ஆதிதமிழன் அறுசுவையான உணவுகளை உண்கொண்டான், ஆரோக்கியமாக வாழ்ந்தான். அறுசுவை உணவின் அருமை தெரியாத நாம் ஆடம்பரமான உணவு வகைகளையே அதிகம் சாப்பிடுகின்றோம். இதனால் தினம் தினம் ஏதாவது ஓர் உடல் ரீதியான அவஸ்த்தைக்கு நாம் ஆளாகின்றோம். இயல்பான வாழ்க்கை முறையை தொலைத்து இயந்திரமயமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு தான் எத்தனை விதமான நோய்கள், மன அழுத்தங்கள்.
உணவு, தண்ணீர், காற்று இவற்றை அளவறிந்து முறைப்படுத்தினால் அதுவே ஆரோக்கியத்திற்கான அருமருந்தாக அமைந்து விடுகின்றது. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, உறைப்பு, கசப்பு, உவர்ப்பு எனும் ஆறு தாதுக்களை அளவறிந்து உண்ணும் போது, அவை ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர் மற்றும் மூளைக்கும் உகந்ததாகி உடலும் மனமும் நல்ல ஆரோக்கியத்தை பெறுகின்றன.
அப்படிப்பட்ட அறுசுவை உணவின் அருமை பெருமைகளைத் தான் இப்போது நாம் பார்க்கப்போகின்றோம்.
துவர்ப்பு
வாழைக்காய், அவரை, அத்திக்காய், மாவடு, மாதுளை போன்றவைகளில் துவர்ப்புச்சுவை அதிகம் நிரம்பி இருக்கின்றது. துவர்ப்புச்சக்தியுள்ள உணவுகளை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு சமன்படுவதுடன், ரத்தப்போக்கும் சமனடைகின்றது. அத்துடன் உடலில் ரத்தப்பெருக்கத்தையும், ஓட்டத்தையும் இது அதிகரிக்கின்றது.
இனிப்பு
பழவகைகள், உருளைக்கிழங்கு, கரட், கரும்பு, அரிசி, கோதுமை போன்றவைகளில் இனிப்புச்சுவை நிறைந்து காணப்படுகின்றது. இனிப்புச்சக்தியை உடலில் சம அளவில் பேண வேண்டும். அவ்வாறு சம அளவில் பேணப்படும் போது உடலை சுறுசுறுப்பாக இயக்குவதுடன் தசையின் வளர்ச்சிக்கும் அச்சுவை உறுதுணையாக செயற்படுகிறது.
உடலில் இனிப்புச்சக்தியின் அளவு அதிகரிக்கும் போது உங்களுக்கு தெரியும் அது சர்க்கரை வியாதியை ஏற்படுத்துவதுடன், உடலின் எடையை அதிகரித்து உடலில் தளர்ச்சியையும் சோர்வையும் ஏற்படுத்தி அதிகம் தூக்கத்தையும் கொடுத்து உடலின் ஆரோக்கியத்தை குறைக்கும்.
புளிப்பு
புளிச்சக்கீரை, தக்காளி, எலுமிச்சை, புளி, மாங்காய், தயிர், மோர், நாராத்தேங்காய் போன்றவைகளில் புளிப்புச்சக்தி அதிகம் காணப்படுகின்றது. புளிப்புச்சக்தியால் உணவின் சுவை அதிகரிக்கும்.
புளிப்புச்சக்தியும் அளவோடு இருந்தாள் அது நரம்புகளை வலுவடையச் செய்யும். பசியை தூண்டி கொழுப்பை உற்பத்தி செய்யும்.
புளிப்புச்சக்தியின் அளவு அதிகரிக்கும் போது ரத்தக்கொதிப்பு, நெஞ்செரிச்சல், உடலரிப்பு, உடல் தளர்ச்சி போன்ற பல பாதிப்புகள் ஏற்படுவதுடன், பற்களின் பாதிப்புக்குள்ளாகும்.
காரம்
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவைகளில் காரம் கூடுதலாக இருக்கும். காரம் உடலில் பதமானால் உணவு செரிமானமாகும். பசியை தூண்டுவதுடன் ரத்தத்தை தூய்மையாக்கும். மேலும் உடலில் தேங்கும் தேவையற்ற நீரை வெளியேற்றி, உடம்மை இளைக்கும் எலும்புகளையும் வலுவடையச் செய்யும்.
காரத்தின் அளவும் அதிகமானால் எல்லாமே பாதகமாகி உடல் பாதிப்புக்கு உள்ளாகும்.
கசப்பு
பாகற்காய், கத்தரிக்காய், சுண்டைக்காய், வெந்தயம், பூண்டு, வெங்காயம், ஓமம், எள், வேப்பம் பூ போன்றவைகளில் கசப்புச்சுவை அதிகம் இருக்கின்றது. அளவோடு பயன்படுத்தும் போது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், தாகத்தை தணித்து நரம்புகளையும் பலப்படுத்தும்.
உவர்ப்பு
வாழைத்தண்டு, கீரைத்தண்டு, முள்ளங்கி, பீர்க்கங்காய், சுரைக்காய், பூசணிக்காய் போன்றவைகளில் உவர்ப்புச்சுவை அதிகாமாக இருக்கின்றது. உவர்ப்புச்சுவையால் நாவில் உமிழ் நீரை சுரக்க வைக்க முடியும். அத்துடன் உணவை செரிமானம் செய்தோடு அனைத்துச் சுவைகளையும் சமச்சீர் செய்யும் ஆற்றல் உவர்ப்புச்சுவைக்கு இருக்கின்றது.
இவ்வாறு அளவோடு அறுசுவையை உணவுகளை உட்கொண்டவர்கள் இல்லறத்தில் இனிமையை கண்டார்கள். அறுசுவை உணவில் முதலில் இனிப்பையும் பின்னர் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு என்பவற்றை சுவைத்தப்பின் கடைசியில் துவர்ப்பை சுவைத்து, உடலின் பஞ்சபூதங்களின் அளவை சமன்பெறச் செய்தார்கள். சாப்பாட்டின் இறுதியில் தயிரையும் உப்பையும் சேர்த்துக் கொண்டனர். இதன் மூலம் உணவில் சேர்த்துள்ள வாதம், பித்தம் போன்ற ரசாயணங்களின் குறைகளை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டார்கள்.
இதன் மூலம் உணவின் சக்தியை மாத்திரமன்றி அதன் இன்பத்தையும் ஒருங்கே பெற்றார்கள். ஆரோக்கியம் இல்லாத உடம்பில் மூளை எப்படி செயற்படும்? நோய் கண்ட உடம்பு எப்படி தெளிவான அறிவும், ஆற்றலும் வெளிப்படும்.
எனவே, நாமும் உணவின் முக்கியத்துவத்தை அறிந்து அதனை உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் இனவிருத்திக்கான தாதுவையும் பலப்படுத்தி வீரியத்தையும் அதிகரிக்க முடியும். உடலை வளர்க்கும் உணவை வயிற்றில் முழுவதுமாக நிரப்பாமல் அரை வயிறு உண்பவரின் ஆரோக்கியம் ஒரு நாளும் கெடுவதில்லை என்பதை நாமும் தெளிவாக உணர்வோம், அறுசுவை உணவுகளை அளவறிந்து உண்டு ஆரோக்கியமாக வாழ்வதுடன், எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்திற்கும் வழிசமைப்போம்.
-தம்பி