Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Administrator / 2015 நவம்பர் 16 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்குப் பல்கலைக்கழக, சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட பீடாதிபதியும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணருமான, வைத்திய கலாநிதி K.T. சுந்தரேசன் உடனான மருத்துவ நேர்காணல்.
நீரிழிவு: நீங்கள் அறிய வேண்டியவை
உலகில் 347 மில்லியன் மக்களும், இலங்கையில் 2 மில்லியன் மக்களும் நீரிழிவினால் (Diabetes) பீடிக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையில் 2 மில்லியன் மக்கள் முன் நீரிழிவினால் (Prediabetes) பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த 10 ஆண்டுகளில், நீரிழிவினால் எற்படுகின்ற இறப்புக்கள் 50% க்கும் அதிகமாகவும், நீரிழிவானது 2030ஆம் ஆண்டில், மனித இறப்புக்கான 7ஆவது காரணியாக அமையுமெனவும் எதிர்வு கூறப்படுகின்றது.
முதலாம் வகை நீரிழிவு, இன்சுலின் சுரப்புக் குறைபாட்டினாலும், இரண்டாம் வகை நீரிழிவு வினைத்திறனற்ற இன்சுலின் பயன்பாட்டினாலும் ஏற்படுகின்றது.
இரண்டாம் வகை நீரிழிவு (90%), முதலாம் வகையை (10%) விடவும் கணிசமான அளவில் அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. சாதாரண குருதிக் குளுக்கோஸ் மட்டத்தை விட உயர்ந்தும், நீரிழிவு நோய் கணிப்பு குளுக்கோஸ் மட்டத்தை விடக் குறைந்தும்;, கர்ப்ப காலத்தில் நிலவுகின்ற அசாதாரண குருதிக் குளுக்கோஸ் நிலை கர்ப்பகால நீரிழிவு எனவும் குறிப்பிடப்படுகிறது. 80 சதவீதமான நீரிழிவு மரணங்கள், குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளிலேயே நிகழ்கிறது.
முறையான நீரிழிவு கட்டுப்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறுகின்ற நோயாளிகளில், பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக மற்றும் நரம்புக் கோளாறுகள், பார்வையிழத்தல் மற்றும் உடலுறுப்பிழத்தல் போன்ற தீவிரமான பக்க விளைவுச் சிக்கல்கள் ஏற்படும். நாளாந்த 30நிமிட மத்திய தர உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய உணவுப் பழக்க வழக்கங்கள், நீரிழிவினால் பீடிக்கப்படுவதை, கணிசமான அளவிலே தடுக்கின்றன.
நீரிழிவு என்றால் என்ன?
8 மணி நேர உணவு தவிர்ப்பின் பின்னர் எடுக்கப்படுகின்ற இரத்த மாதிரியில், குளுக்கோசின் அளவு 126 mg/dlக்கு அதிகமாகவும், நீரிழிவின் பொதுவான அறிகுறிகளான, அடிக்கடி அதிகளவில் சிறுநீர் கழித்தல், அதிக தாகம் மற்றும் பசி, கடுமையான சோர்வு மற்றும் உடல் எடை இழப்பு போன்றவற்றையுடைய நிலை. அல்லது, எழுந்தமானமாக எடுக்கப்படுகின்ற இரத்த மாதிரியில், குளுக்கோசின் அளவு 200 mg/dl இற்கு அதிகமாகவும், நீரிழிவின் பொதுவான அறிகுறிகளையும் கொண்டிருக்கும் நிலை.
அல்லது, எவ்வித நீரிழிவு அறிகுறிகள் அற்ற நிலையிலும், உணவு தவிர்ப்பின் பின்னர், இரு வேறு நாட்களில் எடுக்கப்படுகின்ற இரத்த மாதிரியில் குளுக்கோசின் அளவு 126 mg/dl க்கு அதிகமாக இருக்கின்ற நிலை.
உணவில் காணப்படுகின்ற குளுக்கோஸ், உடலுக்கு உகந்ததாக இருக்கையில், எவ்வாறு பிரச்சினையாக மாறுகிறது?
மனித உடலிலின் அனேகமான உறுப்புக்கள் புரதம் மற்றும் கொழுப்பினை சக்தி மூலங்களாகப் பயன்படுத்துகின்ற போதிலும், மூளை மற்றும் இரத்த சிவப்பணுக்கள் குளுக்கோசை மாத்திரமே சக்தி மூலமாகப் பயன்படுத்தும். உட்கொள்ளப்படும் மேலதிகக் குளுக்கோசானது இன்சுலினால், ஈரலில் கிளைக்கோஜன் என்ற பதார்த்தமாக மாற்றப்பட்டு சேமிக்கப்படும். நீரிழிவு நோயாளிகளில், இன்சுலின் சுரப்பு மற்றும் பயன்படுத்தல் குறைபாடு காணப்படும்.
இந்நிலையில்;, பொதுவாக நுண்ணிய இரத்தக் குழாய்கள் பாதிப்புக்குள்ளாவதோடு,அப்பாதிப்புக்களின் வெளிப்பாடுகள் கண் மற்றும் சிறுநீரகங்களின் தொழிற்பாடுகளை வெகுவாக பாதிக்கும்.
பொதுவாக நீரிழிவு நோயாளிகளின், வினைத்திறனற்ற உணவுக்கட்டுப்பாடு 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழியினைப் போன்று மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகள், பாதப் பராமரிப்புப் பற்றி அதிக அக்கறை கொள்ள வேண்டியதன் அவசியம்?
நீரிழிவு நோயாளிகள், முகத்துக்குக் கொடுக்கும் அளவிலான முக்கியத்துவத்தை பாதப்பராமரிப்பிலும் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும். ஏனெனில், நீரிழிவுப் பாதிப்புக்கு முதலில் முகங் கொடுக்கும் உடல் உறுப்பு பாதமாகும்;.
மேலும், பாதத்திலிருக்கும் நரம்புகளும், இரத்தக் குழாய்களும், உணர்திறன் மற்றும் செயற்பாட்டு பின்னடைவுகளை எதிர் நோக்குவதால், பாதங்களில் ஏற்படுகின்ற காயங்களின் வலிகளை உணர்வதிலும், காயங்கள் மாறுவதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.அத்தோடு நோயெதிர்ப்புச் சக்தி குறைவினால், காயங்கள் நுண்ணங்கி தொற்றுக்குள்ளாகி அழுகல்
நிலையடையும்.
நீரிழிவு நோயாளியின் நிம்மதியான வாழ்கைக்கான மருத்துவ பரிசோதனைகள்?
வைத்திய ஆலோசனையுடனான பின்வரும் மருத்துவ பரிசோதனைகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் 12மணி நேர உணவுத் தவிர்ப்புக்குப் பின்னரும் அதனைத் தொடர்ந்து உணவு உள்ளெடுத்து 2 மணித்தியாலயங்களுக்குப் பின்னரான குருதிக் குளுக்கோசு பரிசோதனைகள்.
ஆறுமாதத்துக்கொரு முறை குருதி கொழுப்பு, ஹீமோகுளோபின்A1C, மின் இதய வரைபு (ECG) பரிசோதனைகள்.
ஒவ்வொரு வருடமும் கண் பார்வை சரியாக இருந்த போதிலும் கண் பரிசோதனை, ஈரல், சிறுநீரகம் மற்றும் பாதப் பரிசோதனைகள்.
நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டில்;, நேர்த்தியான உணவின் முக்கியத்துவம்?
ஆரோக்கிய உணவுக் கட்டுப்பாட்டு முறைதான், நீரிழிவுத் தாக்க விடுதலையின் மிகவும் முக்கியமான முதற்படியாகும். இது 'முள்ளை முள்ளால் எடுப்பது போன்றது'. உணவே பிரச்சினையாகின்ற போது அதற்குரிய தீர்வும் பொருத்தமான உணவாகத்தான் இருக்க முடியும்.
மருந்து மாத்திரைகளால் மாத்திரம் நீரிழிவைக் கட்டுப்படுத்துவது சவாலான விடயமாக இருப்பதோடு, அவற்றினால் ஏற்படுத்தப்படுகின்ற பக்கவிளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதும் சிரமமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கான, உணவுத் தெரிவுகளின் மருத்துவப் பின்னணி?
ஒப்பீட்டளவில் விலங்குணவுகளை விடவும் தாவர உணவுகளே, கணிசமான அளவில் மனித ஆரோக்கிய முன்னேற்றத்துக்குப் பங்களிப்பதாக, பல்வேறு மருத்துவ ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. தாவர உணவுகளில் காணப்படும் பல் வேறு வகை விற்றமின்கள், கனியுப்புக்கள் மற்றும் தாவர ஊட்டச் சத்துக்கள் (Phyto nutrients) என்பன மனித உடற் கலங்களின் மீதான நச்சு இரசாயனத் தாங்கங்களைத் தடுக்கின்ற கருவிகளாக செயற்படுவதோடு, சில தாக்கங்களினால் விளைந்த பாதிப்புகளையும் பழுது பார்த்து, அக்குறிப்பிட்ட உடற் பகுதிகளை மீள் கட்டுமானம் செய்யும்.
நீரிழிவு உணவுக் கட்டுப்பாட்டில், முழுமையான தானிய உணவுகளின் ஆரோக்கிய முக்கியத்துவம்?
சிவப்பரிசி, தினை, வாற்கோதுமை என்பன முழுத் தானியங்களாகவும், வெள்ளை அரிசி மற்றும் வெள்ளைப் பாண் என்பன தீட்டிய தானியங்களாகவுமிருக்கும். தீட்டிய தானியங்களில், பெருமளவிலான விற்றமின்கள், கனியுப்புக்கள் மற்றும் நச்சுத்தன்மை நீக்கிகள் (Antioxidant) என்பன அதிக அளவிலே அகற்றப்பட்டிருப்பதால், அது ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
நீரிழிவு நோயாளிகள், கொழுப்பு உணவுகளை உட்கொள்வது பற்றி உங்களது பார்வை?
பொதுவாக கொழுப்புணவுகளைத் தவிர்ப்பதே ஆரோக்கியமானது. நீரிழிவு நோயாளிகளிடத்தில் காணப்படும் தவறானதொரு எண்ணம் என்னவெனில், பொரித்த உணவுகளான பருப்பு வடை, பயறு மற்றும் கடலை போன்றவற்றில் மாப்பொருள் மிக அரிது என்பதால், அவற்றின் மீதான அவர்களுடைய நாட்டத்தை அதிகரிக்கின்றனர். ஆனாலும் இவற்றில் காணப்படுகின்ற தீய கொழுப்புக்கள் உடற் கலங்களுக்குள் படிந்துவிடுவதனால், கலங்களுக்குள் உள்ளீர்க்கப்படும் குளுக்கோசைக் குறைத்து, குருதியில் குளுக்கோசு மட்டம் உயர்வதற்கான ஏதுவாக அமைந்துவிடுகின்றன.
ஆரோக்கியத்துக்கு அபாயகரமான கொழுப்பு உணவுகள் பற்றி?
பெரும்பாலான இறைச்சிகள் மற்றும் வெண்ணெய் (Butter) போன்றவற்றிலுள்ள நிரம்பிய கொழுப்புக்கள், செயற்கை வெண்ணெய் (Margarine) போன்றவற்றில் காணப்படும் ஐதரசன் ஏற்றப்பட்ட கொழுப்புக்கள்;, பொரித்த உணவுகளில் காணப்படும் மாறுபக்கக் கொழுப்புக்கள் என்பன மனித ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிப்பனவாகும்.
நீரிழிவானது வருமுன் தடுக்கப்படக்கூடிய வியாதியா?
நிச்சயமாக, முக்கியமான சில ஆரோக்கிய வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுகின்ற போது, ஒரு மனிதனை நீரிழிவுத் தீண்டலில் இருந்து முற்று முழுதாகப் பாதுகாத்துக் கொள்வது மிக எளிது.
நீரிழிவிலிருந்து முற்று முழுதான விடுதலை பெற முடியுமா?
நீரிழிவு என்பது கட்டுப்பாட்டுமுறைகளைச் சரியாகப் பின்பற்றாதவிடத்து, முன்னகர்ந்து பாரிய பக்கவிளைவுச் சிக்கல்களை உருவாக்கும். இருந்த போதிலும் சரியான கட்டுப்பாட்டு முறைகளை ஒழுங்காக பேணுமிடத்து இலகுவாக பின்னகர்த்தலாம்.
குறிப்பாக இப்பின்னகர்த்தல் புதிதாக இனங்காணப்பட்ட நீரிழிவு நோயாளிகளில் இலகுவாக இருப்பதோடு, மருத்துவ ஆலோசனையுடனான அனைத்துக் கட்டுப்பாட்டு முறைகளையும், குறிப்பாக உணவுக்கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றிய நாட்பட்ட நோயாளிகளையும் பெருமளவில் குணப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆகமொத்தத்தில் உணவினால் உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சினைக்கு உணவேதான் தீர்வாக முடியும் என்ற உண்மையை மருத்துவ ஆய்வுகளே நிரூபித்திருக்கின்றன.
Dr.கார்த்திகேசு கார்த்தீபன்
விரிவுரையாளர்
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்
கிழக்கு பல்கலைக்கழகம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago