2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

‘நல்லது செய்ய வந்த நல்லாட்சி அரசாங்கம் சோரம் போயுள்ளது’

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இன்று, சர்வதேச அழுத்தங்களுக்கு சோரம் போயுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்டத்துக்கான மக்கள் சந்திப்பு, மதுரங்குளி இசுறு வரவேற்பு மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இந்த மக்கள் சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு "சோரம்போன அரசாங்கமும், தாய் நாட்டின் காட்டுத் தார்பாரும்" எனும் தலைப்பில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஜஹத் பியங்கரவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றியதாவது,

“அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இந்த நாட்டை ௯றுபோட்டுக் கொடுப்பதற்கு, இந்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருப்பதை அண்மைக்கால செயற்பாடுகள் மூலம் கண்டுகொள்ளக் ௯டியதாக இருக்கிறது.

“தமிழ் மக்களுக்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளது என்பதை காட்ட இந்த அரசாங்கம் முற்படுகிறது. இந்த நாடு இரண்டாகப் பிளவுபட்டால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. கிழக்கை வெளிநாட்டு சக்திகள் ஆக்கிரமித்துக் கொள்ளும். அமெரிக்க படையினர் சுற்றி வளைப்பார்கள். வளங்கள் சூரையாடப்படும். நாடு இரண்டானால் இதுவே மக்களுக்குக் கிடைக்கும் வரப்பிரசாதமாகும்.

“எனவே, தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக இருந்து இந்த பாரிய அழிவில் இருந்து பிள்ளைகளையும், வளங்களையும் பாதுகாக்க வேண்டும்.

“அத்துடன், தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்படும் எண்ணெய் மூலம் பல மில்லியன் ரூபாய் வருமானமாக கிடைக்கும்.

“இவ்வாறு வருமானத்தை ஈட்டக் ௯டிய ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்த அரசாங்கம், சீனாவுக்கு விற்பனை செய்துள்ளது.

“இதேபோன்று, மத்தல விமான நிலையத்தையும் இந்தியாவுக்கு வழங்குவதற்கும் அரசாங்கம் முயற்சிக்கின்றது.

“இதேவேளை, தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், நிர்வாக நடவடிக்கைகள், வளங்கள்  என அனைத்தும் பாரிய அழிவை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறன.

“அத்துடன், மத்திய வங்கியில் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருடனை பிடிக்கப் போவதாக ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தில், மில்லியன் அல்ல பில்லியன் அல்ல ரில்லியன் வரை களவு எடுத்துள்ளார்கள். ரில்லியன்தான் கடைசி. இதற்கு மேல் களவு எடுக்க முடியாது.

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை, “ஏகாபத்திய அரசாங்கம்” என்று விமர்சித்தார்கள். ஆனால், மஹிந்த அரசாங்கம், உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தியது. ஆனால் பயத்தின் காரணமாக இந்த அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாமல் பிற்போடுகிறது.

“ஒரு பக்கத்தால் நாட்டின் வளங்கள் அழிக்கப்படுகிறது. மறுபுறம், அரசை நம்பி வாக்களித்த மக்கள் தங்களது உரிமைக்காக வீதியில் போராட்டங்களை நடத்துகிறார்கள்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X