Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Administrator / 2017 மே 02 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
டொக்டர் சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன்
தேசிய வைத்தியசாலை, கொழும்பு
வெப்பத் தாக்கம் என்றால் என்ன?
இன்று இலங்கை, இந்தியா போன்ற வெப்ப வலய நாடுகளை அதிகமாகத் தாக்குகின்ற பொதுவான பிரச்சினை Heat Stroke எனப்படும் அதிக வெப்பத்தினால் உடலில் ஏற்படும் தாக்கங்களாகும். வெப்பத் தாக்கத்தினால் உடல் உறுப்புகளில் அதிக சேதங்களும் அவை தடுக்கப்படாத பட்சத்தில் அல்லது சிகிச்சை வழங்கத் தாமதமாகின்றபோது, வீணான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
அண்மையில், இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில், 110 பாகையில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெப்பத் தாக்கத்தினால், 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் மூளை போன்ற முக்கிய அங்கங்கள் பாதிப்படைகின்றன. அதேநேரம், இது ஆரோக்கியமான இளம் விளையாட்டு வீரர்களையும் விட்டு வைப்பதில்லை என்பது கண்கூடு.
வெப்பத் தாக்கத்தின் உடனடி விளைவுகள் எவை?
அதிக வெப்பநிலையின் நீடித்த வெளிப்பாடு அல்லது வெய்யிலின் கீழ் அதிக நேரம் நிற்றல் மற்றும் மனித உடல் உழைப்பின் விளைவாக, பொதுவாக எங்கள் உடலின் வெப்ப நிலையானது, வெப்பமண்டலத்தினால் ஏற்படக்கூடிய வெப்பத் தாக்கத்தினால் மனித உடலின் வெப்பநிலை 104 பாகைக்கும் (40 பாகை) அல்லது அதற்கு அதிகமான வெப்ப நிலைக்கும் உயருகின்றது. இதனால்,மனித உடலில், காயம் போன்ற வெப்பமண்டலத்தின் மிகவும் கடுமையான தாக்கங்கள் ஏற்படலாம்.
வெப்பத் தாக்கத்துக்கு உள்ளான மனிதனின் நரம்பு மண்டலத்துக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. சிகிச்சையளிக்கப்படாத நிலையில், வெப்பம் வேகமாக மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் தசைகள் போன்றவற்றைச் சேதமாக்குகின்றது.
ஏற்படுகின்ற சேதம், வழங்கப் படுகின்ற நீண்ட சிகிச்சையைத் தாமதமாக்குகிறது.இதனால் கடுமையான சிக்கல்கள் மனித உடலில் எழுவதோடு மரணத்தின் ஆபத்து வீதமும் அதிகரிக்கும். ஏனெனில், இவ்வாறு உடல் வெப்பமானது கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும்போது, மனித உடலில் வெப்பச் சமநிலையைப் பேணும் கட்டுப்பாட்டு அமைப்பு,செயலிழக்க வழிவகுக்கும்.
வெப்பத் தாக்கத்தின் அறிகுறிகள் எவை?
1. வெப்பத் தாக்கத்தின் முதலாவது அறிகுறி, பாதிப்படைந்தவரின் உடல் வெப்பநிலை அதிகரிப்பாகும். அதாவது 104 பாகை வரை உடல் வெப்பநிலை அதிகரித்துச் செல்லும்.
2. மயக்கம் வருவது போல் உணர்வதும் மயக்கமடைதலும்.
3. இருதய நோவை உணர்தல்.
4. தலைவலி ஏற்படல்.
5. தலைச்சுற்று ஏற்படல்.
6. தலை பாரமாக உணர்தல்
7. வெப்பநிலை உயர்ந்தபோதும் குறைவாக வியர்த்தல்.
8. சிவப்பான, சூடான மற்றும் உலர்ந்த சருமம்.
9. தசைப் பலவீனம் அல்லது தசைப் பிடிப்புகள்.
10. வயிற்றுக் குமட்டல் மற்றும் வாந்தி.
11. பலவீனமாகத் துடிக்கும் அதேநேரம்,வேகமான இருதயத் துடிப்பு.
12. விரைவான, ஆழமற்ற சுவாசப் பொறிமுறை அல்லது மூச்சு விடுவதில் சிரமம்.
13. மனக்குழப்பமும் சித்தப் பிரமையான காட்சிகளும் தோன்றல்.
14. மனச் சிந்தனைகளில் திசைதிருப்பல்.
15. அதிர்ச்சியூட்டுதல் போன்ற நடத்தை மாற்றங்கள்.
16. எவ்வாறாயினும், சில நோயாளர்கள், திடீரென எச்சரிக்கை இல்லாமல் திடீர் திடீர் அறிகுறிகளை உருவாக்குவார்கள்.
17. இறுதியில் கோமா அல்லது மயக்க நிலைக்கு உட்படலாம்.
வெப்பத் தாக்கத்துக்கான முதல் உதவிச் சிகிச்சை முறைகள் எவை?
1.யாராவது ஒரு நபர், வெப்பத் தாக்கத்துக்கு உட்பட்டிருக்கிறார் என்று சந்தேகிக்கிறீர்களானால், உடனடியாக வைத்திய உதவியை அழைக்கவும். (அம்பியுலன்ஸ் சேவை 1919 ஐ அழைக்கவும்) அல்லது அந்த நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும். மருத்துவ உதவி பெறுவதில் ஏற்படும் எந்தத் தாமதமும் அபாயகரமானதாக அமையலாம்.
2. உதவியாளர்கள் வரும் வரை காத்திருக்கும் நேரத்தில், தொடக்க முதலுதவியாக, பாதிப்படைந்தவரை, ஒரு குளிரூட்டப்பட்ட சூழலுக்கு நகர்த்தவும். முடியாத பட்சத்தில் குறைந்தபட்சம் ஒரு குளிரான, நிழற் பிரதேசத்துக்கு கொண்டு செல்லவும்.
3. அவதானத்துடன் தேவையற்ற ஆடைகளை நீக்கவும்.
4. இயலுமாயின் பாதிப்படைந்த நபரின் உடல் வெப்பநிலையை அளவிட்டு, 101 முதல் 102 டிகிரி பாரனைட் வரை குளிர்விப்பதற்கான முதல் உதவியை ஆரம்பிக்கவும். (தெர்மோமீட்டர்கள் இல்லை என்றால், முதலில் மற்றவர்களிடம் கேட்டுப் பெறத் தயங்காதீர்கள்).
5. பின்வரும் குளிர்விக்கும் வழிவகைகளை முயற்சிக்கவும். நோயாளிக்குமேலாக விசிறிகொண்டு விசிறுக. தோலின் மேற்பரப்பை பஞ்சு அல்லது ஒரு மெல்லிய துணியை நனைத்து உடற்பரப்பைத் துடைத்து விடுக.
6. நோயாளியின் கைகள், இடுப்பு, கழுத்து மற்றும் பின்புறத்துக்கு ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துங்கள். இந்தப் பகுதிகளில் இரத்த நாடி, நாளங்கள் நெருக்கமாக காணப்படுவதால் இலகுவாக அவர்களின் உடல் வெப்பநிலையைக் குறைத்துவிடலாம்.
7. நீர் குழாயில் வரும் நீர்த்தாரை மூலம் நோயாளியை நனைக்கவும்.
8. இளவயதுடைய நபராக இருப்பின் அல்லது போதியளவு தேகாரோக்கியம் உடையவராக இருப்பின் அல்லது கடுமையான உடற்பயிற்சி செய்து வெப்பத் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தால், நீங்கள் உடனடியாக உடலைக் குளிர்விக்க,ஒரு ஐஸ் குளியலைப் பயன்படுத்த முடியும்.
9. வயதானவர்கள்,நோயாளிகள், இளம் குழந்தைகள், நாட்பட்ட நோயுள்ளவர்கள் போன்றவர்கள் வெப்பத் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தால், வெப்பத் தாக்கம் பாரதூரமாக இல்லாதவிடத்து, இந்த நோயாளிகளுக்கு ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்த வேண்டாம்.அவ்வாறு ஐஸ் பயன்படுத்துவது அவர்களுக்கு ஆபத்தானது.
10. உங்களுக்கு அவசரநிலை பதில் உதவி கிடைக்கத் தாமதமாகிவிட்டால், கூடுதல் அறிவுறுத்தல்களுக்காக மருத்துவமனையின் அவசர உதவிக்கு அழைக்கவும்.
வெப்பத் தாக்கத்துக்கு அதிகளவில் ஆளாவோர்கள் யார்?
1. காற்று குறைவாக வீசும் அல்லது நல்ல காற்றோட்டமில்லாத வீடுகளில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களை, வெப்பத் தாக்கம் அதிகமாகப் பாதிக்கலாம்.
2. தினமும் உடல்நிலைக்குத் தேவையான தண்ணீரைக் குடிக்காதவர்களைப் பாதிக்கலாம் (தினமும் 5 - 6 லீற்றர் நீராகாரம்).
3. நீண்டகால, நாட்பட்ட நோய்களைக் கொண்டவர்கள் பாதிப்படையலாம்.
4. தினமும் அதிகப்படியான மதுபானம் குடிப்பவர்கள்.
5. வெப்பத் தாக்கமானது, சூழலின் வெப்பக் குறியீட்டுடன் வலுவாகத் தொடர்பு கொண்டுள்ளது, இது சூழலின் ஈரப்பதம் மற்றும் காற்றின் வெப்பநிலை ஆகியவற்றின் விளைவுகளோடு இணைந்து உங்கள் உடல்நிலை எவ்வளவு சூடான அளவீட்டைக் காட்டுகின்றது என்பதைப் பொறுத்தது. 60 சதவீதத்துக்கும் அல்லது அதற்கும் மேலான ஈரப்பதம், மனித உடலின் ஈரப்பதத்தை நீக்கிவிடும். இது உங்கள் உடலின் குளிர்விக்கும் தன்மையைத் தடுக்கிறது.
6. சூழலின் வெப்பநிலை,90 டிகிரி அல்லது அதற்கு அதிகமாக உயரும் போது, வெப்பநிலை தொடர்பான நோய் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே, முக்கியமானது வெப்ப அலைகளின் போது, குறிப்பிட்ட வெப்பக் குறியீட்டுக்கு கவனம் செலுத்த வேண்டும், மேலும் முழுச் சூரிய ஒளியின் வெளிப்பாடானது, 15 டிகிரிகளால் வெப்பக் குறியீட்டை அதிகரிக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
வெப்பத் தாக்கத்தோடு தொடர்புடைய பிற ஆபத்து காரணிகளைக் கொண்டவர்கள் யார்?
1. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் ஆவர். ஏனெனில், குறிப்பாக மற்றவர்களைவிட மிகவும் மெதுவாகவே வெப்பத்தை சமப்படுத்தும் பொறிமுறைகள் இவர்களில் நடைபெறுவதால், இவ்விரு வகையினரும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
2. நோயாளியில் ஏற்கெனவே காணப்படும் நோய் நிலைமைகள், குறிப்பாக இதயம், நுரையீரல், சிறுநீரக நோய், உடல் பருமன் அல்லது அதிக எடை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மனச் சிதைவுநோய், அதிகளவு மதுப்பாவனை போன்றவையும் குறிப்பாக ஆதிக்கம் செலுத்துகின்றன.
3. விட்டமின்கள், உணவுப் பதிலீட்டு மாத்திரைகள், சிறுநீர் இறக்கிகள், தூக்க மாத்திரைகள், மயக்கத்தை தரக்கூடிய மருந்து வகைகள், வலி நிவாரணிகள், இதயநோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்துக்குரிய மருந்துகள், மனநல நோய்களுக்கான மருந்துகள், சட்டவிரோத மருந்துகள் போன்ற மருந்துப் பாவனைகள்,வெப்பத் தாக்கத்தின் விளைவுகளை அதிகரிக்கச் செய்கின்றன.
4. நீரிழிவு நோயாளிகளில் ஏற்படும் வெப்பத் தாக்கமானது குறைத்து மதிப்பிட வாய்ப்புள்ளது. எனவே போதியளவு கவனம் எடுக்கப்பட வேண்டும்.
5. உங்களில் காணப்படும் ஏற்கெனவே உள்ள நோய் நிலைகள் மற்றும் நீங்கள் பாவிக்கும் மருந்து வகைகள், தீவிர வெப்பம் மற்றும் ஈரப்பதனைச் சமப்படுத்தும் உங்கள் உடற்திறனை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
6. விளையாட்டு வீரர்கள்.
7. சூரிய ஒளியில் அதிக வேலை செய்யும் நபர்கள்.
8. அதிக நேரம், மோட்டார் கார்களில் உள்ள குழந்தைகள், பிள்ளைகள் அல்லது செல்லப்பிராணிகள்.
