துக்கு முந்தைய ஆறு மாதங்களுக்குள் நிதி வசதியொன்றை பெற்றுக்கொள்ளவோ, கடனட்டை ஒன்றைப்  பெற்றுக்கொள்ளவோ அணுகியிருப்பின், அவர்கள் உங்களது நிதியறிக்கையை இலங்கை கடன்கொடுகடன் பணியகத்தில் கோரியிருப்பார்கள். எனவே, அது தொடர்பான விவரம் இந்தத் தலைப்பின் கீழ் உள்ளடக்கப்பட்டிருக்கும்.  

10. கடந்த 24 மாதங்களில் நீங்கள் பெற்ற நிதி வசதிக்கான மீள்செலுத்தல் விவரம் 

குறித்த தலைப்பின்கீழ், நீங்கள் இதுவரை பெற்றுள்ள நிதி வசதி (கடன், கடன்னட்டை) தொடர்பிலும், அவற்றை நீங்கள் கடந்த 24 மாதங்களில் எவ்வாறு செலுத்தி வருகிறீர்கள் என்பது தொடர்பிலான விவரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

கடன் அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் எந்தவொரு தனிநபருக்கும் சரி, நிறுவனங்களுக்கும் சரி, தனிநபரின் அறிக்கையைப் பெறும் நிதி நிறுவனங்களுக்கும் சரி, இந்தத் தலைப்பின் கீழுள்ள அட்டவணை மிக முக்கியமானதாக அமைகின்றது.

காரணம், குறித்தத் தலைப்பின் கீழுள்ள அட்டவணையானது,  தனிநபரின் கடன் மீளச்செலுத்தல் தன்மை, இயலுமை, மீளச்செலுத்தலிலுள்ள ஒழுக்கம் ஆகியவற்​றை  வெளிப்படுத்துவதாக அமைவதுடன், புதிதாக, கடனை வழங்கும்​போது மீளச்செலுத்தல் தன்மை எவ்வாறிருக்கும் என்ப​தை அறியவும் இந்த அட்டவணையானது பெரிதும் உதவுவதாக அமைகிறது.  

உதாரணத்துக்கு, தனிநபரொருவர் குறித்த நிதிநிறுவனமொன்றில் ஐந்து வருடகால அடிப்படையில் கடன் வசதியை பெற்றுக்கொண்டுள்ளார் என வைத்துக்கொள்ளுவோம். இதன்போது, இந்த அட்டவணையானது, கடந்த 24 மாதங்களில் குறித்த கடன் தொடர்பான அனைத்து தகவல்களையும் கொண்டதாக அமைந்திருக்கும். இதில், ஒவ்வொரு மாதமும் கடனுக்கான மீள்செலுத்துகை தினத்தில் கடனை மீள்செலுத்தி வந்திருப்பின், இளம் பச்சை நிறுத்தினால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.

அதுவே, குறித்த கடனை மீளச்செலுத்துவதற்கான காலத்தில் செலுத்த தவறி, ஆனால், 90 நாள்களுக்குள் செலுத்தியிருப்பின், அவை மஞ்சள் நிறத்தால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். ஏதேனும், மாதத்தில் நீங்கள் மீளச்செலுத்தலை தவறவிட்டு, அவை 90 நாள்களுக்கு மேலாகக் கடந்திருப்பின் அவை அனைத்துமே சிவப்பு நிறுத்தால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.

இவ்வாறு, மஞ்சள், சிவப்பு நிறத்தால் அடையாளப்படுத்தப்பட்ட நிலை​​யைக் குறித்த தனிநபர் கொண்டிருப்பாராயின், அவர் மற்றுமொரு கடன்வசதியை பெற்றுக்கொள்ளுவதில் சிக்கல்நிலை ஏற்படுவதுடன், குறித்த கடனை வழங்கிய நிதிநிறுவனமே மற்றுமொரு நிதிவசதியை வழங்க முன்வராத நிலையும் காணப்படும்.

எனவே, கடன், கடனட்டை பெறுபவர்கள் எவராயினும் இதைக் கவனத்தில் கொள்ளுவது அவசியமாகிறது. இது தொடர்பில் அலட்சியப்போக்கில் இருப்பீர்களாயின், இலங்கை கொடுகடன் பணியகத்தால் எடுக்கப்படும் தீவிர நடவடிக்கைகளுக்குள் சிக்கிக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படுவதுடன், கொடுகடன் பணியகத்தின் தடுப்பு பட்டியலில் (black listed) சேர்க்கப்பட்டு, மீள நிதிவசதியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படக்கூடும். எனவே, இவற்​றைக் கருத்தில் கொள்ளத்தக்க வகையில் நடந்துகொள்ளவது உசிதமானதாகும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X