2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'மலையக தமிழர் உரிமை, தேவைகள் ரீட்டாவிடம் முன்வைக்கப்படும்'

Thipaan   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சுக்கு, அடுத்தவாரம் வருகை தரவுள்ள, ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன அறிக்கையாளர் ரீட்டா ஐசேக் குழுவினரிடம், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பான அரசியல், சமூக, கலாசார, பொருளாதார சிக்கல்கள் அனைத்தும் எழுத்து மூலமான அறிக்கையாக முன்வைக்கப்பட்டு விளக்கமளிக்கப்படும் என, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக இளைஞர் இணைய வாராந்தர கருத்தரங்கில், உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த பேச்சுவார்த்தையின் போது நாடு முழுக்கச் சிதறி வாழும் இனக்குழு என்ற முறையில் புதிய தேர்தல் சீர்திருத்த முனைப்பில் நாம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் தேர்தல் பிரதிநிதித்துவத்தில் எமக்கு ஒதுக்கப்பட வேண்டிய விசேட ஒதுக்கீடுகள் பற்றியும், மலையக தமிழ் இனத்தின் மிகவும் பின் தங்கிய பிரிவான தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பிலும், பின் தங்கிய பிரிவினர் என்ற முறையில் அவர்களை கைதூக்கிவிட வேண்டிய விசேட ஒதுக்கீடுகளை வழங்க சர்வதேச சமூகத்தை ஐ.நா வலியுறுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் விரிவாக எடுத்து கூறப்படும்

இந்நாட்டில் நல்லாட்சியை உருவாக்கிவிட்டோம் என்று, நாம் ஆனந்தக் கூத்தாட முடியாது. நாம் அமைதியாக இருந்தால், எம்மை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடக்கூடியவர்கள் இந்த நல்லாட்சியிலேயே இருக்கிறார்கள். ஆகவே எப்போதும் நாம் விழித்துக்கொண்டு இருக்க வேண்டும். இது இந்த நாட்டில் நாடு முழுக்க வாழும் அனைத்து தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பொருந்தும்.

அதேபோல் தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலும் நாம் உரிய அழுத்தங்களைக் கொடுத்து வருகிறோம். அவை பற்றி தெரியாத விடயங்கள் விரைவில் தெரிய வரும். இன்று நாம் பேச்சுகளை நடத்தி, கையெழுத்து போட இடம் கொடுத்து ஒத்துழைக்கின்றோம். இப்போது மூடிய அறைக்குள் இரகசிய பேச்சுவார்த்தைகள் இல்லை. அரசாங்கத்தை இந்த விடயத்தில் முன்னெப்போதும் இல்லாத விதத்தில் இழுத்து விட்டுள்ளோம். இது எமது அழுத்தம் காரணமாகவே நடக்கின்றது.

ஒப்பந்தம் சரத்துகள் ஒவ்வொன்றும் உழைக்கும் மக்களுக்கு தெரிகிறது. எமது இனத்தின் மிகவும் பின் தங்கிய பிரிவினரின் வாழ்வாதார விவகாரத்தில் அரசியல் செய்ய நாம் விரும்பாததால், இப்போது அமைதி காக்கிறோம். எந்தப் பேயுடனாவது ஒத்துழைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண எமது பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனம் தயாராக இருக்கிறது.  இதை இந்த கையெழுத்து குழுக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். 

அதேபோல் உத்தேச தேர்தல் முறையில், இந்நாட்டில் சிதறி வாழும் சிறுபான்மையினர் என்ற முறையில் நாம் எதிர்நோக்கும் சவால்கள், அனர்த்தம், அவற்றை பற்றியும் நாம் எடுத்து கூறுவோம். எனது அமைச்சுக்கு எம்மை தேடிவரும், சிறுபான்மை இன மக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய அறிக்கையாளர் ரீட்டா ஐசக் குழுவினருக்கு,  புதிய உள்ளூராட்சி கட்டமைப்புகள், காணி உரிமை, வீடமைப்பு, மொழியுரிமை உட்பட மலையக சிறுபான்மை மக்களின் உரிமை தேவைகள் பற்றி எடுத்துக்கூற தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராக இருக்கிறது என்றார்.

    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .