Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
அனுதினன் சுதந்திரநாதன் / 2020 மார்ச் 02 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019ஆம் ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு வந்ததுடன், மூன்று மாதங்களுக்கான புதிய காபந்து அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தது. மக்களின் மனநிலை அடிப்படையில் தேர்தலில் மாற்றமொன்று ஏற்பட்டிருந்தாலும் அது சரியான மாற்றமா என்பதை வெறும் மூன்று மாதங்களுக்குள் மக்கள் விமர்சனமாய் பேசும் அளவுக்கு, நாட்டின் பொருளாதார செயற்பாடுகளும் விலைவாசிகளும் மோசமடைந்து இருக்கின்றது. புதிய வேலைவாய்ப்பு, சம்பள அதிகரிப்பு, கண்துடைப்புக்கான விலைக் குறைப்பு என, நடாளுமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு, இந்த அரசாங்கம் இயங்கிக்கொண்டு இருக்கிறதே தவிர, ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார சீர்படுத்தல்களுக்கான முன்னேற்பாடுகளை சரிவரத் தீர்மானித்து செயற்படுவதாகத் தெரியவில்லை.
2019ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஏற்பட்ட மோசமான சம்பவங்கள், நாட்டின் பொருளாதாரத்தை மிகப்பாரிய அளவில் பாதித்தது. இந்தப் பொருளாதாரப் பாதிப்பை நிவர்த்திப்பதற்கு பதில், சகல அரசியல் கட்சிகளுமே அதை தங்களது அரசியல் இலாபத்துக்காகவே பயன்படுத்திக் கொண்டுள்ளன. இதன் விளைவாக, சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் மோசமான பொருளாதார வளர்ச்சி ஆண்டாக, 2019ஆம் ஆண்டு மாற்றமடைந்துள்ளதாக, சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதுடன், இந்தச் சம்பவங்களின் தாக்கம், 2020இல் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் என்பன, இந்தப் பொருளாதார மந்தநிலை 2020இலும் தொடருவதற்கு வாய்ப்புள்ளதாக தனது அச்சத்தை வெளியிட்டுள்ளது.
இந்த மோசமான நிலையைச் சீர்செய்ய காபந்து அரசாங்கமானது, 2020ஆம் ஆண்டில் சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு நேரடி முதலீடாக நாட்டுக்குள் கொண்டுவர தீர்மானித்துள்ளது. ஆனால், இந்த இலக்கானது, போதுமான பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகளற்ற நிலையில், சாத்தியமற்ற இலக்காகவே பார்க்கப்படுகிறது. அத்துடன், உலகளாவிய ரீதியில் அதிகமாக பரவிவரும் கொரோனா தொற்றும் இதற்கு மற்றுமொரு காரணமாக மாறியுள்ளது.
அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் அதிகரித்தது வருகின்ற வர்த்தகப் பற்றாக்குறையும் கவலை தருகின்ற வகையில் அதிகரித்து வருவதாக அமைந்துள்ளது. 2013இல் மொத்த தேசிய உற்பத்தியில் 5.3 சதவீதமாகவிருந்த வர்த்தகப் பற்றாக்குறையானது, நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்கின்ற சமயத்தில் 5.7 சதவீதமாக அதிகரித்திருந்தது. பின்னாளில், 100 நாள் வேலைத்திட்டம், அரச வருமான அதிகரிப்பின் மூலமாக, இவற்றைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்திருந்தபோதும், தொடர்ச்சியாக அதிகரித்த பணவீக்கம், செலவீனங்கள் காரணமாகக் கட்டுப்பாடற்ற வகையில், வர்த்தகப் பற்றாக்குறையானது, சுமார் 7 சதவீதமாக, 2019இல் பதிவாகியிருந்தது. 2020இல் இது இன்னமும் அதிகரித்து, சுமார் 7.9 சதவீதமாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தற்போது நாம் அனுபவிக்கின்ற பொருள்கள், சேவைகளின் விலை அதிகரிப்பிலும் பார்க்க, மிக அதிகமான விலை அதிகரிப்பை எதிர்வரும் மாதங்களில் நாம் அனுபவிக்க வேண்டியதாக இருக்குமென்பதே துயரமான உண்மைச் செய்தியாகும்.
இதற்கு மேலதிகமாக, இந்த ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல், சில சமயங்களில் மாகாணசபைத் தேர்தலைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும். இவற்றுக்கான மேலதிக செலவீனங்களும் மக்களுக்கு இன்னுமொரு மேலதிக சுமையாகவே அமையும். இவையும் பொருளாதார வீழ்ச்சிக்கும், மேலதிக செலவீன சமைக்கும் வழிவகுப்பதாக அமைய போகிறது.
