2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சர்வதேச உதவியுடன் போதை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் உறுதியாக முன்னெடுக்கப்படும்: ஜனாதிபதி

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச உதவியைப் பெற்று போதை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை உறுதியாக முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்நிகழ்ச்சித் திட்டத்துக்கு புதிய தொழில்நுட்பம் பெருமளவில் பயன்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

போதைப்பொருள் வியாபாரிகளுக்கெதிராக அவர்களது சமூக அந்தஸ்த்துகளைக் கவனத்திற்கொள்ளாது சட்ட ஏற்பாடுகளை மிகக்கடுமையாக நடைமுறைப்படுத்த தயங்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று புதன்கிழமை (19) நடைபெற்ற பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் விளம்பரத் தூதுவராக நியமனம் செய்யும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

போதை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் சிறுவர்கள் மீது விசேட கவனத்தைச் செலுத்தி, போதைப்பொருள் பிரச்சினையிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு வினைத்திறன்மிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். போதைப்பொருள் பிரச்சினை மிகவேகமாக வளர்ச்சியடைந்துவரும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா போன்ற பிரதேசங்களில் இந்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை மிகமோசமாக சீரழித்துவரும் போதைப் பொருள் பிரச்சினையை சமூகத்திலிருந்து ஒழித்துக்கட்ட தன்னால் முடியுமான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கவுள்ளதாக  குமார் சங்கக்கார இந்த நிகழ்வில் தெரிவித்தார். 

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் விளம்பரத் தூதுவருக்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குமார் சங்கக்காரவிடம் கையளித்தார். 

போதைப்பொருள் இல்லாத இலங்கையை உருவாக்குவதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுவரும் அர்ப்பணத்துக்காக ஒரு விசேட நினைவுச் சின்னத்தை கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் கலாநிதி நிலங்க சமரசிங்க வழங்கிவைத்தார்.

நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்களின் தகவல்கள் அடங்கிய ஒரு நூலையும் கலாநிதி சமரசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இதன்போது கையளித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .