2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

தமிழர்கள் காணிகளை விடுவிப்பதே நோக்கம்

Freelancer   / 2023 ஜூன் 22 , மு.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்

சில பெரும்பான்மையின இனவாத அரசியல்வாதிகள் தமது வாக்கு வங்கியை நிரப்பும்
நோக்குடனேயே குருந்தூர் மலைக்கு வருகைதருகின்றனர் என்றும் அவர்களுக்கு எதிர்ப்புத்
தெரிவிப்பது எமது நோக்கமல்ல என்றும் தெரிவித்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்
துரைராசா ரவிகரன், தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்பதே எமது
நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, ஆண்டான் குளம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த
1984ஆம் ஆண்டு தமது பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில், இதுவரையில் அவர்களது
பகுதிகளில் மீள்குடியமர்த்தப்படாத அவர்களை குறித்த பகுதிகளில் மீள்குடியேற்ற வேண்டும்
என்றும் குறிப்பிட்டார்.

குருந்தூர்மலையில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு
முல்லைத்தீவு நீதிமன்றில் நிலுவையிலுள்ள நிலையில், முல்லைத்தீவு பொலிஸாரோ, தொல்லியல்
திணைக்களமோ அல்லது, பௌத்த பிக்குகளோ நீதிமன்றை மதிப்பதாகத் தெரியவில்லை.

தமிழ் தரப்புகளான நாம்தான் நீதிமன்றத்தினதும், நீதிபதியினதும் கட்டளைகளை மதித்து
நடக்கின்றோம்.

இந் நிலையில் கொழும்பிலே இருக்க வேண்டிய, கொழும்பைப் பிரதிநிதித்துவப் படுத்தும்
பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இனவாதத்தைத் தூண்டும் விதமாக குருந்தூர் மலைக்கு
வருகைதருவதும், பார்வையிடுவதுமாகச் செயற்படுகின்றார்கள்.

தெற்கிலே தமது வாக்குவங்கியைப் பலப்படுத்துவதற்காகவே சில இனவாத அரசியல்வாதிகள்
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

குருந்தூர்மலையை அண்டிய பகுதியிலுள்ள தமிழ் மக்களுக்குரிய 306 ஏக்கர் காணிகளை
அபகரிக்கும் நோக்குடன் தொல்லியல் திணைக்களம் செயற்படுகின்றது.

இந் நிலையில் இந்த குருந்தூர்மலையை அண்டிய காணிவிடயம் தொடர்பாக அண்மையில் எமது
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியிருந்தனர். அப்போது
ஜனாதிபதி இந்தக் காணிகளை விடுவிக்குமாறு உரியவர்களுடன் பேசியிருந்தபோதும்
தொல்லியல் திணைக்களத்தினர் தொடர்ந்தும் அபகரிப்புச் செயற்பாடுகளிலேயே
ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தக் காணிகள் அனைத்தும் எமது தமிழ் மக்களுடைய வாழ்வாதார விவசாயக் காணிகளாகும்.
இவ்வாறான காணிகளை அபகரித்து இங்கு பௌத்தவிகாரைகளை அமைத்து,
சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இங்கு முனைப்புப்பெற்று வருகின்றன.

இவ்வாறான சிங்களமயமாக்கல் செயற்பாடுகளுக்கெதிராகவும், பௌத்தமயமாக்கல்
செயற்பாடுகளுக்கெதிராகவும் நாம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்போது பௌத்த வழிபாடுகளுக்கு
எம்மால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக பௌத்த பிக்குகளால் எம்மீது வழக்குத்
தொடரப்படுகின்றது.

அத்தோடு தொல்லியல் திணைக்களத்தினர் தமது செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக
எம்மீது வழக்குத் தொடர்கின்றனர். இந் நிலையில் தமது காணிகள் அபகரிக்கப்பட்டு
சிங்களமக்களுக்கு வழங்கப்பட்டுவிடுமோ என எமது தமிழ் மக்கள் அங்கலாய்த்துக்
கொண்டிருக்கின்றனர் ” என்றார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .