-தம்பி
நீரிழிவு நோய் இன்று வயது வித்தியாசம் இல்லாமல் இளவயதினரையும் பாதிப்புக்குள்ளாகின்றது. அந்த வகையில் கர்ப்பினிகளையும் அது விட்டு வைக்கவில்லை. ஆமாம் கர்ப்பமடைந்து நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குப் பின்னரே இது கர்ப்பினித்தாய்மார்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தாயிக்கு மாத்திரமன்றி கருவில் வளரும் குழந்தையையும் இந்நோய் பாதிக்கின்றது.
கருத்தரித்திருக்கும் காலத்தில் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தேவையான போஷாக்கினை வழங்குவதற்காக தாயின் வயிற்றில் பிளஸ்ண்டா என்ற ஓர் உறுப்பு வளர்கின்றது.
அவ்வுறுப்பு அதிகமாக ஹோர்மோன்களை சுரக்கும் தன்மை கொண்டது. இதனால் தான் கர்ப்பினித்தாய்மார்களுக்கு நீரிழிவு ஏற்படுகின்றது. எல்லோருக்கும் இந்நோய் ஏற்படுவதில்லை. ஒரு சிலருக்கே கரப்பக்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் இந்நீரிழிவு நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
கர்ப்பக்காலத்தில் கிளினிக் செல்லும் போது வைத்தியர்கள் சொல்லும் ஆலோசனைகளுக்கேற்ப உங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அவ்வாறு பரிசோதனை செய்து பார்த்தப்பின் உங்களுக்கு கர்ப்பக்கால நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தாள் நீங்கள் மிகவும் அவதானமாக இருப்பது மிகவும் முக்கியமாகும்.
காரணம் கர்ப்பக் காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோயினால் கருவில் வளரும் பிள்ளையின் நிறையும் அளவும் அதிகரிக்கும். இதனால் பிரசவத்தின் போது கடுமையான வலி ஏற்படுவதுடன், அதன் போது ஏற்படும் காயம் ஆறுவதற்க்கும் நீண்ட காலம் எடுக்கும். அத்தோடு சிறுநீர் உள்ளிட்ட பல்வேறு தொற்றுக்கும் தாய் ஆளாக வேண்டி வரும்.
மேலும் பிறக்கப் போகும் பிள்ளைக்கும் எதிர்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகமாகவே காணப்படுகின்றது. அத்துடன் தாயிக்கு பிரசவத்தின் பின்னரும் நீரிழிவு நோய் தொடர்வதற்கான வாய்ப்புகளும் ஏராளமாகவே காணப்படுகின்றது.
எனவே கர்ப்பகால நீரிழிவு நோய் வந்து விட்டாள், கர்ப்பினித்தாய்மார்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். காரணம் வேறு நீரிழிவு நோயைப் போல கர்ப்பக்கால நீரிழிவு நோய்க்கு வேறெந்த மருந்து மாத்திரைகளும் எடுத்துக் கொள்ள முடியாது. இன்சுலின் மூலமாகவே அதனைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.
அதற்காக நீங்கள் கவளைப்படுவதற்கான அவசியமோ தேவையோ இல்லை. கர்ப்பக்காலத்தில் உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக அறிந்து கொண்ட அத்தருணத்தில் இருந்து உணவில் சக்கரையின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரையின் அளவை சீராக பேணுங்கள்.
அத்துடன் உங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். அத்தோடு அவ்வப்போது இரத்த பரிசோதனையை மேற்கொள்வதுடன், வைத்தியரின் ஆலோசனையையும் பெற்றுக்கொள்ளுங்கள். இதன் மூலம் கர்ப்பக்காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயை பூரணமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
சிலருக்கு பிரசவத்திற்குப் பின்னரும் கூட நீரிழிவு நோய் தொடர்ச்சியாக இருப்பதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு. எனவே அவ்வாறனவர்கள் வைத்தியரின் ஆலோசனையுடன் உணவில் சர்க்கரையின் குறைத்துக் கொள்வதுடன், உடற்பயிற்சிகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுங்கள். இவ்வாறான செயற்பாட்டின் மூலம் உங்களின் நலனைப் பேணிக்கொள்வதுடன், உங்கள் பிள்ளையின் எதிர்கால ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழிசமைத்துக் கொடுப்பது உங்கள் கன்னியமான கடமையாகும்.