2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

டெங்கு நோயாளர்களுக்கான வசதிகளை அதிகரிக்க நடவடிக்கைகள்

Editorial   / 2017 ஜூலை 01 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையின் செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 28ஆம் திகதி அங்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதுடன், அதன்போது ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கேற்ப டெங்கு நோயாளர்களின் சிகிச்சைகளுக்குத் தேவையான வசதிகளை அதிகரிப்பதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு மற்றும் அதனையண்டிய பிரதேசங்களில் டெங்கு நோய் பரவுதல் காரணமாக மருத்துவமனையின் டெங்கு நோயாளர்களின் வாட்டுத்தொகுதியில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதை அவதானித்த ஜனாதிபதி, சிகிச்சைகளுக்குத் தேவையான வசதிகளையும் அதிகரிக்கத் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதற்கேற்ப 48 மணித்தியாலங்களுக்குள் டெங்கு நோயாளர்களின் சிகிச்சைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தற்காலிக வாட்டுத்தொகுதியை நிர்மாணிக்க இலங்கை இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், தேவையான கட்டில், மெத்தை உள்ளிட்ட ஏனைய  வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

டெங்கு நோயாளர்களுக்கான புதிய வாட்டுத்தொகுதி தற்போது துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், ஜனாதிபதியின்  ஆலோசனைப்படி டெங்கு நோயாளர்களுக்கான விசேட சிகிச்சைப் பிரிவிலும் புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மருத்துவமனையில் காணப்படும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக முப்படையில் கடமையாற்றும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக்கேற்ப தற்போது முப்படையின் மருத்துவர்களும் தாதியர்களும் மருத்துவமனையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், விசேட மருத்துவ வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

நோயாளர்களுக்கான சுகாதார வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .