2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

'அறியாமல் பேசவேண்டாம்: வடமாகாண உறுப்பினருக்கு பதிலடி

George   / 2017 மார்ச் 04 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அமைச்சர் மனோ கணேசன் பற்றி எதையாவது வாயில் வந்ததை பேசி, ஊடக பிரபலம் தேடும் வழக்கத்தை, வடமாகாணசபையின் உறுப்பனர் மயூரன் கைவிட வேண்டும்.

தனது அறிவை வளர்த்துக்கொண்டு, சொல்லொணாத் துன்பங்களில் துவண்ட நிலையில் வாழும் வன்னி மாவட்ட மக்களின் துன்பங்களை துடைக்க தனக்கு கிடைத்துள்ள இந்த   வடமாகாணசபை நியமனத்தை அவர் பயன்படுத்த வேண்டும்” என மேல்மாகாணசபை உறுப்பினர் சண் குகவரதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சண். குகவரதன், ஊடகங்களுக்கு இன்று அனுப்பியுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அமைச்சர் மனோ கணேசன், மொழித்துறை அமைச்சை ஏற்ற பிறகே தமிழ் மொழி அறிவிப்புகள் பிழையாக காணப்படுகின்றன என்றும், ஆகவே அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் வடமாகாணசபையின் மயூரன் என்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் பட்ட துன்பங்களுக்கு, நமக்கு கிடைத்த பதவிகள் மற்றும் சந்தர்ப்பங்களை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்பதுவும் ஒரு பிரதான காரணம் என்பது வரலாறு கற்றுத்தரும் ஒரு பாடமாகும்.

தொட்டதெற்கெல்லாம் பதவி விலக வேண்டும் என்று சொல்வது ஒரு மனோ வியாதியாகும். இதை சொல்ல இவர் யார் என்பது ஒரு புறமிருக்க, இந்த மனோ வியாதிக்கு உரிய மருந்து, எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனிடம் கேட்டால் கிடைக்கும் என இவருக்கு கூறிவைக்க விரும்புகிறேன்.     

அமைச்சர் மனோ கணேசன், மொழி அமுலாக்கல் துறை தொடர்பான அமைச்சை பொறுப்பேற்ற பிறகுதான், “தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அமுலாக்குவது” என்ற விடயம், நாட்டில், ஊடகங்களில், சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும், பேசு பொருளாக மாறியுள்ளது. இது அமைச்சரின் வெற்றியாகும்.

இப்படி இப்போது இந்த விடயம் பற்றி அடிக்கடி பேசப்படுகின்ற காரணத்தால், இந்த பிரச்சினை அதிகரித்து விட்டது போன்ற தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது. இது நல்லதே. இதன்மூலமே இப்பிரச்சினை தீர்வதற்கான களம் உருவாகி வருகிறது.

இவற்றை புரிந்துக்கொள்ள  முடியாத இந்த மாகாணசபை உறுப்பினர் அமைச்சரை பதவி விலக வேண்டும் என கூறுகிறார்.  
அத்துடன் இந்த அமைச்சு, அமைச்சர் மனோ கணேசனுக்காகவே வடிவமைக்கப்பட்டது எனவும் இவர் கூறுகிறார். இது பிழையான தகவல் ஆகும். இந்த அமைச்சு, ஏற்கெனவே ஆட்சியில் இருந்த அரசாங்க காலங்களிலும் இருந்த ஒரு அமைச்சாகும்.

கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த அமைச்சை வாசுதேவ நாணயக்கார எம்பி பொறுப்பேற்று இருந்தார். உண்மையில் இப்படி ஒரு அமைச்சு இருந்த விடயம், இந்த நாட்டில் வாழும் பலருக்கு தெரியவில்லை.

இப்போது, அமைச்சர் மனோ கணேசன் பொறுப்பு ஏற்ற பிறகுதான் இப்படி ஒரு அமைச்சு இருப்பதுவும், அதன் அதிகார வரையறை பற்றியும், இந்த அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் பற்றியும் பேசப்படுகிறது.

இந்த விளக்கங்கள் இந்த மாகாணசபை உறுப்பினரிடம் இல்லை. இப்படி ஒரு அமைச்சு நீண்ட காலமாக முந்தைய ஆட்சிகளிலும் இருந்ததும் அதற்கு ஒரு அமைச்சர் இருந்ததும்கூட  இவருக்கு தெரியவில்லை.இதனால்தான், இத்தகைய ஒரு அமைச்சரை இந்த  வடமாகாணசபை உறுப்பினர் பதவி விலக கூறியுள்ளார்.  

இந்த நாட்டில் “சிங்களம்  மட்டும்” சட்டம் வந்த 1956ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட தமிழுக்கு எதிரான போக்கு 1987இல் திருத்தப்பட்டது. முதலில் 60 வருடங்களும், பின் 30 இழுபறிபட்ட இந்த பிரச்சினைக்கு, ஒரே வருடத்தில் தீர்வு காண முடியாது.  

இதற்கான பல்வேறு காத்திரமான முயற்சிகள் முதன்முறையாக இப்போது எடுக்கப்பட்டு வருகின்றன. எங்கள் அமைச்சுக்கு வந்து பார்த்தால் இந்த மாகாணசபை உறுப்பினருக்கு எமது முயற்சிகள் பற்றி தெரியவரும். கொழும்புக்கு வரும்படி இவரை நாம் அழைக்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .