2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

தேவையில்லாமல் மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தம்பி
 
உங்களுக்கு தெரியுமா உலகில் உள்ள நோய்களில் சுமார் 80 சதவீதமான நோய்கள் தானாகவே குணமடையும் தன்மைக் கொண்டவை. அவற்றை குணப்படுத்த எந்தவிதமான மருந்து மாத்திரைகளும் தேவையில்லை. ஆனால் நம்மில் சிலர் தொட்டதற்கெல்லாம் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தேவையில்லாமல் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதால் அவர்கள் மிகப்பெரிய பக்க விளைவுகளுக்கு ஆளாகுவதுடன், சில நேரங்களில் அது உயிராபத்தையும் ஏற்படுத்திவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.
 
நாம் பயன்படுத்தும் எல்லா மருந்துகளும் ஏதோ ஒரு வகையில் நமக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. எப்படி அது நோய்களை குணப்படுத்துகின்றதோ அதே அளவுக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு முன்னர் அதன் விலை, தேவை போன்றவற்றை கருத்தில் கொள்வதுடன், தேவை இருந்தால் மட்டுமே அவற்றைப் பயன்படுத்துங்கள். 

 
அந்த வகையில் மருந்து மாத்திரைகள் தொடர்பாக பின்வரும் விடயங்களை நீங்கள் அறிந்து வைத்துக் கொள்வது, உங்களுக்கு ஓரளவாவது பயன்தரக் கூடியதாக இருக்கும் என நம்புகின்றோம்.
 
முடியுமானவரைக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் இருக்கப் பழகி கொள்வது நல்லது. கருவுற்ற தாய்மார்கள், மருந்து மாத்திரைகள் சாப்பிடாமல் இருந்தால் அவர்கள் நலமாக இருப்பதை உணர்வார்கள். அவர்களுடைய அனுபவத்தை நாம் பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.
 
கட்டாயம் மருந்து எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்ற நிலை வந்தால், குறைவாக எடுத்துக் கொண்டு, விரைவிலேயே அதனை கைவிடுவது சிறந்தது.
 
நீங்கள் சாப்பிடும் மருந்து மத்திரைகள் நேரடியாக கடைகளில் வாங்க கூடியதாக இருந்தாலும் அம்மருந்தை வைத்தியரிடம் காட்டி அவரது ஆலோசனைகளை பெறுவது நல்லது.

 
நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்தின் செயல், அதன் பக்க விளைவுகளைகள், அதற்கான மாற்று மருந்து போன்ற விடயங்களை மருத்துவ இதழ்கள் பத்திரிகை மற்றும் இணையத்தளங்களின் மூலமாக அறிந்து கொள்ளுங்கள்.
 
குழந்தைகளுக்கு அடிக்கடி மருந்து மாத்திரைகளை கொடுக்காதீர்கள். முடிந்தளவு அவற்றை தவிர்த்துக் கொள்ள பாருங்கள்.
 
மருந்து தயாரிப்பாளர்களின் ஆடம்பர விளம்பரங்களை அப்படியே நம்பி விடாதீர்கள்.
 
தானாக குணமடைந்து விடும் நோய்களுக்கு, தேவையில்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். அப்படியே மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் அவற்றை வாய் வழியாகவே எடுத்துக் கொள்ளுங்கள். சிலர் ஊசியின் மூலம் செலுத்திக் கொண்டால் அது விரைவாக செயல்படும் என நினைக்கின்றார்கள், அதில் உண்மையில்லை. இரு முறைகளும் ஒரே செயலாற்றல் கொண்டவைகள் தான்.
 
விலை குறைந்த மருந்துகளை பரிந்துரைக்குமாறு மருத்துவரிடம் கேளுங்கள். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், மூட்டு வலி போன்ற நோய்களுக்கு மருந்துகள் பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. அவற்றில் விலை குறைவான மருந்துகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
 
வைத்தியரை சந்திக்கச் செல்லும் ஒவ்வொரு தடவையும் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் மருந்து மாத்திரைகளை உடன் எடுத்துச் செல்லுங்கள்.

 
ஒரே நேரத்தில் அதிகளவான மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம். அப்படியே உட்கொள்ள நேர்ந்தால், அவற்றை குறுகிய காலத்துக்கு மாத்திரம் பயன்படுத்துங்கள். நீண்ட காலத்துக்கு இழுத்துச் செல்ல வேண்டாம்.
 
உங்கள் நோய்க்கு முடியுமான வரைக்கும் மருந்து மாத்திரை இல்லாமல் ஏதேனும் சிகிச்சை முறைகள் இருக்கின்றனவா என்பதை வைத்தியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
 
தொடர்ந்து மருந்து சாப்பிடுபவராக இருந்தால் அம்மருந்து பற்றிய விளக்க குறிப்புகளை எப்போதும் உங்களுடனேயே வைத்திருங்கள். அவசரமான தருணங்களில் அக்குறிப்புகள் மிகவும் பயனளிக்கும்.
 
இவ்வாறான சில அம்சங்களை பின்பற்றுவதன் மூலம் மருந்து மாத்திரைகளால் உங்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை தவிர்த்துக் கொள்வதுடன், அதற்காக விரயமாகும் செலவுகளையும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். 
 
அத்துடன் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களையும் முறையான உடற்பயிற்சிகளையும் செய்வதுடன், உடல் நலத்தை கருத்தில் கொண்டு எமது நாளாந்த செயற்பாடுகளை செய்து வந்தாலே எந்த நோய்களும் எம்மை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X