வெப்பத் தாக்கத்திலிருந்து எவ்வாறு தப்பிப்பது?
1. சூழலின் வெப்பக் குறியீடானது அதிகமாகக் காணப்படும்போது, நல்ல காற்றோட்டமான மர நிழல் போன்ற சூழலில் இருப்பதே சிறந்தது.
2. தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளியில் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டால், இலகு ரக,வெண்மை வண்ணம் கொண்ட, தளர்வாகப் பொருந்தக் கூடிய ஆடைகளை அணியுங்கள்.
3. முப்பது அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு சூரிய பாதுகாப்பு காரணி (SPF) காணப்பட்டால், ஒரு சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவும்.
4. அதிகளவான திரவ உணவுகளை உள்ளெடுக்கவும். சாதாரணமாக உடலிலேற்படும் நீரிழப்பைத் தடுக்க, குறைந்த பட்சம் எட்டுக் கண்ணாடி, தண்ணீர், பழச் சாறு அல்லது காய்கறிச் சாறு தினம் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
5. வெப்பம் தொடர்பான நோய்கள், உப்புக் குறைபாட்டினால் ஏற்படக்கூடும் என்பதால், தீவிர வெப்பம் நிகழும் காலத்தில் நீருக்கு அன்றாடம் உப்புக் கரைசல்களையும் சேர்த்து சக்தி நிறைந்த விளையாட்டுப் பானமாக மாற்றி அருந்துவது நல்லது.
6. உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக இரண்டு மணி நேரத்துக்கு முன், திரவ உணவாக 24 அவுன்ஸ் குடிக்க வேண்டும். மேலும் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு, மற்றொரு எட்டு அவுன்ஸ் தண்ணீர் அல்லது விளையாட்டுப் பானங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சியின் போது, நீங்கள் ஒவ்வொரு இருபதாவது நிமிடமும் நீராகாரம் சாப்பிட வேண்டும்.
7. வெளிப்புற நடவடிக்கைகளை மறுசீரமைத்தல் அல்லது இரத்துசெய்யவும். முடிந்தால், காலையிலேயோ அல்லது சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகோ, உங்கள் வெளிப்புற வேலைகளுக்கான நேரமாக மாற்றவும்.
வெப்பத் தாக்கத்தை கண்டறிய எவ்விதமான உத்திகளைப் பயன் படுத்தலாம்?
1. உங்களின் சிறுநீரின் நிறத்தைக் கண்காணியுங்கள். கடுமையாக இரத்த நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, வெப்பத் தாக்கத்தின் அறிகுறியாகும். வெள்ளை நிறத்தில் சிறுநீரைப் பராமரிக்க போதுமான அளவு திரவங்களைக் குடிக்க வேண்டும்.
2. உடல் செயல்பாடுகளுக்கு முன்பும் பின்பும் உங்கள் எடையை அளவிடுவதனால், நீர் இழப்பைக் கண்காணிக்க முடியும். இதன்மூலம் எவ்வளவு நீராகாரம் குடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது.
3. காபின் அல்லது ஆல்கஹாலைக் கொண்டிருக்கும் திரவங்களைத் தவிர்க்கவும், ஏனென்றால், இவ்விரு தாதுப் பொருட்களும் அதிக திரவங்களை இழக்கச் செய்யலாம். இதன் மூலம் வெப்பத் தாக்க நோய் மேலும் மோசமடையலாம்.
4. அதிகளவில் விளையாட்டுப் பானங்கள் அல்லது பழச்சாறுகளைக் குடிக்க வேண்டும்.
5. உங்களுக்கு, வலிப்பு நோய் அல்லது இதயம், சிறுநீரகம் அல்லது கல்லீரல் தொடர்பான நோய்கள் இருந்தால், திரவ பானங்களின் உட்கொள்ளலை அதிகரிக்கும் முன் உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள்.
6. குளிரூட்டப்படாத வீட்டில் நீங்கள் வாழ்ந்தால், ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இரண்டு மணிநேரமாவது ஜன்னல்கள் அல்லது கதவுகளைத் திறந்து விடுங்கள்.
7. உங்கள் கட்டடத்தின் இரு பக்கங்களிலும் குறுக்கு வழியில் காற்றோட்டம் உருவாக்க, முடியுமாயின் இரவில் ஜன்னல்கள் திறந்து வைக்கவும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
27 minute ago
34 minute ago
2 hours ago