2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'அரசியல் கைதிகள் விவகாரம்: தீர்வை முன்வைக்க அரசாங்கம் தவறி வருகிறது'

Niroshini   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் மனிதாபிமானத்துடன் கூடிய தீர்வு ஒன்றை அரசாங்கம் முன்வைக்கத் தவறி வருகின்றது என அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் வடக்கு செயற்பாட்டுக்குழுவின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“நிபந்தனை அற்ற முறையில் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இங்கு போராட்டத்தை நடத்தியிருக்கின்றோம். கடந்த ஆட்சி மாற்றத்தின்போதும் அதன் பின்னர் அரசியல் கைதிகள் சிறைகளில் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்ட போதும், தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் ஊடாக அரசியல் கைதிகளின் விடயத்தில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு ஒன்றை தான் முன்வைப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

அவ்வாறு உறுதியளிக்கப்பட்ட போதும், இன்று வரையில் அரசியல் கைதிகளின் விடயத்தில் மனிதாபிமானத்துடன் கூடிய தீர்வு ஒன்றை அரசாங்கம் முன்வைக்கத்தவறி வருகின்றது.

இவ்வாறான ஓர் இக்கட்டான நிலையில் அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்கக்கோரியே நாம் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதனை வலியுறுத்தி கொழும்பில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக அருட்தந்தை சக்திவேல் தலைமையிலும் இங்கு எமது அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பின் செயலணியின் பங்கெடுப்போடும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.. 

அரசியல் கைதிகளின் உண்மை நிலையினை எடுத்துப் பார்த்தால், அவர்கள் கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக விசாரணைகள் இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருப்போராகவே பலர் உள்ளனர்.

இவ்வாறாகத் தடுத்து வைக்கப்பட்டப் பின்னர் மீண்டும் அவர்கள் விடயத்தில் விசாரணைகள் மற்றும் நீதிமன்றப் பொறிமுறைகள் அல்லது புனர்வாழ்வு என்று ஏதாவது ஒன்று திணிக்கப்படுமாயின் அது அவர்களை மீளவும் குடும்பங்களில் இருந்து பிரித்துவைப்பதற்கான உத்தியாகவே அமையும். இது மனிதாபிமானமற்றதும் நல்லாட்சிக்கும் நல்லிணக்கத்துக்கும் குந்தகமான விடயமாகும்.

எனவே, தான் இவ்வாறாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்ற அரசியல் கைதிகளை நிபந்தனைகள் எதுவுமற்று விடுவிக்க நாம் கோருகின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சித்திரவதைகள் ஊடாக பெறப்பட்ட வாக்குமூலங்களை, அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் அரசியல் கைதிகள் குற்றஞ்சாட்டப்படுகின்றனர். பலர் நீங்கள் குற்றத்தை செய்ததாக கூறினால் விடுவிக்கப்படுவீர்கள் என கூறப்பட்டு பொய்யான வாக்குமூலங்கள் வாயிலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கும் மேலாக புரியாத மொழியில் விசாரணை நடத்தி குற்றங்களை செய்தார்கள் என கைதிகளிடம் இருந்து எழுத்துமூலம் பெற்றுள்ளனர். இவற்றை விட அநியாயங்களும் கொடுமைகளும் இருக்க முடியாது.

இலங்கையில் சித்திரவதைகள் வாக்குமூலங்களைப் பெறுவதில் அடிப்படையாக இருக்கின்றது என்ற விடயம் சர்வதேச அளவில் கூட உறுதிப்படுத்தப்பட்டதொன்றாகவுள்ளது. அவ்வாறு இருக்கையில் அரசியல் கைதிகளை எவ்வாறு இந்த அரசாங்கம் குற்றவாளியாக இனங்காணுகின்றது எனக் கேள்வி எழுப்புகின்றோம்.  அடுத்து பயங்கரவாதச் சட்டத்தின் அடிப்படையில் அரசியல் கைதிகளை தடுத்து வைத்தள்ளனர். இப் பயங்கரவாதச் சட்டம் மிகவும் கொடுங்கோலான அருவருக்கத்தக்க ஒன்று என்பதை உலக அளவில் மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அவ்வாறிருக்கும் போது அவ்வாறான ஒரு சட்ட ஏற்பாடுகளுக்கு ஊடாகதான் எம்மவர்களைத் தடுத்து வைத்துள்ளனர்.

இப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை ஒட்டுமொத்தத்தில் நீக்கி அனைத்து அரசியல்கைதிகளையும் விடுவிக்க நாம் கோருகின்றோம். அநியாயங்களை ஒப்பிட்டுப்பார்த்தால் அரசியல் கைதிகளைத் தடுத்து வைத்திருக்கின்ற அரசாங்கம்தான் குற்றவாளி“ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .