Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது பழமொழி. ஆனாலும் 'தினமும் நோயுற்று வலியோடு வாழவேண்டியதே தலைவிதி' என்று அனேகமானோர் அங்கலாய்ப்பதே புதுமொழி என எண்ணத்தோன்றுகிறது.
இருப்பு - இலட்சியம் என்பவற்றுக்கிடையிலான இடைவெளியை இல்லாமல் செய்வதற்காக, இயந்திர வாழ்க்கை வண்டியை மிக வேகமாகச் செலுத்த வேண்டிய இக்கட்டான கட்டத்திலேதான்; உலகில் அதிகளவானோர் இருக்கிறார்கள்.
வாழ்கை-நோய்கள் என்ற வட்டத்தின் தூரமும் அவ்வட்டத்தை மனிதன் சுற்றியோடுகின்ற காலமும் ஒவ்வொரு படிநிலைகளில்; அம்மனிதன் சந்திக்கின்ற இன்ப துன்பங்களுமே ஒவ்வொருவரின், சுகாதாரமானதும் மற்றும் சுகாதாரமற்றதுமான வாழ்க்கைப் பகுதிகளின் விகிதாசாரத்தைக் கணித்து அவர்களுடைய வாழ்கையின் தேறிய முடிவை இன்பமானதா?, துன்பமானதா? என்று நிர்ணயிக்கிறது.
ஒரு நாளில் இரவும் பகலும் எவ்வாறு பிரிக்கமுடியாமல், மாறிமாறி வருகிறதோ, அவ்வாறே ஒவ்வொரு மனிதனின் வாழ்நாளிலும் நோயுறுகின்ற நிலையும் அதிலிருந்து மீளுகின்ற நிலையும் மாறிமாறி நிகழ்கின்றன.
இருந்தபோதிலும் அனேகமான நோய்களின் பிடிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் தற்பாதுகாத்துக்கொள்ளுகின்ற அல்லது பாதுகாக்கப்படுகின்ற உத்திகளும் ஒவ்வொரு மனிதனின் வாழ்கை வட்டத்தின் மாற்றுப் பாதைகளாகவும் இருக்கின்றன.
இப்பாதைகளில் பயணிக்கக் கற்றுக்கொண்டவர்கள் தங்களது வாழ்க்கை வட்டத்தின் அதிகமான தூரத்தையும் அனேகமான நேரத்தையும் வாழ்க்கை வண்டியின் இன்பமான இருக்கையில் இருந்தே பயணிக்கிறார்கள்.
பொதுவாக நோய் என்பதும் நோயாளி என்பதும் பின்வரும் கொள்கை விளக்க அடிப்படையிலேதான் குறிப்பிடப்படும்.
ஒருவர் தன்னுடைய வழமையான உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக செயற்பாட்டு நிலைகளிலிருந்து விலக்கப்பட்டு அல்லது விலகிச்சென்று மேற்கூறிய விடயங்களில் அசாதாரண நிலையை அடைவதனையே, அவர் நோய்வாய்ப்படுகின்றார் அல்லது நோயாளியாக மாறுகின்றார் என்றும் அவ்வாறான நிலையை ஏற்படுத்துகின்ற ஏதுவே நோய் என்றும் கொள்ளப்படும்.
இன்னும் சுருங்கக்கூறின் ஒருவர் தன்னுடைய இலகு நிலையிலிருந்து இலகுவற்ற நிலையை அடைதலே நோய்வாய்ப்படல் என்று கொள்ளப்படுகின்றது.
அடுத்து, இன்று உலகிலே அனைவரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்ற நோய்களை, அவற்றின் தொற்றுத்திறனை அடிப்படையாகக் கொண்டு, தொற்றுகின்ற நோய்கள் தொற்றா நோய்கள் என இரு பிரிவுகளுக்குள் உள்ளடக்கலாம்.
இன்னுமொரு புறத்தில், குறிப்பாக தொற்று நோய்கள் பற்றி வரைவிலக்கணப்படுத்துகின்றபோது நோய்க்காரணி, சூழல் விருந்து வழங்கியாகிய மனிதன் என்பவற்றுக்கிடையிலான இடைத்தாக்கத்தின் சமநிலை குழம்பிய நிலையே நோய்வாய்ப்படுதல் என்று கொள்ளப்படுகிறது.
பொதுவாக, தொற்றுகின்ற நோய்கள், தொற்றுநோய் கிருமிகளின் மூலம், ஒரு மனிதனிலிருந்தோ மற்றும் விலங்குகள், பறவைகளிலிருந்தோ அல்லது தொற்றுகைக்குட்பட்ட பொருட்களிலிருந்தோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொற்றுகையின் ஆளுகைக்குட்படக்கூடிய இன்னுமொரு மனிதனை அடைந்து, அம்மனிதனை நோயாளியாக்குகிறது.
அதேபோன்று தொற்றாத நோய்களும் ஒவ்வொரு மனிதனின், ஒவ்வாத வாழ்க்கைமுறை காரணமாக அவர்களுக்குள்ளேயிருந்தே ஊற்றெடுக்கின்றன.
பொதுவாக ஒரு நோய் பற்றிப் பேசுகின்றபோது, அது தொற்று நோயாயினும் சரி, தொற்றா நோயாயினும் சரி, அந்நோய் சார்ந்த அடிப்படை விடயங்கள் கவனத்திலெடுத்து, அந்நோயை குணப்படுத்தவதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படும்.
முதலில் தொற்று நோய்கள் பற்றிய பொதுவான விடயங்களை ஆராய்வோமாக இருந்தால், தொற்று நோய்கள் அவற்றுக்குரிய காரணிகளான வெற்றுக்கண்ணுக்கு புலப்படக்கூடிய அங்கிகளினாலும் மற்றும் வெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத அங்கிகளினாலும் அவற்றுக்கான சரியான சந்தர்ப்ப சூழ்நிலையில் அவ்வங்கிகளின் திட்டமான விருந்து வழங்கிகளின் மீது மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட தாக்குதலாகும்.
இத்தாக்குதல்களில் சில, விலங்கு விசர் நோய் போன்ற நூறுவீதம் இறப்பை ஏற்படுத்துகின்ற தாக்குதலாகவும் இன்னும் சில தொற்றுக்கள், பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதும் அதிகளவானோரை நோய்வாய்ப்பட வைக்கின்றதுமான தாக்குதல்களாகவும் உதாரணமாக டெங்குத்தொற்றானது பல்வேறு வீரிய மட்டத்தைக் கொண்ட, டெங்கு காய்ச்சல், டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் மற்றும் டெங்கு அதிர்ச்சி காய்ச்சல் போன்ற வடிவங்களையுடைய தொற்றுத்தாக்குதல்களாகவும் இருக்கும்.
இன்னும் சில தொற்று நோய்த்தாக்குதல்கள், ஆழமான, அமைதியான மெல்லக்கொல்லும் விஷத் தாக்குதல்களாகக்கூட இருக்கும். உதாரணமாக, மனித நிர்ப்பீடணக்குறைபாட்டு வைரசினால் விளைவிக்கப்படும், பெற்ற நிர்ப்பீடணம் இழக்கப்படுகின்ற நோய் என்பதனைக் குறிப்பிடலாம். இந்நோயானது இன்றளவிலும் மருத்துவத்துறைக்கு மிகச்சவாலான நோயாகவே நோக்கப்படுகிறது.
ஒரு நோயாளியை அவரது இலகுவற்ற நிலையிலிருந்து, உடல், உள மற்றும் சமூக ரீதியான இலகுவான நிலைக்கு மீளத்திருப்புக்கின்ற நுட்பங்களை உள்ளடக்கிய பொறிமுறையினையே சிகிச்சை என்று குறிப்பிடுகின்றோம்.
மேலும் சிகிச்சை முறையானது பின்வரும் வகைகளாக வகுக்கப்படுகிறது. அவையாவன நோய் அறிகுறிச் சிகிச்சை, உடல் மீள் கட்டுமான சிகிச்சை மற்றும் திட்டமான சிகிச்சை என்பனவாகும்.
பொதுவாக முதலில் எந்தவொரு நோய்க்கும் அறிகுறிச்சிகிச்சைகளே வழங்கப்படும். காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் வயிற்றோட்டம் என்பன, அதிகமான தொற்று நோய்களின் அறிகுறிகளேயன்றி, அவை நோய்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும். உதாரணமாக அவ்வறிகுறிகள், டெங்குத்தொற்று, மலேரியாத் தொற்று, பறவைக்காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் ஏற்படலாம். பொதுவாக மேற்குறிப்பிடப்பட்ட சில நோய் அறிகுறிகளையும் அவற்றின் தொடர் விளைவுகளையும் அகற்றுகின்ற அல்லது கட்டுப்படுத்துகின்ற நோக்கின் அடிப்படையிலே உடனடியாக அறிகுறி சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.
அதேபோன்றுதான், நோயாளியின் உடலிலிருந்து நீரிழப்பு மற்றும் கனியுப்புக்கள் இழப்பு என்பனவும் ஏற்பட்டு, பொதுவாக அவரை நிலைகுலைவுள்ள நிலைக்கு மாற்றிவிட எத்தனிக்கும்.
இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் அவரை நிலைநிறுத்துவதற்கு அக்கனியுப்புக்கள் அடங்கிய திராவகங்களை உட்செலுத்துவதன் மூலம், அவருடைய இயல்பு நிலையை மீளக்கட்டியெழுப்பலாம்.
இத்தனைக்கும் மேலாக இவை எல்லாம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், அவற்றுக்கு சமாந்தரமாக அந்நோயாளியின் பகுப்பாய்வு மாதிரிகளான இரத்த மாதிரி, சளி மாதிரி, மலமாதிரி போன்றன மிக அவதானமான முறையிலே பொருத்தமான மருத்துவ ஆய்வுகூடங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் மூலம் அந்நோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டு, அந்நோய்க் காரணிகளை அழித்தொழிப்பதற்கான சிகிச்சைமுறை மேற்கொள்ளப்படும். மொத்தத்தில் நோயாளியை அவரது இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான ஒட்டுமொத்த முயற்சியே சிகிச்சையாகும்.
அடுத்து தொற்றா நோய்களைப்பற்றிய விடயங்களை நோக்குவோமாயின், அவை தொற்று நோய்களைப் போன்று ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தப்படமுடியாத தன்மையுடையவை.
தொற்றா நோயினால் பாதிக்கப்படுகின்ற நோயாளியானவர், அவருடைய வாழ்க்கைமுறை செயற்பாடுகளால் ஏற்படுத்தப்படும் பழக்க வழக்க நிலைமாற்றத்தினால் அவருடைய உடம்புக்குள் நிகழும், பல்வேறு வகையான மூலக்கூற்று இரசாயன இடைத்தாக்கங்களின் மூலம் அவர், அவருடைய இலகு நிலையிலிருந்து இலகுவற்ற நிலைக்கு உந்தப்பட்டு, தொற்றா நோயொன்றினால் பீடிக்கப்பட்ட நோயாளியாக மாறுகின்றார்.
அப்படியென்றால் இந்தக் கட்டுரையின் தலைப்புக்கும் தொற்றா நோயின் விளக்கத்துக்குமான தொடர்பு முரண்படுகிறதே என்று நீங்கள் கேட்பதும் புரிகிறது. அதற்குரிய தர்க்க ரீPதியான விளக்கங்களைக் கீழ்வரும் பந்திகளிலே பார்க்கலாம்.
தொற்று நோய்களோடு ஒப்பிடுகையில், தொற்றா நோய்களுக்கான சிகிச்சை முறைகளை அடையாளப்படுத்துவதும் வழங்குவதும் சற்று இலகுவானதாக இருக்கும். ஏனெனில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவற்றுக்கான ஏது நிலைகள் அல்லது காரணிகளும் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான காரணிகளும் ஒன்றாகவே இருக்கும்.
அவற்றைப் பின்பற்றுதலும் அவற்றிலிருந்து விடுபடுதலுமே அந்தந்தத் தொற்றா நோய்களுக்கான காரணிகளாகவும் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான காரணிகளாகவும் அமையும். உதாரணமாக புகைப் பிடிக்கின்ற ஒருவர், நுரையீரல் அல்லது சுவாசப்பை புற்று நோய், இருதய நோயினால் பாதிக்கப்படுகின்ற தன்மை புகைப் பிடித்தல் பழக்கமில்லாத ஒருவரோடு ஒப்பிடுகின்றபோது அதிகமாக இருக்கும்.
அதேபோன்று தொடர்ச்சியாக மதுவருந்தும் ஒருவர், மதுவினால் ஏற்படும் ஈரல் அழற்சியினால் அவதியுறுகின்ற நிலை, மதுப்பழக்கமற்ற ஒருவரோடு ஒப்பிடுகையில் மிக அதிகமாகவேயிருக்கும்.
மேலும், சமநிலையான உணவுப் பழக்கவழக்கங்கள் கொண்ட ஒருவரோடு ஒப்பிடுகின்றபோது, சமனிலையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் கொண்ட ஒருவரே மிக இலகுவில் இரண்டாம் வகை நீரிழிவு நோய், இருதய நோய் போன்றவற்றினால் பாதிக்கப்படுவார்.
பொதுவாக தொற்று நோய்கள் சமூகத்தில் அதிகளவானோரை பாதிக்காத வரையில், அவற்றுக்கான பொது சுகாதார முக்கியத்துவம் பெரிய அளவிலே இல்லாவிட்டாலும் அத்தொற்றுக்களை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் தடுப்பதற்குமான வழிமுறைகளை முன்கூட்டியே மேற்கொள்வதன் மூலம் அவற்றினால் ஏற்படுத்தப்படும் நோய்த்தாக்க இறப்பு வீதங்களை வெகுவாகக் குறைத்துவிடலாம்.
அதேபோன்றே, தொற்றாநோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்புமுறைகள் பற்றி பொதுத்தன்மையான பொறிமுறைகள் இருந்தாலும் அவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பதிலே ஒவ்வொரு நோயாளியினதும் தன்னிலையான தனித்துவக் குணவியல்புகள் மற்றும் வேறுபாடுகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே முட்டுக்கட்டைகளாக அமைகின்றன.
இதனால் இவை பாரிய சமூக சுகாதாரப் பிரச்சினைகளாக மாறுகின்ற போக்கை, தற்போதைய சூழ்நிலையில் ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற தொற்றா நோய்களின் அளவுகள் இன்று இலங்கையில் மட்டுமல்ல உலக அளவிலும் சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.
விசேடமாக தொற்றா நோய்களில், பொதுவாக தொற்று நோய்களிலே அவதானிக்க முடியாத, அடிமைப்படுகின்ற இயல்பு நிலையை காண முடிகிறது. குறிப்பாக புகைப்பிடித்தல், மதுவருந்துதல், போதைவஸ்துப் பாவனை, விரைவுணவு அடிமை, தொடர் இணையப் பாவனை அடிமை போன்றவற்றையும் கூறலாம்.
இவற்றின் மூலமான மனவழுத்தம் மற்றும் மனப்பிறழ்வின் ஊடாக ஏற்படுத்தப்படும் விவகாரங்களாக அல்லது பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்ற தொற்றா நோயின் புதிய பரிணாமமாக பின்வருகின்ற செயற்பாடுகளையும் அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது.
அவையாவன சிறுவர் மற்றும் பெண்கள் மீதான இயற்கைக்கு மாறான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் மனவழுத்தத்தினாலான தற்கொலைகள் மற்றும் கொலைகள்.
மேற்கூறிய போதைவஸ்துப் பழக்கம், புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் மதுவருந்தும் பழக்கம் என்பனவும் அவை சார்ந்து மேற்கொள்ளப்படுகின்ற பொதுவான வன்முறைகளும் அவற்றின் பாவனைகளை குறைப்பதற்கான கட்டுப்பாட்டு பொறிமுறைகளையும் தாண்டி அவற்றின் பாவனைகளும் அதன் எதிர்விளைவுகளும் குறைவதற்கு பதிலாக கூடிக்கொண்டே செல்கின்றன.
அத்தோடு ஒருவர், இன்னுமொருவருடைய நல்ல வாழ்க்கை பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதைத் தவிர்த்து, மற்றுமொருவரின் தீய வாழ்க்கை பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கின்ற நிலைமை இன்றைய நாகரிக உலகில் கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது.குறிப்பாக இந்நிலைமை இன்றைய அனேகமான இளைஞர்கள் மத்தியிலே தொற்றாக மாறியிருக்கிறது.
மேற்குறிப்பிடப்பட்ட தீய பழக்க வழக்கங்களால் விளைவாக்கப்படுகின்ற தொற்றா நோய்கள், ஒருவடைய தீய வாழ்க்கைப் பழக்க வழக்கங்களை இன்னுமொருவர் பின்பற்றி, அவரும் அக்குறிப்பிட்ட தொற்றா நோய்களினால் பீடிக்கப்படுகின்றபோது, தொற்றா நோய்களும் தொற்று நோய்களாக பரிணமிக்கின்றனவோ எனப் பயப்படத் தோன்றுகிறது.
ஏனெனில் இவையும், மிக விரைவில் பாரிய சமூக சுகாதார பிரச்சினைகளாக உருமாறி, உலகிலுள்ள ஏனைய பிரச்சினைகள் அனைத்தையும் பின்தள்ளி, உலக சுகாதாரத்துறைக்கு மிகப்பாரிய சவாலாக மாறுவதோடு, மனித இனத்தின் இருப்பை மிக விரைவிலே இல்லாமற் செய்துவிடுமோ என்ற நியாயமான அச்சத்தையும் எழுப்புகிறது.
மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் கவனத்திலெடுத்து, ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கை வட்டத்தின் ஒவ்வொரு படிநிலைகளையும் இன்பப் புள்ளிகளாக மாற்றி வாழ்வதாக இருந்தால், எல்லோருடைய வாழ்க்கையும் ஏதோவொரு விதத்தில் பேரின்ப பெரு வாழ்வாகவே அமையும்.
இருந்தபோதிலும் எல்லோருடைய வாழ்க்கைப்புத்தகத்தின் எல்லாப் பக்கங்களும் ஏதோவொரு காரணத்துக்காக, நேர்த்தியான பக்கங்களாகவன்றி, சில பக்கங்கள் நடைமுறையில் கிழிந்தே காணப்படுகின்றன.
எவ்வாறாயினும் நடைமுறை வாழ்க்கையில் கடினம் என பலர் நினைக்கின்ற 'நோய்களால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதைக்காட்டிலும் நோய்களால் பீடிக்கப்படாமல் பாதுகாத்துக்கொள்வதே சிறப்பானது'
(தொடரும்...)
Dr.கார்த்திகேசு கார்த்தீபன்
விரிவுரையாளர்
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்
கிழக்கு பல்கலைக்கழகம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
2 hours ago
2 hours ago