இலங்கையில் இன்று மிகப்பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது, நமது அன்றாட அத்தியாவசிய பொருள்களுக்கான மிகப்பெரும் விலையேற்றமாகும். நாளொன்றில் நமது அத்தியாவசிய உணவுத்தேவைக்காக நாம் பயன்படுத்துகின்ற உணவுப் பொருள்களின் விலையே, கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்திருக்கிறது. இதற்கு, அரசாங்கம் மிக வினைத்திறன் வாய்ந்த எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை. பொருள்களின் விலைகளுக்கு உச்ச வரம்பெல்லையை விதிக்கின்றபோதிலும், அவை நடைமுறைக்கு வந்ததாக எனும் கேள்விக்கு மக்களிடமிருந்து இல்லையென்கிற பதிலே வருகின்றது. இவை எல்லாம் மக்களை விசனத்துக்குள்ளாகியதாக இருப்பதுடன், இவ்வகை அதிகரிப்புக்கு மறைமுக காரணியாகவிருக்கும் வெளிநாட்டு கடன் சுமையின் அளவானது மிக மலைப்பானவொன்றாக மாறியிருக்கிறது.
நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் கடன்சுமையை குறைக்கவும் அதை மீள்செலுத்தவும் நாட்டின் வருமான அதிகரிப்பில் அதீத கவனத்தைச் செலுத்தியிருந்தது. இதன் காரணமாக, வரிகளும் பொருள்களின் செலவீனங்களும், குறுகிய காலத்தில் அதிகரித்திருந்தது. ஆனாலும், நீண்ட காலத்தில் அதன் பயனைப் பெறக்கூடியச் சாத்தியமிருந்தது. ஆனாலும், புதிதாக அமைந்த காபந்து அரசாங்கம் அதற்கு மாறாக, தாம் பொறுப்பேற்றதுமே, நாட்டின் வருமான மூலங்களைக் குறைத்ததுடன், அரச செலவீனங்களையும் கட்டுப்படுத்த முனைந்திருந்தது. இதன் காரணமாக, மக்களின் வருமானம் அதிகரிக்க செலவீனங்கள் குறைந்திருக்க வேண்டும். ஆனால், நடப்பதெல்லாம் தலைகீழான ஒன்றாக இருக்கிறது.
மக்களுக்கு வரிகளை குறைத்து வருமான அதிகரிப்பை செய்வதாக மாயையை ஏற்படுத்துகின்ற அரசாங்கமானது, மறுபக்கத்தில் பொருள்க, சேவைகளின் செலவீனங்கள் அதிகரிப்பது தொடர்பில் வாய்மூடி மௌனமாக இருக்கின்றது. இதன் காரணமாக, 2019ஆம் ஆண்டின் இறுதியில் அடையாளம் காணப்பட்ட, நாட்டின் வெளிநாட்டு மொத்தக் கடனின் அளவானது, சுமார் 56 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் சுமார் 62 சதவீதமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இவ்வாண்டில் இலங்கை அரசாங்கம் தான் மீள செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடனான சுமார் 6.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்துவதில் சிக்கல் நிலையானது தொடர்கிறது. இதனால், இவ்வாண்டில் நமது செலவீனங்கள் இன்னமும் அதிகரிப்பதாற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இருக்கின்றது.
அதுமட்டுமல்லாது , சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்திசெய்து அடுத்தகட்டக் கடனைப் பெறுகின்ற செயற்பாடுகளிலும், அரசாங்கமானது, இக்கட்டான சூழ்நிலையொன்றில் மாட்டியிருக்கிறது. காரணம், அடுத்த கட்டக் கடனைப் பெறுவதற்கு, இலங்கையில் நட்டத்தை உழைக்கின்ற சுமார் 300க்கும் மேற்பட்ட அரச உடமையான நிறுவனங்களின் நட்டங்களை குறைப்பதற்கான வழிவகைகளை செய்வதுடன் அதுசார்ந்த பெறுபேறுகளை சர்வதேச நாணய நிதியத்துக்கு இவ்வாண்டில் வழங்குவதன் மூலமாகவே அடுத்தக் கட்டக் கடனை அரசாங்கத்தால் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்தல்களை, அரசாங்கம் சந்திக்கவுள்ள நிலையில், மிகப்பெரும் வாக்குவங்கியாகவிருக்கும் அரசுடமைத் திணைக்களங்களில் பாதிப்பைத் தருகின்ற எந்தவொரு விடயத்திலும் இலங்கை அரசாங்கம் தற்போதைக்கு, தனது காலை வைக்காது என்பதைத் திடமாகக் குறிப்பிட முடியும். இதனால், 2020ஆம் ஆண்டு நமது பொருளாதார, நிதியியல் சார் தேவைப்பாடுகள் மீட்பராய் இருப்பதை பார்க்கிலும், அவற்றின் வீழ்ச்சிக்கான ஆண்டாக இருப்பதற்கான சாத்தியங்களே அதிகமாவிருக்கிறது.
அரசியல் சுயலாபங்கள், அரசியல்வாதிகளின் சொந்த நலனுக்காக ஆட்சி நடக்கின்ற நாடொன்றில், மக்களின் தேவைகளும் அவர்களின் நலன்களும் கொஞ்சமேனும் கவனத்தில் கொள்ளப்படாது என்பதை இலங்கையின் புதிய ஆண்டான 2020ஆம் ஆண்டு மீண்டுமொருமுறை நிரூபிக்கப் போவதாகவே தெரிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
32 minute ago
48 minute ago