2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

சங்கிலியை அறுத்த இளைஞன் கைது

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஜூலை 04 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி நகரில் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றதாகக் ௯றப்படும் இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நேற்றுக் கைதுசெய்துள்ளதாக, கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன், கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தொழில் நிமித்தம் புத்தளத்தில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ள போதும், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் எவ்விதமான ஆவணங்களும் சந்தேகநபரிடம் இருக்கவில்லை எனவும் கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், பொருட்களைக் கொள்வனவு செய்ய தனிமையில் கற்பிட்டி நகருக்கு வந்துள்ளார்.

இதன்போது, வங்கியொன்றுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த இனந்தெரியாத இளைஞன், தனிமையில் சென்ற  அப்பெண்ணை அணுகி, கற்பிட்டி பிரதேசத்திலுள்ள குறுக்குப் பாதையொன்றின் பெயரைச் சொல்லி விசாரித்துள்ளார்.

குறித்த இளைஞன் கேட்ட குறுக்கு வீதிக்குச் செல்வது பற்றி அந்த பெண் தெளிவுபடுத்திக் கொண்டிக்கும் போதே, அந்த இளைஞன், பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடிச் சென்றுள்ளான்.

இதனையடுத்து, தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை இளைஞன் அறுத்துக் கொண்டு ஒடுவதுபற்றி குறித்த பெண், ௯க்குரலிட்டு அவ்விடத்தில் நின்றவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

உடன் செயற்பட்ட கற்பிட்டி பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்கள், சந்தேகநபரான இளைஞனை, வீடொன்றுக்குள் வைத்து மடக்கிப் பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

இதன்போது, தான் யாரிடமும் தங்க சங்கிலியை திருடவில்லை என்றும் தன்னை அவ்விடத்தில் இருந்து செல்வதற்கு இடமளிக்குமாறும் அந்த இளைஞன் கேட்டுள்ளான்.

எனினும், சந்தேக நபரான குறித்த இளைஞனை நையப்புடைத்த மக்கள், மீண்டும் நகை திருடியது பற்றிக் விசாரித்துள்ளனர்.

இதனையடுத்து முரணான கருத்துகளைச் சொல்லிவந்த சந்தேகநபர், நீண்ட நேரத்துக்குப் பின்னர் தனது நாக்குக்குக் கீழே மறைத்து வைத்திருந்த திருடப்பட்டதாக ௯றப்படும் தங்கச் சங்கிலியை வெளியே எடுத்து, பின்னர் தனது குற்றத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, திருட்டுச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த கற்பிட்டி பொலிஸார், பொதுமக்களின் பிடியில் இருந்த சந்தேகநபரை மீட்டு, விசாரணையை மேற்கொண்டனர்.

இதன்போது,  நடந்த சம்பவம் பற்றி பொலிஸாருக்குத் தெளிவுபடுத்திய நகையை பறிகொடுத்த பெண், தனது கழுத்திலிருந்த பெண்டன் உடனான தங்கச் சங்கிலியை குறித்த இளைஞன் அறுத்துக் கொண்டு தப்பிச் சென்ற நிலையில், மக்களின் உதவியுடன் துரத்திப் பிடித்ததாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து அறுத்துச் சென்றதாக ௯றப்படும் 55,000 ரூபாய் பெறுமதியான ஒரு பவுன் எடையுள்ள பெண்டன் உடனான தங்க சங்கிலியில் பெண்டனைத் தவிர,  சந்தேகநபரிடமிருந்து தங்க சங்கிலி மாத்திரமே மீட்டதாக தெரிவித்த பொலிஸார், குறித்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பெண்ணிடம் இருந்து சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிய வேளை சங்கிலியில் இருந்த பெண்டன் கீழே வீழ்ந்துள்ளதாக, சந்தேகநபர் பொலிஸ் விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .