2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

யாழுக்கு சரக்கு ரயில் சேவை

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 21 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய பொருட்களை எடுத்து வருவதற்கான சரக்கு ரயில் சேவைகளை பயன்படுத்த  திட்ட முன்மொழிவுகள் புகையிரத திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகிறது.

அதனடிப்படையில், இந்த சேவையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம் என  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், இன்று (21) காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு "யாழ்.ராணி " ரயிலில் பயணித்தார்.

யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்த அமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வரலாற்றில் முதல் தடவையாக யாழ். மக்களை கருத்தில்கொண்டு, அதிகளவான சேவைகளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளோம்.

“புதிதாக காங்கேசன்துறை  -  கிளிநொச்சி அறிவியல் நகருக்கு இடையிலான "யாழ் ராணி" சேவை , தடைப்பட்டிருந்த இரவு நேர தபால் சேவை மீள ஆரம்பம், உத்தரதேவி மற்றும் கடுகதி சேவைகளின் தரிப்பிட நிலையங்களை அதிகரித்துள்ளமை உள்ளிட்டவற்றை செயற்படுத்தியுள்ளோம்.

“இவற்றுடன், யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து எடுத்து வருவதற்காக சரக்கு ரயில் சேவைகளை பயன்படுத்த அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்திருந்தார்.

“அதற்குரிய திட்ட முன்மொழிவுகள் ரயில் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதனடிப்படையில் இந்தச் சேவையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம்.

“மேலும், முல்லைத்தீவு, வவுனியா, மற்றும் அநுராதபுர மாவட்ட பணியாளர்கள், பல்கலை மாணவர்களை கருத்தில் கொண்டு, ஓமந்தை - அறிவியல் நகர் ரயில் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

“அத்துடன், தடைப்பட்டுள்ள "ஸ்ரீதேவி" சேவையை மீள ஆரம்பிப்பதற்கு, பயணிகளின் ஆதரவை எதிர்பார்த்துள்ளதாகவும், அதிகளவு பயணிகள் பயணிப்பார்கள் என்றால் அச்சேவை மீளவும் ஆரம்பிக்கப்படும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .