2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

நாளமுடிச்சுகள்

A.P.Mathan   / 2012 நவம்பர் 07 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிலருடைய கால்களில் பார்த்தீர்களேயானால் கால் நாளங்களில் முடிச்சுகள் காணப்படும். இதனை மருத்துவர்கள் நாளமுடிச்சுகள் என சொல்கின்றனர். அதாவது Varicose vain என ஆங்கிலத்தில் சொல்லலாம்.

எமது கால்களில் இருக்கின்ற நாளங்கள் புடைப்படைந்து முடிச்சுளாக அல்லது முறுக்கடைந்த வகையில் வெளியில் தெரிவதனையே நாம் நாளமுடிச்சுகள் என்கின்றோம். இது எமது கால் நாளங்களில் இருக்கின்ற சில வேல்வுகள் தொழிற்படாத சந்தர்ப்பங்களில் பாதத்திலிருந்து எமது உடலின் மேல்நோக்கி செல்லும் இரத்தமானது ஓரிடத்தில் தேங்கி நிற்பதனாலேயே ஏற்படுகின்றது.

பெரும்பாலும் இது எமது முழங்காலுக்கு கீழும் முழங்காலுக்கு மேல் தொடைப்பகுதி வரைக்கும் கூட உருவாகும். நாளமுடிச்சுள்ளவர்கள் பெரும்பாலும் நின்று கொண்டே வேலை செய்பவர்களாக இருப்பார்களேயானால் அவர்களுக்கு இதன் பாதிப்பு மிகவும் அதிகமாகவே இருக்கும்.

எனவே நாளமுடிச்சுகள் உள்ளவர்கள் அதனை சாதாரணதொரு விடயமாக கருதி கவனயீனமாக இருக்கக் கூடாது, காரணம் இந்த நாளமுடிச்சுகளில் ஏதேனும் சந்தர்ப்பங்களில் இரத்தக் கசிவு ஏற்படுமாயின் அதனால் எமது உயிருக்கே கூட பாதிப்பு ஏற்பட்டு விடும்.

அத்தோடு நாளமுடிச்சுகள் வீக்கமடைந்து அப்பகுதியில் புண்கள் ஏற்படுமாயின் அது நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு ஏற்படும் புண்களைப் போல இலகுவில் ஆறாத புண்களாகி விடும். இவ்வாறான புண்கள் பெரும்பாலும் காலின் மொழிப்பகுதியிலேயே அதிகமாக தோன்றுகின்றன.

இப்புண்கள் நோயாளர்களுக்கு பெரும் அசௌகரியங்களையே ஏற்படுத்துகின்றது. காரணம் அதிலிருந்து நீர் போன்ற திரவம் எந்நேரமும் வடிந்து கொண்டே இருக்கும். பொது இடங்களுக்குச் செல்ல முடியாதளவுக்கு அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன் ஆடைகளையும் அது ஈரளிப்பாக்கி விடும்.

நாளமுடிச்சுள்ள ஒருவரின் காலில் குறித்தவொரு இடத்தில் தேரைத்தோல் போன்ற மிகவும் கறுப்பான தோற்றத்தில் இருந்தால் அது அந்த இடத்தில் உங்களுக்கு புண் ஏற்படப் போகின்றது என்பதற்கான முதல் அறிகுறி என்பதனை மறந்து விட வேண்டாம். உடனடியாக நீங்கள் வைத்தியரை சந்திப்பதே மிகச்சிறந்த வழியாக அமையும்.

பெண்களைப் பொறுத்த மட்டில் அவர்களில் சிலருக்கு இந்த நாளமுடிச்சானது மகப்பேற்றுக்கு பிறகும் சிலருக்கு மகப்பேற்றுக்கு முன்னும் ஏற்படும்.


இவ்வாறு காலில் நாளமுடிச்சுகள் உங்களுக்கும் இருக்குமானால் நீங்கள் செய்ய வேண்டியது வைத்தியரை சந்திப்பது தான். சாதாரணமாக முழங்காலுக்கு கீழ் இந்நாளமுடிச்சுகள் உள்ளவர்கள் ஊசிகளின் மூலம் அதனை இல்லாமலாக்க முடியும்.


அத்தோடு க்ரே எனப்படும் பெண்டேஜை நாளமுடிச்சுள்ள காலின் பாதத்திலிருந்து தொடைப்பகுதி வரைக்கும் போட்டுக்கொள்ள வேண்டும். இரவில் இதனை போட்டுக் கொள்வதை தவிர்த்துக் கொண்டு, காலை 07.00 மணியிலிருந்து இரவு 09.00 மணிவரைக்குமான நேரத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். காரணம் இந்நேரமே இதற்கு மிகவும் பொருத்தமான நேரமாகும்.

மேலும் டுப்லைஸ் ஸ்கேன் எனப்படும் ஓர் அறுவை சிகிச்சை மூலமும் நாளமுடிச்சு நோயிலிருந்து முற்றாக குணமடைந்து கொள்வதுடன் காலில் ஏற்படும் புண்களையும் இல்லாமலாக்கிக் கொள்ள முடியும். நாளமுடிச்சுள்ளவர்களின் காலில் ஏற்படும் புண்களை அறுவை சிகிச்சை மூலம் மாத்திரமே குணப்படுத்திக் கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க மிக முக்கியமான விடயமுமாகும்.

எனவே நாளமுடிச்சுள்ளவர்கள் அவதானமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதொன்றாகும். காரணம் அது உங்கள் உயிருக்கும் சில வேளைகளில் ஆபத்தை விளைவிக்க வல்லது. எனவே நாளமுடிச்சுள்ளவர்கள் அது விடயத்தில் அதிக கவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

-க.ஜெயகாந்தன்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X