2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'சர்வதேச பாடசாலைகளுக்கு புதிய சட்டங்கள்"

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்  

'இலாப நோக்கத்தைக்கொண்ட வர்த்தக நிலையங்களைப்போல, இலங்கையில் சர்வதேச பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது. சர்வதேசப் பாடசாலைகள் தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சட்டங்களை கொண்டுவருவதற்கு எற்பாடுகளை மேற்கொண்டுள்ளது' என இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக இதுவரை 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச பாடசாலைகள் தொடர்பாகவும் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கூட்டம்,  கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷணன் தலைமையில், கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றது.  இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,

'இலங்கையில் ஆரம்பிக்கப்படும் சர்வதேச பாடசாலைகளின்  தரம் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்துப் பார்;;ப்பதற்கென ஓர் அமைப்பு அல்லது அமைச்சு இல்லை. கல்வி அமைச்சும் இந்த தனியார் சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. சர்வதேச பாடசாலைகளின் அதிகாரிகள் எம்முடன் எவ்வித தொடர்புகளையும் மேற்கொள்ளாமையே இதற்குக் காரணம். அவர்கள் கம்பனி சட்டத்தின் கீழ், பதிவு செய்து தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். கம்பனி சட்டமென்பது   சாதாரண தனியார் நிறுவனமாகவே கருதப்படுகின்றது. அது எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சுடன் தொடர்புபடுவதில்லை.

பெட்டிக்கடைகள் போடுவது போல நாளுக்குநாள் பலவிடங்களிலும் சர்வதேச பாடசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பாடசாலைகள் வீடுகளிலும் நடத்தப்படுகின்றன' என்றார்.

'சர்வதேச பாடசாலைகளுக்கென்று ஒரு நடைமுறை அவை, பின்பற்ற வேண்டிய ஒழுக்கக் கோவைகள் என ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எமது கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமும் இந்த சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக  முறையான வேலைத்திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயேவுள்ளார்.

சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுவது, அதற்கான நியமங்கள்   வரைமுறைகள், பதிவின்போது இருக்க வேண்டிய அடிப்படை தகைமைகள் என ஒரு செயற்திட்டத்தை உருவாக்குவதற்காக,  இராஜாங்க கல்வி அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அக்குழு இது தொடர்பாக ஆராய்ந்து முழுமையான அறிக்கை ஒன்றை எதிர்வரும் 25.08.2016 அன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் சமர்பிக்க வேண்டும். அக்குழுவின் அறிக்கை கிடைத்தப்பின்பு , அது தொடர்பாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .