2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கலைத்துறையின் முன்னேற்றம் குறித்து கலைஞர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Gavitha   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலைத்துறையின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கலைஞர்களுக்குமிடையில் நேற்று வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா, தொலைக்காட்சி, அரங்கியல் மற்றும் இசைக் கலைஞர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

சினிமா, தொலைக்காட்சி, நாடகம் மற்றும் இலக்கியத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலைஞர்கள் ஜனாதிபதிக்கு விளக்கியதுடன், தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் குறித்தும் பல்வேறு முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பின்புலத்தை ஏற்படுத்திக்கொடுப்பதாகவும், ஒரு சில முன்மொழிவுகள் தொடர்பில் மேலும் தகவலை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட சில முன்மொழிவுகளை எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் உள்ளடக்கவுள்ளதாக ஜனாதிபதி கலைஞர்களிடம் தெரிவித்தார்.

வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்களுக்கு மத்தியில் தேசிய தொலைக்காட்சி நாடகங்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இலங்கை கலாசாரத்தைப் பாதுகாப்பதற்காக தொலைக்காட்சியினூடாக முறையான நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

கலைஞர்கள் மன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தல், திரையரங்குகளின் பற்றாக்குறை, விநியோக முறைமையில் உள்ள குறைபாடுகள் போன்ற பிரச்சினைகளை தீர்க்கவேண்டியதன் அவசியத்தையும் கலைஞர்கள் ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறினர்.

இசைத் துறையின் முன்னேற்றத்துக்கு எடுக்கப்படவேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய தலைமுறையினர் ரியாலிடி நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் செல்வதன் காரணமாக சுய படைப்புகள் உருவாகாமை போன்ற பிரச்சினைகளை இசைக் கலைஞர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .