2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

நீரிழிவு நோய் உங்கள் கண்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன்று உலகில் பெரும்பாலான மனிதர்களை வாட்டி வதைக்கும் ஒரு வியாதியாக நீரிழிவு காணப்படுகின்றது. இந்நோயின் தன்மை மட்டும் அதன் பாதிப்பு என்ன என்பது தொடர்பில் நாம் ஒவ்வொருவரும் நன்கு உணர்ந்திருப்பது காலத்தின் கட்டாயமாகின்றது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவு மற்றும் தத்தமது அன்றாட செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவதுபோல தமது கண்களிலும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். காரணம் நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு கண்களில் பாதிப்புகள் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆமாம் பெரும்பாலும் 5 முதல் 10 வருடங்கள் தொடர்ச்சியாக நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்ட நீரிழிவு நோயாளர்களுக்கும், இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோயுள்ளவர்களுக்கும், நீரிழிவுடன் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும், நீரிழி நோயுடன் புகைப்பிடிப்பவர்கள் மற்றும் மதுபானம் அருந்துபவர்கள் போன்றோருக்குத் தான் கண்களில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒரு கண் வைத்தியரிடம் உங்களது கண்களை கட்டாயம் பரிசோதித்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.

ஏனென்றால் நீரிழிவு சம்பந்தமான கண் நோய் உருவாவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாகவே இருக்கின்றது. அவ்வாறு நீரிழிவு தொடர்பான கண் நோய் ஏற்படுமாயின் அதன் ஆரம்ப நிலையில் எந்தவிதமான அறிகுறிகளையும் அது காட்டாது. அதுபோலவே பார்வை குறைவைக் கூட அது ஏற்படுத்தாது. எனவே நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு அந்நோயுடன் தொடர்புடைய கண் இருக்கின்றதா? என்பதை சரியாக உணர்ந்துகொள்ள கூட முடியாது.

நீரிழிவு நோய் எவ்வாறு கண்களை பாதிக்கின்றது என்று பார்க்கும் போது, நீரிழிவு நோயாளர்களின் கண்களில் காணப்படும் குருதிக் குழாய்களில் அந்நோயானது பல்வேறு வகையான பாதிப்புக்களை உருவாக்குகின்றது. இதனால் விழித்திரை வீக்கமடைவதுடன் குருதி பெருக்கமும் ஏற்படுகின்றது. இதனால் கண்களில் இரட்டைப் பார்வை ஏற்படுவதுடன், கண் இமை மற்றும் வெள்ளை தோல் என்பன கிருமி தொற்றுக்குள்ளாகி கண்புரை நோய் உட்பட கண்களில் பல குறைபாடுகளையும் இந்நீரிழிவு நோய் ஏற்படுத்துகின்றது. 


சிலவேளைகளில் குருதியில் குளுக்கோசின் அளவு சரியாக இருக்கின்ற பட்சத்திலும் கூட கண்களில் நீரிழிவுடன் தொடர்புடைய பல்வேறு நோய்கள் தொற்றிக் கொள்வதற்கும் நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு தடவையேனும் தங்களது கண்களை ஒரு கண் வைத்தியரிடம் காட்டுவது மிகவும் நல்லது. இல்லையேல் ஆகக்குறைந்தது ஒரு வருடத்திற்கு ஒரு தடவையேனும் கண் வைத்தியரை நாடுவதன் மூலம் கண்களில் நீரிழிவு சம்பந்தமான நோய்கள் உள்ளனவா என்பதை கண்டறிந்து கொள்ளலாம்.


ஆரம்பத்திலேயே இந்நோய் தொடர்பாக அவதானித்து வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவதன் மூலம் எதிர்காலத்தில் கண்களில் ஏற்பட போகும் பாரிய பாதிப்புகளை தடுத்து நிறுத்திக் கொள்ள முடியும்.

ஆகவே நீரிழிவு சம்பந்தமான கண் நோய் ஒருவருக்கு ஏற்பட்டு நீண்டகாலம் ஆகிவிட்டதென்றால் அதனை சிகிச்சை முறைகளின் மூலம் கூட கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகும். எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் கட்டாயம் உங்கள் கண்களை ஒரு கண் வைத்தியரிடம் காட்டுவது மிகவும் நல்லது.

-தம்பி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X