2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

மன உளைச்சலும் மாதவிடாயின் ஒழுங்கற்ற தன்மையும்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயைப் பொறுத்தவரைக்கும் அதில் ஓர் ஒழுங்குமுறை இருக்க வேண்டும். ஆனால், சிலருக்கு அதில் ஒழுங்கற்றதொரு தன்மை காணப்படும். பெரும்பாலும் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கும் வேலைக்குச் செல்லும் இளம் பெண்களுக்குமே இப்பிரச்சினை மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

இதற்கு பெண்களின் மன அழுத்தமே பிரதான காரணமாக அமைகின்றது.

ஆமாம், பாடசாலைக்குச் செல்லும் பெண் பிள்ளைகளும், வேலைக்குச் செல்லும் பெண்களுமே அதிக அளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். வீட்டில் இருக்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகுவது மிகவும் குறைவு எனலாம்.

பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளை பொறுத்தவரைக்கும், காலையில் வீட்டைவிட்டு செல்லும் அவர்கள், பாடசாலைக் கல்வி முடிந்ததும் மேலதிக வகுப்புக்களுக்குச் சென்று மாலையிலேயே பெரும்பாலும் வீடு திரும்புகின்றனர்.

வீட்டுக்கு வந்த பின்பும் ஓய்வாக இருப்பதற்கான வாய்ப்பில்லை. வீட்டுப் பாடங்களையும் சிலர் வீட்டு வேலைகளையும் செய்கின்றனர். இவ்வாறு அயராது இயங்கிக் கொண்டே இருப்பதானால் இயல்பாகவே அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

இதுபோலவே வேலைக்குச் செல்கின்ற இளம் பெண்களும், வேலைத்தளங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் போன்ற பல்வேறு வழிகளில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

பருவமடைந்த பெண்கள் இவ்வாறு அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகும் போது, அவர்களின் மூளையில் அது ஒரு சுமையாகவே பதியப்படுகிறது. இந்தச் சுமையானது மூளையிலிருந்து வருகின்ற மாதவிடாய்கான தூண்டுதல்களில் தாமதங்களை ஏற்படுத்துகின்றது.

இத்தூண்டுதல்கள் ஹோமோன்கள் சுரப்பதை தாமதப்படுத்தி அவர்களின் மாதவிடாயிலும் தாமதத்தை ஏற்படுத்துகிறது. இதுவே பெண்களின் மாதவிடாய் ஒழுங்கற்று ஏற்படுவதற்கான பிரதான காரணியாக அமைகின்றது.

அத்துடன் உயரத்திற்கு ஏற்ற நிறை காணப்படாமை, ஊட்டச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாமை, சரியான உடற்பயிற்சியின்மை போன்ற பிற காரணிகளும் பெண்களின் மாதவிடாய் ஒழுங்கு முறையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சாதாரணமாக முதல் மாதவிடாய் ஏற்பட்டு அடுத்த மாதவிடாயானது சற்று பிந்தி ஏற்படலாம். அதற்காக பயப்பட தேவையில்லை. அதேவேளை மாதவிடாய் முறையற்ற விதத்தில் ஏற்படுவது ஒரு நோயின் அறிகுறியல்ல என்பதையும் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். ஆனால் இந்நிலைமை தொடர்ச்சியாக ஏற்படுமிடத்து நீங்கள் கொஞ்சம் அவதானமாக இருப்பது மிகவும் அவசியமாகும்.

எனவே, தேவையற்ற மனக்குழப்பங்களுக்கு ஆளாகுவதை இளம் பெண்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்காமல் முடிந்தளவு ஓய்வாக உடம்பை வைத்துக்கொள்ளவும் வேண்டும்.

ஆகவே, சத்துள்ள உணவுகளை உட்கொள்வதுடன், முறையான உடற்பயிற்சி என்பனவற்றின் மூலம் ஒழுங்கானவிதத்தில் மாதவிடாயை பேணிக் கொள்வதுடன் உங்கள் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

-தம்பி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X