Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2017 ஜூன் 01 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மேல் மாகாண, தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் போன்ற மூன்று மாகாணங்களிலும் குடிநீர் வழங்கல் நடவடிக்கைகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றைச் சீர்செய்வதற்கும் அனர்த்த நிலமைகளின்போது செயற்படுவதற்கும், விசேட வேலைத்திட்டங்களை, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்டு வருகிறது.
பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சுத்தமான குடிநீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கும் அதிக பாதிப்புக்குள்ளான இடங்களில் மாற்று வழிவகைகளைக் கையாண்டு, நீர் விநியோகத்தை சீரான முறையில் மேற்கொள்வதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைமையகத்தில், கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில், நகரத் திட்டமிடல் மற்றம் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ. அன்சார், உப தலைவர் ஷபீக் ரஜாப்தீன், பொது முகாமையாளர் தீப்தி சுமணசேகர, நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹிலால் சில்வா மற்றும் மேலதிக பொது முகாமையாளர்கள், பிரதிப் பொது முகாமையாளர்கள், தொழிற்சங்கங்க பிரதிநிதிகள் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது கூறியதாவது,
“பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் குடிநீர் வழங்கும் குழாய்களின் திருத்த வேலைகளில் ஏறத்தாழ 80 சதவீதமானவை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மீதமிருக்கின்றவை இயன்றவரை விரைவில் செப்பனிடப்படும். வெள்ளநீர் கூடுதலாகக் காணப்படும் பிரதேசங்களில் அவற்றை திருத்துவதற்கான பணிகளில், சில தாமதங்கள் ஏற்பட்டாலும் அவற்றை விரைவாக திருத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை, தேவையான இடங்களில், வீதி அபிவிருத்தி அதிகார சபையோடும் மண்சரிவு ஏற்பட்ட பிரதேசங்களில் கட்டட நிர்மாண ஆராய்ச்சி திணைக்களத்துடனும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது.
“குடிநீர் தட்டுப்பாடு அல்லது தடை ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு பௌசர்கள் மூலமாகவும் தேவையான இடங்களில் நீர்தாங்கிகளில் நீரை நிரப்பியும் நீர் விநியோகம் செய்யப்படுகின்றது. அந்ததந்த பிரதேசங்களிலே இருக்கின்ற அனர்த்த நிவாரண அமைச்சின் நிறுவனங்களோடு நாங்கள் தொடர்புபட்டு, இந்த விடயங்களில் உரிய கவனம் செலுத்தி வருகிறோம்.
“அதேவேளை, வெள்ளத்தினாலும் மண் சரிவினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண வேலைகளில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்களை ஈடுபடுத்துவதற்கும் அதற்கென்று ஓர் அனர்த்த நிவாரண செயலணியை நிரந்தரமாக நிறுவுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். குறித்த செயலணி இந்த வெள்ள நிவாரணத்தின் போதும், வெள்ளம் வடிந்த பின்னரும் கிணறுகள் போன்றவற்றை துப்புரவு செய்வதிலும் ஈடுபடுத்தவிருக்கின்றோம்.
“பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய சேவைகள் போன்று ஜனாதிபதியின் பணிப்புரைக்கேற்ப நீர் விநியோகத்தை சீராக வழங்குவதற்கான சுற்றறிக்கைகளையும், பொதுவான சட்ட திட்டங்களையும் பொருட்படுத்தாமல் அவற்றுக்கான ஒதுக்கீடுகளையும் ஏனைய தேவைகளையும் மேற்கொள்ளுமாறு அமைச்சினதும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளேன்.
“பத்தேகம், காலி, ரன்ன, ஹுங்கம, வெலிகம், மாத்தறை போன்ற மாவட்டங்களில் நீர் வழங்கல் நிலையங்கள் வெள்ளத்தால் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரன்ன, ஹுங்கம மற்றும் தங்கல்ல போன்ற நீர் வழங்கல் நிலையங்கள் தவிர்ந்த ஏனைய முக்கிய நீர் வழங்கல் நிலையங்கள் மீண்டும் திருத்தியமைக்கப்பட்டு நீர் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“தற்போது சுமார் 18 பௌசர் வண்டிகள் தென் மாகாணத்தில் நீர் கிடைக்காத பிரதேசங்களுக்கு நீர் வழங்கும் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago