2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

குழந்தைகள் குண்டாக இருக்க விரும்பும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்

A.P.Mathan   / 2012 நவம்பர் 23 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன்று பெரும்பாலானவர்கள் தங்களது குழந்தைகள் நல்ல மொழுமொழுவென குண்டாக இருக்க வேண்டும் என்பதையே பெரிதும் விரும்புகின்றனர். அப்படி இருந்தால் தான் அவர்கள் ஆரோக்கிமாக இருக்கின்றார்கள் என தப்பாக எண்ணுகின்றனர். அதற்காக அவர்கள் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான உணவுகளை கொடுக்கின்றனர். அது தவறான ஒரு பழக்கமாகும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகள் தொடர்பில் நாம் ஒவ்வொருவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

பொதுவாக ஒரு குழந்தைப் பிறந்து 6 மாதங்கள் வரைக்கும் கட்டாயம் தாய் பால்தான் கொடுக்க வேண்டும். காரணம் தாய் பாலினை ஈடு செய்வதற்கு உலகில் எதுவுமே இல்லை. எனவே முடியுமான வரைக்கும் தாய் பாலை வழங்குதவதற்கு முயற்சி செய்யுங்கள். தாய் பாலில் தான் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விதமான விற்றமின்களும் கனியுப்புக்களும் அளவான வீதத்தில் இருக்கின்றன. அத்துடன் தாய் பாலில் அதிகமான இரும்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் காணப்படுகின்றன.


சில தாய்மார்களுக்கு தாய் பால் போதுமான அளவுக்கு சுரப்பதில்லை. இவர்கள் வீணாக கவலையடைய தேவையில்லை. தற்போது சில மருத்துவ சிகிச்சைகளின் வாயிலாக அவர்களுக்கு தாய் பால் சுரப்பதை அதிகரிக்க முடியும். அப்படியும் இல்லையென்றால் குழந்தைகளுக்கு வழங்கும் பால்மா தொடர்பில் வைத்திய ஆலோசனையுடன் செயல்படுவதே மிகவும் சிறந்தது.

இவ்வாறு குறைந்தது 6 மாத காலம் வரைக்கும் குழந்தைக்கு தாய் பாலினை மாத்திரம் வழங்கிய பின்னர், சில மாற்று உணவு வகைகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். அவ்வாறு 6 மாதங்களின் பின்னர் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு எப்படியானதாக இருக்க வேண்டும்? என்னென்ன வகையான உணவுகளை அவர்களுக்கு வழங்கலாம்? எதனை தவிர்க்கலாம்? இனிப்புகளை வழங்குவது சரியா? சாப்பிட மறுக்கும் குழந்தைகளை எவ்வாறு சாப்பிட வைக்கலாம? என எம்மில் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் எழுவது இயல்பான ஒன்று.

அந்த வகையில் முதலில் நாம் குழந்தைகளுக்கு வழங்கும் உணவு எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பதை பார்ப்போம். அவர்களுக்கு வழங்கும் உணவில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் அடங்கி இருக்க வேண்டும். அத்துடன் சக்தி செறிவு மிக்கதாகவும் இருத்தல் அவசியம். மேலும் இலகுவில் விழுங்கக் கூடியதாகவும் சமிபாடடையக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பெரும்பாலும் திரவத்தன்மையான உணவு வகைகளை முதலில் கொடுத்து பழக்குவது மிகவும் சிறந்தது.

சரி இனி நாம் என்னென்ன உணவு வகைகளை வழங்கலாம் என்பதைப் பார்ப்போம். ஊட்டச் சத்துள்ள உணவுகள் என்று குறிப்பிட்டிருந்தோம் அல்லவா, அந்த வகையில் கரற், மீன், குரக்கன் உணவு வகைகள், தானிய மற்றும் பழங்கள் என்பவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

உதாரணமாக கரற் மற்றும் மீன் போன்ற உணவு வகைகளைக் கொடுக்கும் போது அவற்றை வேக வைத்து கைகளிலே நன்றாக மசித்துக் கொடுக்க வேண்டும். மீன்களை வழங்கும் போது பெரும்பாலும் முள்ளில்லாத சிறிய ரக மீன்களை கொடுப்பது சிறந்தது. அத்துடன் மாட்டிறைச்சி அதாவது கொழுப்பில்லாத இறைச்சித் துண்டுகளை தெரிவு செய்து அவற்றை நன்றாக அவித்து மசித்துக் கொடுக்கலாம். அத்துடன் சுத்தமான பழவகைகளை சாறு பிழிந்தும் அல்லது அரைத்தும் மசித்தும் கொடுக்கலாம்.

ஆனால் இவைகளை ஓர் அளவுக்குத் தான் கொடுக்க வேண்டும். குழந்தை குறித்த ஓர் உணவினை விருப்பவில்லையென்றால் அதனைக் கொடுப்பதை தவிர்த்துக் கொண்டு வேறு உணவுகளை கொடுக்கலாம். அதனை தொடர்ந்து இரு வாரங்களுக்குப் பின்னர் முதலில் குழந்தை உண்ண மறுத்த உணவினை மீண்டும் ஒரு புதிய வடிவில் சமைத்துக் கொடுக்கலாம்.

குழந்தைக்கு கொடுக்க கூடாத உணவுகள் என்று பார்க்கும் போது மிகவும் முக்கியமாக இனிப்பு சுவையுள்ள உணவுகளை வழங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அடுத்தது கொழுப்புச் சத்துள்ள உணவுகள். இவ்வகையான உணவுகள் உங்களின் குழந்தைகளை குண்டாக்கச் செய்யும். குழந்தைகள் குண்டாக இருப்பது உண்மையாகவே அவர்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்றதொன்றல்ல. வயதுக்கேற்ற நிறையும் உடல் அளவும் கொண்டிருப்பது தான் மிகவும் சிறந்தது.


காரணம் குழந்தைகள் பெரும்பாலும் 1 வயதில் எழுந்து நடப்பதற்கு முயற்சிக்கும். அவ்வாறு 1 வயதில் எழுந்து நடக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு இருதயம் பலமிக்கதாக இருக்கும். எதிர்காலத்தில் அக்குழந்தைகளுக்கு இருதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு.

எனவே நாங்கள் அளவுக்கதிமாக இனிப்பு மற்றும் கொழுப்புச் சுவையுடைய உணவுகளை வழங்குவதால் அவர்களின் உடற்பருமன் அதிகரித்து அவர்களால் இயல்பாக எழுந்திருப்பதோ அல்லது ஏனைய செயற்பாடுகளை செய்வதோ மிகவும் கடினமாக அமைந்து விடும் அல்லவா.

மேலும் ஐஸ்கிரீம், கோதுமை மாவிலான உணவுகளை முடிந்தளவு தவிர்த்துக் கொள்வது குழந்தைகளின் நீண்டகால ஆராக்கியத்துக்கு ஏற்ற ஒன்றாகும். அத்துடன் கடல் உணவுகளில் இறால், நண்டு, கணவாய் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

காரணம் இவ்வகையான உணவுகளால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை போன்ற சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. அத்துடன் செயற்கை சுவையூட்டிகளோ, நிறமூட்டிகளோ, வாசைனையூட்டப்பட்ட உணவு வகைகளையோ கொடுக்க கூடாது.

இவ்வாறான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வந்தால் உங்கள் குழந்தைகளும் ஆரோக்கியமான குழந்தைகளாக வளரும். அவ்வாறு ஆராக்கியமாக இருக்கும் குழந்தைகளின் தலை முடி கருமையாகவும் பலமாகவும் இருப்பதுடன் நகங்கள் நல்ல சிவப்பு நிறமாக இருக்கும்.

மேலும் 1 வயதுiடைய ஒரு குழந்தைக்கு 2 வயதாகும் போது அதன் நிறை சுமார் இரண்டு மடங்காக அதிகரிக்கின்றது. எனவே அதன் வளர்ச்சி விகிதம் மிகவும் அதிகம். அதற்கேற்றாற் போல் அவர்கள் சாப்பிடும் வீதமும் அதிமாகத் தான் இருக்கும். ஒரு நாளைக்கு சுமார் நான்கு தொடக்கம் எட்டு தடவையேனும் அவர்கள் சாப்பிடலாம்.


எனவே ஒரே தடவையில் நாம் அதிகளவான உணவுகளை வழங்குவதுடன் அவர்கள் கேட்கின்ற தருணங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வழங்குவதில் தப்பில்லை. அத்துடன் அவர்களின் வளர்ச்சி வேகத்திற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு சக்தி மிக்க உணவுகளை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

ஆகவே இவ்வாறு நாம் சொன்ன வழிமுறைகளுடன் ஓர் ஊட்டவியலாளரின் ஆலோசனையையும் உள்வாங்கிக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் முறையாக உணவளிக்க கற்றுக் கொள்ளுங்கள். இவ்வுலகில் உங்கள் குழந்தையும் நல்ல தேகாரோக்கியமும் புத்திக்கூர்மையும் மிக்க ஒரு குழந்தையாக திகழும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

-தம்பி

You May Also Like

  Comments - 0

  • pandian.v Sunday, 06 September 2015 03:51 AM

    nalla payanulla karuthu thank you

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X