2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

‘விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றப்படும்’

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூலை 01 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நிறுத்தப்பட்டுள்ள அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களைத் துரிதமாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. உர மானியங்களை மாத்திரம் வழங்குவதால் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முடியாது. 

“கடந்த கால வரலாறுகளை உரிய முறையில் தற்காலத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டு விவசாயத்தை முன்னேற்ற வேண்டும். அதற்காக நீர்ப்பாசனத் திட்டங்களை மிகவும் சிறந்த வகையில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என நீர்ப்பாசன மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். 

ஆனமடு தேர்தல் தொகுதிக்குட்பட்ட இங்கினிமிட்டிய நீர்ப்பாசனத் திட்டத்தின் 1ஆம் யாய கால்வாயினைப் புனரமைப்புச் செய்து அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,

“கடந்த அரசாங்க காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒழுங்கற்ற வேலைத்திட்டங்களில் ஏராளமான குழப்பங்கள் தோன்றியிருக்கின்றன.  சுற்றாடலுக்குப் பெரும் பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை அறிந்து கொண்டும். ஆரம்பிக்கப்பட்ட சில வேலைத்திட்டங்கள் தொடர்பில் தற்போது பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றது.

“அவ்வாறு ஒழுங்கற்ற முறைகளில் கடந்த அரசாங்கம் ஆரம்பித்த வேலைத்திட்டங்களால் தோன்றியிருக்கும் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் தீர்வை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

“கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றது, சாதார மக்களுக்கான தேவைகள் அல்ல. சிறிய குளங்களை, நீர்ப்பாசன கால்வாய்களை அபிவிருத்தி செய்வதை ஒதுக்கி வைத்துவிட்டு, கோடிக் கணக்கில் கடன் பெற்றுக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 

“இவ்வாறான தான்தோன்றித்தனமான வேலைத்திட்டங்களின் பிரதிபலனாகவே உமாஓயா சுற்றாடல் அழிவுகள் தொடர்பிலான கதைகளைக் கேட்க முடிகின்றது. இந்த மோசமான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட யுகத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிகப்புச் சகோதரர்கள் இன்று குழப்பமடைந்திருக்கின்றார்கள்.

“முன்னைய அரசாங்கத்தின் தவறுகளால் அவர்கள் இன்று தற்போதைய அரசாங்கத்தை சிரமத்துக்குள்ளாக்க முனைகின்றார்கள். இது நியாயமான ஒன்றல்ல.  அதே போன்று செய்ய வேண்டியது கடந்த காலங்களில் இடம்பெற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்தி ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்து தீர்வைத் தேடுவதையேயாகும் ” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X