2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

உங்களுக்கும் இரத்தச்சோகை ஏற்படலாம்; அவதானமாக இருங்கள்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தச்சோகை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? கட்டாயம் நாம் இது பற்றி தெரிந்திருக்க வேண்டும். காரணம் எமது உடலின் சீரான இயக்கம், உற்சாகம் மற்றும் அதன் திடகாத்திரம் என்பனவற்றில் இது பெரும் தாக்கத்தினை செலுத்துகின்றது. அனீமியா என்று சொல்லப்படும் இந்த இரத்தச்சோகையானது எமது கோப உணர்வை அதிகரிப்பதுடன் உடல் சோர்வு, தலைவலி, மயக்கம் போன்ற பல்வேறு வகையான பிரச்சினைகளை எமக்குள் ஏற்படுத்துகின்றது.

எமது உடலில் செங்குருதி சிறுதுணிக்கைகள் எனப்படும் குருதிக்கலன்களில் ஈமோ குளோபின் எனப்படும் இரசாயனப் பதார்த்தம் சுரக்கின்றது. இது நாம் சுவாசிக்கும் ஒட்சிசனை குருதியிலிருந்து பிரித்தெடுத்து உடலின் பல்வேறு அங்கங்களுக்கும் கொண்டு செல்கின்றது.

இவ்வாறு செல்லும் ஒட்சிசனானது எமது உடலில் காணப்படும் குளுக்கோசை எரித்து உடம்பின் இயக்கத்திற்குத் தேவையான சக்தியை பிறப்பிக்கின்றது. இச்சக்தியை பெற்றே எமது உடம்பு சீராக இயங்குகின்றது. எனவே உடம்பின் இயக்கத்திற்கு அடிப்படையாய் அமையும் இந்த ஈமோகுளோபினின் அளவு குறைவதால் உடலில் ஏற்படும் பாதிப்பே இரத்த சோகை எனப்படுகிறது.


இரத்தச்சோகை ஏற்படுமாயின் எமது உடற்கலன்களுக்கு தேவைப்படும் ஒட்சிசனின் அளவில் பாதிப்பு ஏற்படும். எனவே உடல் இயக்கத்திற்குத் தேவையான சக்தி பிறப்பாக்கம் தடைப்படும். இதனால் உடல் சோர்வடைவதுடன் தலைவலி, தலைச்சுற்று என்பனவும் ஏற்படும்.

இந்நிலைமை அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் மயக்கம் ஏற்படுவதுடன் சில வேளைகளில் பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தி விடும்.

இவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தும் இந்த இரத்த சோகையானது ஏன் ஏற்படுகின்றது? யாரை இது அதிகளவில் தாக்குகின்றது? அதனை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம்? என்பது பற்றி இனிப் பார்ப்போம்.


குருதிச்சோகைக்கான பிரதான காரணம் இரும்புச் சத்து மற்றும் விற்றமின் டீ12 போன்றவற்றின் குறைபாடு தான். அத்துடன் உடம்பிலிருந்து அதிகமாக இரத்தம் வெளியேறும் பட்சத்தில் ஈமோகுளோபினின் அளவுக் குறைவடைந்து குருதிச்சோகை ஏற்படலாம்.

பெரும்பாலும் பெண்களையும், சிறுவர்களையுமே இது அதிகம் பாதிக்கின்றது. பெண்களுக்கு பூப்பெய்கின்ற தருணத்திலும் மாதவிடாய் காலங்களிலும் அதிகளவிலான இரத்தப்போக்கு ஏற்படுகின்றது. இதனால் ஈமோகுளோபினின் அளவுக் குறைவடைந்து குருதிச்சோகை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன.

இதனை தவிர்த்துக்கொள்வதற்கான ஒரே வழி இரும்புச் சத்துள்ள உணவுகளை அதிகளவில் உண்பது தான். கோழி, மீன், இறைச்சி போன்றவற்றில் இரும்புச் சத்து அதிகம் காணப்படுகின்றது. அத்துடன் எமது உடலும் மாமிசங்களில் இருக்கும் இரும்புச் சத்தினை இலகுவாக அகத்துறிஞ்சும் தன்மைக் கொண்டது. பெரும்பாலும் மாமிச வகைகளை சாப்பிடுபவர்களுக்கு இரத்தச் சோகை ஏற்படுவது குறைவு.


அப்படியென்றால் சைவ உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு இரத்தச் சோகையிலிருந்து விடுதலை இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். மரக்கறி வகைகளைப் பொறுத்தமட்டில் கீரைகளிலேயே இரும்புச் சத்து அதிகமாக இருக்கின்றது.

ஆனால் மாமிசங்களைப் போன்று இவற்றில் இருக்கும் இரும்புச் சத்துக்களை உடல் முழுமையாக அகத்துறிஞ்சுவது இல்லை. எனவே சைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் கீரைகளை சமைக்கும் போது சிறிதளவு தேசிக்காய் சாற்றை பிழிந்து விட்டு சாப்பிடுவதுடன், சாப்பிட்டதன் பின்னர் புளிப்புச் சுவையுள்ள தயிர் மற்றும் பழங்களை சாப்பிடலாம். இதன் மூலம் உணவில் உள்ள இரும்புச் சத்தினை முழுமையாக உடல் அகத்துறிஞ்சுகிறது.

அத்துடன் உணவில் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் கல்சியத்தையும் இரும்புச் சத்தையும் ஒன்றாக உண்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே உங்கள் உடலும் களைப்புக்குள்ளாகி சோர்ந்து காணப்படுவதுடன் மயக்கமும் ஏற்படுமாயின் அது குருதிச்சோகைக்குரிய அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே உடன் வைத்தியரை நாடுவதுடன், அவரின் ஆலோசனையுடன் தகுந்த சிகிச்சைகளையும் உணவுப் பழக்க வழக்கங்களையும் பின்பற்றி குருதிச்சோகையிலிருந்து விடுபட்டு திடகாத்திரமாக வாழ வழி செய்துக் கொள்ளுங்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X