2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

மண்முனைப்பற்று பிரதேச சபையை ஐ.தே.க கைப்பற்றியது

Princiya Dixci   / 2021 மார்ச் 01 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆளும் அதிகாரத்தை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியது.

மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிற்கான அமர்வு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மணிவண்ணன் தலைமையில் இன்று (01) காலை நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச சபையில் தொடர்ச்சியாக தவிசாளருக்கு எதிரான பிரேரணைகள் வெற்றிபெற்றதை தொடர்ந்து, உள்ளூராட்சிமன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக தவிசாளர் அதிகாரம் இழந்த காரணத்தால் புதிய தவிசாளர் தெரிவு நடைபெற்றது.

17 உறுப்பினர்களைக்கொண்ட மண்முனைப்பற்று பிரதேச சபையில் இன்றைய தினம் 16 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தவிசாளர் தெரிவு தொடர்பான அறிவிப்பை, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மணிவண்ணன் விடுத்தபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் உறுப்பினராகவுள்ள தயானந்தனை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் முன்மொழியப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நகுலேஸின் பெயர் முன்மொழியப்பட்டது.

இரு போட்டியாளர்கள் காணப்பட்டதன் காரணமாக வாக்கெடுப்பின் அடிப்படையில் தவிசாளர் தெரிவுக்கு நடைபெற்றதுடன், தயானந்தனுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் நகுலேஸுக்கு ஆதரவாக 05 வாக்குகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாத்திரமே நகுலேஸுக்கு வாக்களித்திருந்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, நல்லாட்சிக்கான தேசிய இயக்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட அனைத்துக் கட்சிகளும் தயானந்தனுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இதனடிப்படையில், மண்முனைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தயானந்தன் தெரிவுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X