2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு திகதியைக் குறிக்கவும்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாநூ கார்த்திகேசு

சுகாதார அமைச்சுக்குப் புதிய பணிப்பாளர் நாயகமொருவரை நியமித்தமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரத்தை ஒதுக்கித் தருமாறு, வைத்திய நிர்வாக உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், பிரதி மற்றும் உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் வைத்தியசாலை இயக்குனர்கள் உள்ளிட்ட 14 பேரே மேற்கண்டவாறு கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாங்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

இதேவேளை, சனிக்கிழமையன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனிருத்த பாதெனிய, 'வைத்தியர்களுக்கான சகோதர மொழிப் பயிற்சி நெறியானது கடந்த நான்கு மாத காலமாக வைத்திய பீட மாணவர்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

சுகாதார அமைச்சர் பல்வைத்தியர் என்பதனால் இப்பயிற்சி நெறியினைப் பல்வைத்திய பீட மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். நீண்டதொரு இழுபறியின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உதவியினால் குறித்த பயிற்சியினை நாங்கள் மீளப் பெற்றுக் கொண்டுள்ளோம்' என தெரிவித்தார்.

கொழும்புப் பல்கலைக்கழக வைத்தியபீட மாணவர்கள் 80 பேருக்கான சகோதர மொழிப் பயிற்சி நெறிக்கு அனுப்பி வைப்பதற்கான ஆரம்பக்கட்ட நிகழ்வு, பொரளை, டி.பி.விஜய சுந்தர மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைமையகத்தில் சனிக்கிழமை (13) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

மேற்கொண்டு அவர் உரையாற்றுகையில்,

'நாடளாவிய ரீதியில் தரமான சுகாதார சேவையினை அனைவருக்கும் சம அளவில் வழங்குவதே சுகாதாரத் துறையின் பிரதான நோக்கமாகும். எமது வைத்தியர்கள் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் பணியாற்ற வேண்டி நிர்ப்பந்திக்கப்படுகையில், ஆங்கிலம் தவிர்ந்த தம் தாய்மொழியில் மாத்திரம் பரீட்சையமுள்ளவர்கள் சகோதர மொழி நோயாளியொருவரை அணுகும் போது  நோயை இனங்காண்பது, வைத்தியர் - நோயாளிக்கு இடையிலான அணுகுமுறைகளில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இதனைத் தவிர்க்கும் முகமாகவே இப்பயிற்சி நெறியானது இலங்கையின் 2007ஆம் ஆண்டு 7ஆம் இலக்கச் சுற்றறிக்கையில் உள்வாங்கப்பட்டது. குறித்த பாட நெறியின் மூலமாக சுமார் 2,000 வைத்தியர்கள் பயனடைந்து வெளிமாவட்டங்களில் பணியாற்றுகின்றனர் என்றார்.

இப்பயிற்சியானது இலங்கை அரசகருமமொழிகள் திணைக்களத்துடன் இணைந்து நடத்தப்பட்டு வருகின்றது. அதேவேளை, மொழி தொடர்பில் பாண்டித்தியம் பெற்றவர்களால் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாண்டில் மாத்திரம் 320 மாணவர்கள் பயிற்சிக்குத் தெரிவாகியுள்ள நிலையில், இதன் ஆரம்பக் கட்ட நிகழ்வாக 80 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இப்பயிற்சி நெறியானது அகலவத்தையில் நேற்று 14ஆம் திகதி ஆரம்பமானது. இது எதிர்வரும் 25ஆம் திகதி நிறைவுபெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .