2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சீனன் கோட்டை மக்கள் உதவிக் கரம் நீட்டினர்

Editorial   / 2017 ஜூன் 04 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார்

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்ட, பேருவளை - சீனன்கோட்டை மக்கள் முன்வந்துள்ளனர்.

சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய, சீனன்கோட்டை வாழ் மக்கள், சுமார் 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை, 4 கொள்கலன்களில் அனுப்பி வைத்தனர். 

அந்த நிவாரணப் பொருட்களை இரத்தினபுரிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு, சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில், நேற்று முன்தினம் இடம்பெற்றது.

சீனன்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கமும் சீனன்கோட்டை வாழ் மக்களும், இந்தப் பணிக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

சீனன்கோட்டை பள்ளிச் சங்க உப தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். துகைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேருவளை வலதர மெத்தாராம விகாரையின் அதிபதி சங்கைக்குரிய வலதர சுபூதி தேரோ, பள்ளிச் சங்க இணைச் செயலாளர்களான, அல்ஹாஜ் எம்.எம்.எம். ஷிஹாப், அரூஸ் அனஸ், உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எம்.எம். ஹில்மி, சீனன்கோட்டை, இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்க செயலாளர் அல்ஹாஜ் இஸ்மத் ஸாலி மற்றும் அதன் உறுப்பினர்கள் உட்பட ஊர் ஜெமாத்தார்கள், சமூக நல இயக்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய வலதர சுபூதி தேரோ கூறியதாவது,

“இன நல்லிணக்கத்துக்கு, சீனன்கோட்டை மக்கள், முன்மாதிரியைக் காட்டியுள்ளனர். இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப மேற்கொள்ளும் முயற்சிக்கு ஒர் உந்து சக்தியாக, இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“களுத்துறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சிங்கள - முஸ்லிம் மக்களுக்கு, சீனன்கோட்டை மக்கள் ஏற்கெனவே வழங்கிய உதவிகளை, நாம் நன்றியோடு நினைவு கூறுகிறோம். அதேபோன்று, இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு பெருந்தொகை நிவாரண உதவியை வழங்கியமை, பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

“இயற்கை அனர்த்தம் ஏற்படும் போது நாம் இன, மத பேதமின்றி ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டும். இந்த நாட்டில் 1,000 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் மக்கள், சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அந்த ஒற்றுமை, ஒருபோதும் சீர்குலைந்துவிடக் கூடாது. அதற்கு, எவரும் இடமளிக்கவும் கூடாது.

“இனவாதம், மதவாதம் ஒருபோதும் வெற்றியளிக்காது. அவை, நிச்சயமாகத் தோல்வியடைந்தே தீரும். எனவே, இந்த நாட்டில் வாழும் எல்லா இன மக்களும், இந்த இயற்கை அணர்த்தத்தின் மூலம் பாதி்க்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது, நம் அனைவரினதும் கடமையாகும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .