2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

நம்பிக்கை தரும் பிள்ளைப்பேறு

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாற்பது ஆண்டுகளுக்கு முன், மறுமணம் அல்லது தத்தெடுப்பது என்ற இரண்டு வாய்ப்புகளே குழந்தையின்மைக்கு தீர்வாக இருந்தன. ஆனால், ஐ.வி.எப் -இன்விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் எனப்படும் செயற்கை முறையில் கருத்தரித்தல் என்பது, 1979இல் லுாயிஸ் பிரவுன் பிறந்ததை அடுத்து, நிலைமை  முற்றிலும் மாறிவிட்டது.  

கருக் குழாயில் பிரச்சினை, அடைப்பு, கருப்பையில் தொற்று உட்பட குழந்தையின்மைக்கான பெண்களின் பல பிரச்சினைகளுக்கு, ஐ.வி.எப் முறையில் தீர்வு கிடைத்தது.

ஆணின் குழந்தையின்மைக்கும், 20 ஆண்டுகளாக நவீன மருத்துவத்தில் தீர்வு உள்ளது. இது, நவீன மருத்துவ சிகிச்சை முறையாக இருந்தாலும், முதல் முயற்சியிலேயே, 100 சதவீதம் வெற்றி கிடைத்து விடுவதில்லை.

குழந்தையின்மை என்று உறுதியானவுடன், ஐ.வி.எப் செய்து கொள்ளலாம் என்று எதைப் பற்றியும் யோசிக்காமல், முடிவு செய்யக்கூடாது. செயற்கைக் கருத்தரித்தலில், அடிப்படையான சில விடயங்களையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

நாற்பது வயது பெண்ணுக்கு, தன் கரு முட்டையிலிருந்து இயற்கையாகக் குழந்தை பெறும் சாத்தியம், 10 சதவீதம் மட்டுமே உள்ளது. ஐ.வி.எப் செய்தாலும், 20 சதவீதம் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளது.

பெண் குழந்தை, தாயின் வயிற்றில் நான்கு வாரக் கருவாக இருக்கும் போது, 60 மில்லியன் கரு முட்டைகளைக் கொண்டிருக்கும். அக்குழந்தை பிறக்கும் போது, அந்த எண்ணிக்கை 20 இலட்சமாகக் குறையும். பருவமடையும் வயதில், 2 இலட்சமாகக் கரு முட்டைகள் குறைந்துவிடும்.

சராசரியாக, 13 வயதில் பருவமடைந்து, மாதவிடாய்க் காலம் முழுவதும் 300 - 400 கரு முட்டைகள், மாதம் ஒன்று என்ற கணக்கில் முதிர்ந்து வெளியில் வரும். மற்ற முட்டைகள் அனைத்தும், முழுமையாக வளர்ச்சி அடையாமல், அழிந்து விடும். இது, இயற்கையிலேயே நடக்கும் விடயமாகும்.

இப்படி, முழுமையடையாமல் அழியும் கரு முட்டைகளை, சிதையாமல் முழு வளர்ச்சியடைய வைப்பதற்கு, தற்போது நிறைய நவீன மருந்து, மாத்திரைகள் உள்ளன.

கரு முட்டைகளின் வளர்ச்சி, மரபியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக, சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இதனால் தான், சில பெண்களுக்கு, 40 வயதிலும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல், கரு முட்டைகள் நல்ல வளர்ச்சியுடன் இருக்கும். சிலருக்கு, 30 வயதிலேயே வளர்ச்சி குறையத் தொடங்கும்.

பி.சி.ஓ.டி எனப்படும் கருக்குழாயில் நீர்க்கட்டி இருப்பவர்களுக்கு, ஐ.வி.எப் செய்வர். இது, தேவை இல்லாதது. நீர்க்கட்டியைச் சரி செய்தால் போதும். இயற்கையாகவே குழந்தைபெற முடியும். வளர்ச்சி அடையாத கரு முட்டைகளே, நீர்க் கட்டிகளாகத் தங்கி விடுகின்றன.

இதனால், சீரற்ற மாதவிடாய், பல மாதங்கள் மாதவிடாய் வராமல் இருப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தேவையான மருந்துகளோடு, உணவுப் பழக்கத்தில் மாற்றம், உடற்பயிற்சி என்று வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம், கரு முட்டைகளை வளரச்செய்வது தான் இதற்கு தீர்வு.

உதிரக் கட்டிகளால் பாதிப்பு இருந்தாலும், அந்தப் பிரச்சினையை சரி செய்த பின், ஐ.வி.எப் செய்வதே சரியானது.
இடுப்பெலும்பு, குடல், கருக் குழாய் பழுதானதால் ஏற்படும் தொற்றுகளால், கருக் குழாய்க்கு இரத்தம் செல்வது தடைப்பட்டு, கரு முட்டைகளை அழித்துவிடும். எண்ணிக்கையும் குறையும்.

இந்தத் தொற்று, கர்ப்பப் பைக்கு பரவினால், ஆரோக்கியமாக இருந்தாலும் கருப்பையில் கருவின் ஒட்டி வளரும் தன்மை குறைவாகும். தொற்றுக்களின் தாக்கத்தில், கருக் குழாய் பழுதாகி வீங்கிவிடும். இந்த நிலையில், ஐ.வி.எப் செய்வது பலன் தராது.

இரத்தச் சோகை, புரதச் சத்துக் குறைவு போன்ற சத்துக் குறைபாடுகளைச் சரி செய்து, கட்டுக்குள் வைத்த பின், ஐ.வி.எப் செய்ய வேண்டும்.

டொக்டர் ஜெயராணி காமராஜ்
மகளிர் மற்றும் மகப்பேறு
சிறப்பு மருத்துவர்.
ஆகாஷ் குழந்தையின்மை மருத்துவ மய்யம், சென்னை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .