Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 ஏப்ரல் 11 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வைத்தியக் கலாநிநி. சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன்.
வைத்திய அதிகாரி.
தேசிய வைத்தியசாலை, கொழும்பு
Email: anushyanthan@gmail.com
இலங்கையில் 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர், மீண்டும் உயிர்களைக் காவுகொள்ளும் வகையில் டெங்கு காச்சலானது மறுஅவதாரம் எடுத்து வந்துள்ளது.
அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் 15 க்கும் மேற்பட்ட இன்னுயிர்கள் இழக்கப்பட்டுருக்கின்றன. அதேநேரம், மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகலவ்கள் தெரிவிக்கின்றன.
டெங்குக் காய்ச்சல் என்றால் என்ன?
டெங்குக் காய்ச்சல் (Dengue Fever) எனப்படுகின்ற உயிர் கொல்லிக் காய்ச்சல் அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல், மனிதர்களிடையே அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
இது ஒருவகை வைரஸ் கிருமியினால் ஏற்படுகின்றது. இக்காய்ச்சல், வெப்ப வலய நாடுகளில் காணப்படும் ஒரு தொற்றுநோயாகும்.
இந்நோயானது நுளம்பினால் மனிதர்களுக்குப் பரப்பப்படுகின்றது. இந்நோய் வந்தவர்களுக்கு, கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் எரிவு போன்ற குணங்குறிகள் காணப்படுகின்றன.
டெங்கு நோய், தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கை விளைவிக்கின்றது. அதாவது, டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (உடலினுள்ளும் உடலுக்குவெளியேயும் கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்துகின்றது) மற்றும் டெங்கு குருதிப்பெருக்கு அதிர்ச்சி அறிகுறிகள் என்பன உண்டாகும். இந்நிலையில், மிக விரைவாக உயிர் ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோயாகையால், எலும்பை முறிக்கும் காய்ச்சல் (Break Bone Fever) எனவும் அழைக்கப்படும்.
டெங்குக் காய்ச்சல் அதிகமாகக் காணப்படும் நாடுகள் எவை?
வடக்கு ஆர்ஜெண்டீனா, வடக்கு அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பார்படோஸ், பொலிவியா, பெலிஸ், பிரேசில், கம்போடியா, கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, கியூபா, பிரான்ஸ், கௌதமாலா, ஹெயிட்டி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற வரண்ட, உலர் வெப்ப வலய நாடுகளில் இந்த நோய் பெரும்பாலும் பரவுகின்றது.
டெங்குக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் எது?
டெங்குக் காய்ச்சலின் நோய்க்காரணி ஒரு வகை வைரஸ் ஆகும். இது RNA வைரஸ் வகையைச் சார்ந்தது. இவை நோய்க்காவிகளால் காவப்பட்டு ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரப்பப்படுகின்றது.
பெரும்பாலும் இவ்வைரஸ் நுளம்புகள் அல்லது தௌ்ளுகள் மூலம் காவப்படுகின்றன, எனவே ‘கணுக்காலிகள் காவும் வைரஸுகள்’எனும் ஆங்கிலப் பெயரைச் சுருக்கியதன் மூலம் உருவான (arbo: arthropod-borne viruses) ஆர்போ வைரஸ் எனும் பெயரைக் கொண்டும் அழைக்கப்படுகின்றன.
டெங்குக் காய்ச்சலை ஏற்படுத்துகின்ற வைரஸுக்கு காணப்படும் மரபணுத்தொகை 11,000 ஆகும். இவ்வைரஸ், நியூக்கிளியோட்டைடு மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது, இவை மூன்று வெவ்வேறு புரத மூலக்கூறுக்களை (C, prM, E) உருவாக்குவதில் மரபணுக்குறியாகப் பயன்படுகின்றன, இப்புரத மூலக்கூறுகளே வைரஸுகளை உருவாக்குகின்றன.
டெங்கு காய்ச்சலை தோற்றுவிக்கும் வைரஸின் இனத்தில் நான்கு வகையான குருதிப்பாயங்களின் (serotype) வகைகள் (DENV-1, DENV-2, DENV-3, DENV-4) உள்ளன. இந்த நான்கு வகையும் தனித்தனியே முழு அளவிலான நோயை ஏற்படுத்த வல்லன. ஒரு குறிப்பிட்ட குருதிப்பாய அல்லது சீரோ டைப் வகையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஆயுள் முழுவதும் அக்குருதிப்பாய வகையிலிருந்து நோயெதிர்ப்புச் சக்தியானது கிடைக்கின்றது.
ஏனைய மூன்று வகையில் இருந்தும் நோயெதிர்ப்பு உருவான போதிலும், அவை குறுகிய காலத்துக்கே மனிதரின் உடலில் நீடிக்கின்றன. டெங்கு வைரஸுக்கெதிராக, முற்றுமுழுதாக நோயெதிர்ப்புச் சக்தி உருவாக வேண்டுமெனின் குறித்த நபர் ஒருவருக்கு இந்நான்கு குருதிப்பாய வகை வைரஸுகளும் டெங்கு நோயை உருவாக்கி இருக்க வேண்டும்.
ஆனால், மிகவும் அபாயகரமானது என்னவெனில், இரண்டாவது முறை நோய்த்தொற்று ஏற்படுவது, நோயாளிக்கு மிகக் கடுமையான பாதிப்பை உண்டாக்கும்.
டெங்கு நோய்யைக் காவும் நோய்க்காவி எது?
Aedes எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த பல நுளம்பு இனங்கள் இந்த நோயின் நோய்க்காவியாகும். இவ் வைரசால் பாதிக்கப்பட்ட ஏடிசு (Aedes) வகை நுளம்புகளால், இந்நோய் பரவுகிறது. ஏடிசு நுளம்புகள் ஒருவரைக் கடித்து தனக்குரிய குருதி உணவைப் பெற்றுக்கொள்கின்றது.
இவ்வகை நுளம்புகளை இலகுவில் அடையாளம் காணக்கூடிய சிறப்பம்சமாகக் கருநிறக் காலில் வெள்ளை வரிகள் காணப்படும். இந்நுளம்புகள்,பொதுவாகப் பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. அதிலும் குறிப்பாகப் பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இந்நுளம்புகள் கடிக்கின்றன.
நுளம்பினுள் டெங்கு வைரஸின் நடத்தை எவ்வாறு அமையும்?
மனிதனே முதன்மை வழங்கியாக {Primary Reservoir } இருப்பினும்,குரங்கினத்தின் இடையேயும் இவ் வைரஸுகள் உலாவி வருகின்றன.
ஒரு தரம், இந்தக் காவி நுளம்பு கடிப்பதே நோய் உண்டாவதற்கு வழிகோலும். டெங்கு நோயுள்ள ஒருவரைக் கடித்த உடனேயே இவ் வைரஸுகள் பரவக்கூடும். இதைவிட, பெண்நுளம்பு, தனது குருதி உணவை நோய் தொற்றியுள்ளவரிடமிருந்து பெற்ற பின்னர், நுளம்புவின் குடற்கலங்களை, டெங்கு வைரஸுகள் அடைகின்றன. 8 - 10 நாட்கள் கழிந்து நுளம்பின் ஏனைய இழையங்களுக்கும் இவ்வைரஸுகள் பரவுகின்றன, இவ்வகையில் உமிழ்நீர்ச் சுரப்பியையும் அவை சென்றடைகின்றன.
நோயில்லாத ஒருவரை இந்நுளம்புகள் கடிக்கும்போது, வைரஸுகள் செறிந்த தமது உமிழ்நீரை அவருக்குள் செலுத்துகின்றன, இதன் மூலம் அவரும் தொற்றுக்கு உள்ளாகின்றார். எனவே Aedes நுளம்பானது, உடனேயோ அல்லது 8-10 நாட்கள் சென்ற பின்னரோ நோய்க்காவியாகத் தொழிற்படுகின்றது.
இவ் வைரஸுக்கள், நுளம்புக்கு கேடுதரும் விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. இந் நுளம்புகளின் ஆயுட்காலம் பொதுவாக 21 நாட்களாகும். இந்நுளம்புகள், மனிதனின் வசிப்பிங்களுக்கு அருகாமையில் உள்ள செயற்கையான நீர்நிலைத் தேக்கங்களில் முட்டை இடுவதை விரும்புகின்றன. எனவே தமக்குத் தேவையான, குருதி உணவை, மனிதர்களிடையே தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும்.
குருதி மாற்றீடு, உள்ளுறுப்பு மாற்றீடு (Organ transplantation) போன்ற சந்தர்ப்பங்களிலும் நோய்த் தொற்றுள்ள குருதி மூலம் டெங்கு வைரஸுகள் பரவுகின்றன. கர்ப்பிணித் தாயிலிருந்து சேய்க்கும் அல்லது பிறப்பின்போதும் பரவிய நிகழ்வுகளும் அறிக்கையிடப் பட்டுள்ளன.
இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடுகை மூலம் பெரும்பாலும் பரவுவதில்லை. எனினும் வழமைக்கு மாறாக அத்தகைய நிகழ்வுகளும் அவதானிக்கப்பட்டுள்ளன.
டெங்கு நோயினால் எளிதில் பாதிப்படையக்கூடியவர்கள் யார்?
குழந்தைகளிலும் சிறுவர்களிலும் இந்நோயின் தாக்கம்,கடுமையாக ஏற்படுகின்றது. ஆண்களைக் காட்டிலும் கூடுதலாகப் பெண்களே பாதிப்படைகின்றனர். நீரிழிவு, ஆஸ்துமா நோய் போன்ற நீண்டகால நோய்கள் உள்ளவருக்கு இந்நோய்,உயிருக்கு தீங்குவிளைவிக்கக்கூடிய பாதிப்புகளை உண்டாக்குகின்றது.
டெங்குநோயின் அறிகுறிகளும் குணங்குறிகளும் எவை?
முதன்முதலில், டெங்கு நோயின் தொற்றுக்குள்ளானவர் பெரும்பாலும் (50 90 வீதம்) அறிகுறிகள் இன்றியே காணப்படுவர். அல்லது இவர்களுக்கு தீமையில்லாத காய்ச்சல் மட்டுமே காணப்படும்.
ஏனையோர் டெங்கு வைரஸின் மரபார்ந்த வகைகளுக்குரிய அறிகுறிகளைக் கொண்டிருப்பர், அவையாவன: திடீரென அதிகரித்துச் செல்லும் மிகையான காய்ச்சல், தலைவலி, கண்ணின் பின்பகுதியில் ஏற்படும் வலி, உடல்வலி (தசை, எலும்புவலி), களைப்பு, வாந்தி, வயிற்றுக்குமட்டல், தொண்டைப்புண், சுவை உணர்தலில் மாற்றம், தோல் தடித்து சிவப்படைந்து புடைத்துக் காணப்படல். இவர்களில், ஒரு சிறிய பகுதியினர் (5 சதவீதமானோர் ) நோய் கடுமையாகிக் காணப்படுவர்.
ஏற்கெனவே ஒரு குருதிப்பாய வகை அல்லது சீரோ டைப் வைரஸினால் பாதிப்புற்ற சிறிய வீதமான மக்களில் மீண்டும் மற்றொரு வகையான, பிறிதொரு குருதிப்பாய வகைத் தொற்று ஏற்படின், மயிர்த்துளைக் குருதிக்குழாய்களில் சிதைவு ஏற்பட்டு, குருதிப்பெருக்கு உண்டாகும்; பாதிப்பும் உண்டாகும். இத்தகைய நிலைமை டெங்குக் குருதிப்போக்குக் காய்ச்சல் (Dengue Heamorrhagic Fever) எனப்படும்.
டெங்குநோயின் நோயரும்பு காலம் (அதாவது நுளம்பு மனித உடலினுள் வைரஸைத் செலுத்தியதிலிருந்து நோயின் அறிகுறிகள் தோன்றும் வரையான காலம்) 3 - 14 நாட்களாகும். சராசரியாக 4 - 7 நாட்களாகும்.
எனவே, வெப்ப வலய மண்டலப் பகுதிகளிலிருந்து வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்தவர்கள், அங்கு வருகை தந்து 14 - 16 நாட்களுக்கும் மேற்பட்டால் டெங்குக் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பில்லை. அதேவேளையில் இக்குறிப்பிட்ட காலப்பகுதியில் அறிகுறிகள் தென்படின் டெங்குக் காய்ச்சலாக இருக்கலாம் என்பதையும் மறுப்பதிற்கில்லை.
டெங்கு நோயின் பருவங்கள் எவை?
டெங்குநோயின் பருவங்களை மூன்றாகப் பிரிக்கலாம்:
1. காய்ச்சல்,
2. கடுமையான பருவம்,
3. மீள்நிலைப் பருவம்.
டெங்கு நோயின் நோயரும்பு காலப் பகுதியை அடுத்து, முக்கிய அறிகுறியான காய்ச்சல் உடனே தோன்றி அதிகரித்துச் செல்லும். உடல் வெப்பநிலை 40°பாகைக்கு (104°)மேற்செல்லும், இக் காய்ச்சலுடன் கடுமையான தலைவலி, குறிப்பாகக் கண்களின் பிற்புறத்தே வலி போன்றன தோன்றும்.
பொதுவாகக் காய்ச்சல், இரண்டு தொடக்கம் ஏழு நாட்களுக்கு நீடிக்கும்.வெகு அரிதாக, சிறுவர்களில் இக்காய்ச்சல் 2 - 5 நாட்களுக்கு நீடித்து, பின்னர் ஓரிரு நாட்களுக்கு இராது.
மீண்டும் காய்ச்சல் ஓரிரு நாட்களுக்குப் பின்னர் தோன்றும், பின்னர் காய்ச்சல் இல்லாத நிலைமை காணப்படும். பத்து நாட்களுக்கு மேலே காய்ச்சல் நீடித்தால் அது டெங்குக் காய்ச்சலாக இருக்கும் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு.
இப்பருவத்திலே ஏனைய அறிகுறிகள் பல காணப்படும். அவையாவன:
n தலைவலி.
n கண்களின் பின்புறத்தே வலி.
n பொதுவான உடல் வலி (தசை வலி, மூட்டு வலி.)
n குமட்டலும் வாந்தியும்
n வயிற்றுக்கடுப்பு
n தோல் நமைச்சல் அல்லது அரிப்பு, அடி முட்டிகளில் பொதுவாகவும் சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்.
n பசியின்மை
n தொண்டைப்புண்
n மிதமான குருதிப்போக்கு (பல் ஈறுகளிலிருந்து குருதி வடிதல், மூக்கிலிருந்து குருதி வடிதல், மாதவிடாய் குருதிப் பெருக்கு மிகையாகப் போதல். சிறுநீரில், குருதி கலந்துவெளியேறுதல்,உடலின் மேற்பரப்பில்,குருதிப்புள்ளிகள் அதாவது,petechiae காணப்படல்
n நிணநீர்க்கணு அல்லது முடிச்சுகளில் வீக்கம்
n குருதியில் வெள்ளை அணுக்கள், குருதிச் சிறுதட்டுகள் என்பன எண்ணிக்கையில் குறைதல்.
காய்ச்சல் தொடங்கியுள்ள காலப்பகுதியில் தோலில் நமைச்சல் மற்றும் அரிப்பு போன்றன தோன்றக்கூடும்.
முதல் அல்லது இரண்டாம் நாளில் (அதாவது காய்ச்சல் மற்றும் மற்றைய அறிகுறிகள் தோன்றியதிலிருந்து) தோலின் சில பகுதிகள் சிவப்பு நிறமாக மாறும்.
அடுத்த 4-7 நாட்களில் சின்னமுத்துவில் தோன்றுவது போன்ற சிறுசிறு குருதிப் புள்ளிகள் உண்டாகும். சிறிய புள்ளிகள் போன்று சிறிய சிறிய சிவப்பாலான புள்ளிகள் போன்ற தோற்றம் பெறும். முதலில் உடலிலும் பின்னர் முகத்திலும் இச்சிவப்புப் புள்ளிகள் தோன்றும். இந்நிலையில் குருதி நுண் குழாய்களில் ஏற்படும் ஊடுபுகவிடும் தாக்கத்தின் தன்மையிலால், குருதி மயிர்த்துளைக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பினால், குருதிக் கசிவு ஏற்பட்டு வாய், மூக்கு போன்ற பகுதிகளில் சிறியளவிலான குருதிப்போக்கு உண்டாகலாம்.
சிலருக்கு டெங்குநோய், கடுமையான பருவத்தைக் கொண்டிருக்கும். காய்ச்சல் முடிவடைந்த பின்னர் ஏற்படும் இப்பருவம் ஓரிரு நாட்கள் நீடிக்கும்.
இப்பருவத்தில் உடலில் நீரில் அளவில் மாற்றம் ஏற்படும். குருதி நுண் குழாயின் ஊடுபுகவிடும் தன்மை அதிகரித்து, இரத்தக் கசிவு அல்லது பிளாஸ்மாவின் கசிவினால், நெஞ்சறை, வயிற்றுப் பகுதிகளில் குருதித் தேக்கம் உண்டாகின்றது. இதனால் சுவாசச் சிக்கல், வயிறு வீங்கிக் காணப்படுதல் போன்றன ஏற்படும்.
இப்பருவத்தில் உறுப்புகள் செயலிழப்பு, கடும் குருதிப்போக்கு முக்கியமாக, உணவுக்கால்வாய் தொகுதியில் ஏற்படும். சிகிச்சை உடனடியாக அளிக்கப்படாத நிலையில் இது அடுத்த கட்ட நிலையான, டெங்கு அதிர்ச்சி நிலைக்கு இட்டுச் செல்லும்.
இவ்வதிர்ச்சி நிலையில், வயிற்றுவலி, வாந்தி, அமைதியின்மை போன்றவற்றுடன் பொதுவான அதிர்ச்சியின் அறிகுறிகளும் காணப்படும். டெங்கு தொற்றுக்குட்பட்டவருள் 5 சதவீதமானவரிடையேயே இக்கடுமையான அறிகுறிகள் தோன்றுகின்றன.
ஏற்கெனவே டெங்கு வைரஸின் பிறிதொரு குருதிப்பாய வகையால் பாதிக்கப்பட்டோருக்கு இவ்வறிகுறிகள் மிகவும் கடுமையாக இருக்கும்.
அடுத்ததாக மெதுவாக நிகழும் மீள்நிலைப் பருவம். இதில் குருதிக்குழாய்க்கு வெளியே கசிந்த பிளாஸ்மா எனப்படும் குருதிப்பாயம், மீண்டும் குருதிக்குழாய்க்குள் அகத்துறிஞ்சப்படடு குருதியை வந்தடையும். இது இரண்டு, மூன்று நாட்களுக்கு நீடிக்கும். இந்நிலையின்போது தோலில் நமைச்சல்,குறைவான இதயத் துடிப்பு போன்றன காணப்படலாம்.
மேலும் குருதிப்பாய இழப்பு அதிகரிக்கும் இந்நிலையில் மூளையைப் பாதித்துச் சுயநினைவு இழத்தல், வலிப்பு போன்றவை உண்டாகலாம். டெங்குநோயின் பின்விளைவுகளில் கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம். இது டெங்கு கல்லீரல் அழற்சி(Dengue Hepatitis) எனப்படும்.
(அடுத்த வாரம் தொடரும்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
2 hours ago
2 hours ago