-தம்பி
குழந்தை செல்வத்தை வேண்டாம் என்று சொல்லும் தம்பதிகள் நம் சமூகத்தில் இருக்க முடியாது. காரணம் அது இரு மனங்களின் மணவாழ்க்கைக்கான அடையாளமாக இருப்பதுடன், திருமண வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை ஏற்படுத்தி, தம்பதிகளின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு உந்து சக்தியாக இருப்பதனால் தான். அவ்வாறான குழந்தை பாக்கியத்திற்காக தவம் இருப்போர் நம்மில் ஏராளம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது எடை குறைந்த அளவில் பிறக்கும் குழந்தைகளை எப்படி பராமரிக்கலாம் என்பதையே.
குறைந்த எடையில் உங்களுக்கு குழந்தை பிறந்து விட்டால் எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் பயப்படாதீர்கள். முதலில் மனதில் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். பிரசவ வரலாற்றில் இது ஒன்றும் புதிது அல்ல. ஆனால் அக்குழந்தைகளை பராமரிப்பதில் அதிக அக்கறையை எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறான குழந்தைகளை பராமரிப்பது கொஞ்சம் சிரமமான விடயம் தான் என்றாலும் நீங்கள் இப்போது செய்யும் தியாகம் அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு உறுதுணையாக அமையும் என்பதை ஒரு போதும் மறக்காதீர்கள்.
அந்த வகையில் எடை குறைந்த அளவில் ஒரு குழந்தை பிறக்கும் போது அது என்னென்ன பிரச்சினைகளுக்கு ஆளாகும் என்பதை முதலில் பார்ப்போம்.
எடை குறைந்த குழந்தைகள் உருவில் சிறியாதாகவும், உடம்பில் ஊட்டச்சத்து இல்லாமலும் இருக்கும்.
இதனால் அக்குழந்தைகளுக்கு எளிதாக நோய்த் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பும் அதிகம்.
அவர்கள் ஏனைய குழந்தைகளைப் போல அல்லாது ஆரோக்கியம் குன்றியவர்களாகவே இருப்பர்.
இதனால் மூளை வளர்ச்சி உள்ளிட்ட உடல் வளர்ச்சிலும் ஒரு தேக்க நிலை இருப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.
இவ்வாறான குழந்தைகளின் கிரகித்தல் ஆற்றலும் குறைவாக காணப்படுவதுடன் எதிர்காலத்தில் மற்ற குழந்தைகளுடன் போட்டி தன்மையும் குறைவடையும் வாய்ப்புகளும் உள்ளன.
இதனால் தனித்து விடப்படுகின்றமை, மன விரக்தி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.
ஆனால், இவற்றை தவிர்த்துக் கொள்வது ஒன்றும் கடினமாக காரியமே அல்ல. உங்களுக்கு எடை குறைந்த குழந்தை பிறந்து விட்டதா? கவலையை விடுங்கள். பின்வரும் விடயங்களை கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் வாழ்க்கையும் ஒளிமயமானதாகவே அமைந்து விடும்.
எடை குறைந்த குழந்தைகளை மிகவும் அவதானமாக கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனதில் எடை குறைந்து பிறந்து விட்டதே என்ற கவலை இருக்க கூடாது.
அடிக்கடி தாய்ப்பாலை அளவறிந்து கொடுக்க வேண்டும். காரணம் அதன் மூலம் அக்குழந்தைக்கு தேவையான போஷாக்கை ஈடு செய்ய முடியும்.
போஷாக்கான உணவுகளை சரியான நேரத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறான குழந்தைகளை தூக்கும் போது மிகவும் அவதானமாக தூக்க வேண்டும். குழந்தைகள் அளவில் சிறியதாக இருப்பதால் அவர்களின் தலையை கவனமாக பிடித்துக் கொள்ள வேண்டும். சிறியவர்களிடம் அவ்வாறான வேலைகளை கொடுப்பதை முடிந்தளவில் நிறுத்திக் கொள்ள பாருங்கள்.
குழந்தைகள் தூங்கும் போது அடிக்கடி அதன் சுவாசத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். காரணம் SIDS (Sudden Infant Death Syndrome) என்ற நோய் தாக்கத்தினால் பாரதுரமான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
அத்தோடு குழந்தை இருக்கும் இடத்தை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், நோய் தொற்றுக்குள்ளானோர் குழந்தையிடம் நெருங்குவதையோ அவர்கள் குழந்தைகளை தொட்டுத்தூக்குவதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் நோய் தொற்றுக்குள்ளாவதை தடுத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொள்வதுடன், அவ்வப்போது வைத்திய ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதும் மிகவும் சிறந்தப் பயனைத் தரும். ஆகவே உங்களது எடைக் குறைந்த குழந்தைகளை ஏனைய குழந்தைகளைப் போலல்லாது, மேலதிகமான கவனத்துடன் பராமரிப்பீர்களேயானால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையும் ஆரோக்கிய மிக்கதாக பிரகாசிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.