2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மரவுரிமைகளை பாதுகாக்கின்ற உரிமையை கோருகிறார் மேயர்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ். மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தமிழர்களின் மரவுரிமைச்சின்னங்களை, ஒப்பந்த அடிப்படையில் பாதுகாக்கின்ற உரிமையை, மாநகர சபைக்கு வழங்க வேண்டுமென, மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கேட்டுக்கொண்டார்.

யாழ். மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட இடங்களிலுள்ள தமிழர்களின் மரவுரிமைச்சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பாக, நேற்று (01) நடைபெற்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமது வரலாறுகளை அடுத்த சந்ததிக்குக் கடத்துவதற்கு ஏதுவானவகையிலும் தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள மரவுரிமைச் சின்னங்களை தாமே பாதுகாக்கும் நோக்குடனும், அந்த மரவுரிமைச்சின்னங்களைப் பாதுகாக்கின்ற, பராமரிக்கின்ற பொறுப்பை தமக்கு வழங்க வேண்டுமென்றார். 
 
அத்துடன், குறித்த மரவுரிமைச்சின்னங்களை முழுமையாக கையளிக்காது விடினும், ஒப்பந்த அடிப்படையில், அவற்றை  பாதுகாக்கின்ற உரிமையை, மாநகர சபைக்கு வழங்குமாறும், மேயர் கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த தொல்பொருள் திணைக்கள அதிகாரி, இது தொடர்பில் கோரிக்கை கடிதமொன்றைத் தருமாறும் அதற்குரிய அனுமதிக்கு முயற்சிப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, இக்கலந்துரையாடலின் போது, முக்கியமாக சங்கிலியன் அரண்மனை, சங்கிலியன் தோப்பு மற்றும் வளைவு, யமுனா ஏரி ஆகிய தமிழர் மரவுரிமைச்சின்னங்களைப் பாதுகாத்து, பாராமரிப்பது தொடர்பில் யாழ்.மாநகர சபையும் தொல்பொருள் திணைக்களமும் ஓர் இணைக்கப்பாட்டுக்கு வருவது குறித்து முடிவு எடுக்கப்பட்டதுடன், குறித்த இடங்களில், அந்த மரவுரிமைச்சின்னங்களின் வரலாற்றை மூன்று மொழிகளிலும் இடுவது தொடர்பிலும் ஆராயப்பட்டு, முடிவெடுக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலின் பின்னர், தொல்பொருள் திணைக்கள அதிகாரி மற்றும் மேயர் தலைமையிலான குழுவினர் யாழ்.கோட்டை, யமுனா ஏரி, சங்கிலியன் அரண்மனை, சங்கிலியன் தோப்பு ஆகிய இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, எதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர்.

மேலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07), யாழ்.கோட்டைப்பகுதியைண் சுற்றிய வெளிப் பகுதி குறிப்பாக, முத்தவெளி பகுதியில் வளர்ந்திருக்கின்ற பாதீனியச் செடிகள் மற்றும் புற்களை யாழ்.மாநகர சபையும் தொல் பொருள் திணைக்களமும் இணைந்து அகற்றி, தூய்மைப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .