2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

தவறான உணவுப் பழக்க வழக்கங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்

A.P.Mathan   / 2012 நவம்பர் 19 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


சொந்த பணத்தில் சூனியம் வைத்துக் கொள்வது போல எம்மிடம் இருக்கின்ற சில தவறான உணவு பழக்க வழக்கங்களால் நாம் நம்மை அறியாமலேயே பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாகின்றோம். அது தொடர்பில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக இருக்கின்றது. நாம் உணவு உண்ணும் வேளையில் விடுகின்ற சிறு சிறு தவறுகள் எமது உடலில் பாரிய பல விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. அவை என்னென்ன என்பதை நாம் ஓர் ஒழுங்கு முறையில் பார்ப்போம்.

இன்றெல்லாம் அலுமினிய பாத்திரங்களில் சமைப்போரின் தொகை அதிகரித்து விட்டது. எமது உணவுக் கலாசாரத்தின்படி அலுமினிய பாத்திரத்தில் சமைப்பது உடலுக்கு ஏற்றதொன்றல்ல. காரணம் எமது உணவில் நாம் அதிகமாக தக்காளி, தேசிக்காய், புளி போன்ற புளிப்பு சுவை நிறைந்த சேர்மானங்களை அதிகமாக சேர்த்து சமைப்பது வழக்கம்.

இவ்வாறு சேர்க்கும் இப்புளிச்சுவையுடைய சேர்மானங்களில் இயல்பாகவே அசிட் தன்மையும் மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது. நாம் அலுமினிய பாத்திரங்களை கொண்டு சமைக்கின்ற போது இப்புளிப்பு சேர்மானங்கள் அலுமினியப் பாத்திரத்தோடு தாக்கமடைந்து நாம் சமைக்கும் உணவுப் பொருட்களுடன் சேர்ந்து எமது உடலினுள் செல்கின்றது. எமக்குத் தெரியாமலேயே உணவுப் பொருட்கள் உடலினுள் இது செல்வதால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

01.    உணவுக் கால்வாய் பகுதிகளில் புற்றுநோயினை ஏற்படுத்துகிறது.
02.    சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பினை அதிகரிக்கின்றது.


எனவே அலுமினியப் பாத்திரங்களில் சமைப்பதை நாம் தவிர்த்துக் கொண்டு, தொண்டு தொட்டு நாம் பயன்படுத்தி வந்த மட்பாண்டப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதுபோன்ற உடலியல் பாதிப்புக்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

அது மட்டுமன்றி இப்போதெல்லாம் எம்மில் பலரும் சாப்பிட்ட பின்னும் அல்லது சாப்பிடும் போதும் மென்பானங்களை குடிப்பது தவிர்க்க முடியாததொரு பழக்கமாக புழக்கத்தில் இருந்து வருகின்றது. இதுவும் உடலுக்கு பெரும் தீங்கினையே ஏற்படுத்துக்கின்றது. இதனால்...
  1. நாம் உண்ணும் உணவுகளில் உள்ள விற்றமின்கள் உடலுக்குள் அகத்துறிஞ்சப்படாமல் வீணாகி விடுகின்றது. ஆகவே எவ்வளவு சத்துள்ள உணவை நாம் சாப்பிட்டாலும் அதன் முழுமையான போஷாக்கு எமது உடலுக்கு கிடைக்காமல் போகின்றது.
  2. அத்துடன் மென்பானங்களில் இருக்கும் அசிட் தன்மை தொண்டை வழியாகவே வெளியேறும். இதனால் தொண்டை முதல் இரைப்பை வரைக்குமான பகுதிகளில் அரிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. இது பின்னாட்களில் தொண்டைப் பகுதிகளில் காயங்களை ஏற்படுத்தி தொண்டைப் புற்று நோயினைக் கூட ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது.

எனவே இதனை தவிர்த்துக்கொள்ள வேண்டுமாயின் சாப்பிட்டவுடன் தண்ணீரை அருந்த வேண்டும். தண்ணீரை அருந்துவதனால் எமது உடலுக்கு எவ்வித பக்க விளைவுகளும் எற்படப்போவதில்லை. அத்தோடு தண்ணீரை உபயோகிக்கின்ற போது நாம் உண்ணும் உணவில் இருக்கும் அத்தனை சத்துக்களும் கனியுப்புக்களும் முழுமையாக உடலுக்குள் அகத்துறிஞ்சப்படுகின்றன. இதனால் உணவின் பூரணத்தை எமது உடல் பெற்றுக்கொள்கிறது.

அடுத்ததாக இப்போதெல்லாம் குளிர்சாதனப் பெட்டிகளை பயன்படுத்துவோரின் தொகையும் அதிகரித்து விட்டது. இவர்கள் தங்களின் வேலைகளை இலகுவாக்கிக் கொள்ளவும் நேரத்தை மீதப்படுத்திக் கொள்ளவும் மரக்கறி மற்றும் பழ வகைகளை அதிகமாக வாங்கி குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைத்துக் கொள்கின்றனர்.


இதுவும் கூடாத ஓர் உணவுப் பழக்க வழக்கமே. பொதுவாக அறுவடை செய்த மரக்கறிகள் மற்றும் பழ வகைகளைப் பொறுத்தமட்டும் அவை பெரும்பாலும் 3 நாட்களே முழுமையான விற்றமின்களுடன் இருக்கும். 3 நாட்களின் பின்னர் அவை கொஞ்சம் கொஞ்சமாக விற்றமின்களையும் கனிப்பொருட்களையும், நீர்ச்சத்தினையும் இழக்க தொடங்கிவிடும். எனவே 3 நாட்களுக்கும் அதிகமாக மரக்கறி வகைகளை நாம் குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்திருந்து சமைப்பதனால் எவ்வித பிரயோசனமும் இல்லை.

எனவே குறிப்பிட்ட தினத்திற்கு தேவையான மரக்கறி வகைகளையும் பழ வகைகளையும் குறித்த தினங்களிலேயே வாங்கி சமைப்பதே மிகவும் பொருத்தமான ஒன்றாகும். அவ்வாறு முடியாதவர்கள் வாங்கி வைத்த மரக்கறிகளை பெரும்பாலும்  3 நாட்களுக்குள் சமைத்து முடிப்பதே மிகச் சிறந்த வழிமுறையாகும்.

இவ்வாறு உணவு உட்கொள்ளும் போது நாம் விடுகின்ற சிறு சிறு தவறுகளால் எமது உடலில் ஏற்படும் சிறிய விளைவுகள் எதிர்காலத்தில் பாரிய நோய்களைத் தோற்றுவிப்பதற்கு அடிப்படையாக அமைந்து விடுகின்றது. எனவே இவ்வாறான பழக்க வழக்கங்களைத் தவிர்த்து கொள்வது எமது ஆராக்கியமான வாழ்க்கைக்கான அடிப்படையாக அமையும். அத்துடன் நாம் தொண்டு தொட்டு கடைப்பிடித்துக் கொண்டு வந்த உணவுப் பழக்கவழக்கங்களை தொடர்ந்தும் பேணி வந்தாலே போதும் எமது உடலை நாம் கட்டுக்கோப்பாக பேணக்கூடியதாக இருக்கும். அதனை விடுத்து புதிய கலாசார பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக வெறுமனே நாம் நோய்வாயுக்கு ஆளாகாமல் எம்மை பாதுகாத்துக் கொள்வதானது, எங்கள் ஒவ்வொருவரினதும் கைகளிலேயே தங்கியிருக்கின்றது. எனவே முறையான உணவுப் பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து நாம் ஆரோக்கியமாக வாழ்துடன், எமது வருங்கால சந்ததிக்கும் அதனைப் பயிற்றுவிப்போம்.

-தம்பி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X