2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 6 சிவப்பு வலயங்கள்

Freelancer   / 2021 ஜூலை 11 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக இதுவரை 100 பேர் மரணமடைந்துள்ளனர் எனத் தெரிவித்த மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன், மாவட்டத்தின் 6 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் சிவப்பு வலயங்களாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் ஆக கூடிய மரணமாக இதுவரை 100 மரணங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கடந்த 24 மணித்தியாலயங்களில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து 22 பேரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து 24 பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், சிறைச்சாலை கைதிகள் 3 பேரும், கோறளைப்பற்று மத்தி, பட்டிப்பளை, ஏறாவூர் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் 3 பேர் உட்பட 64 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அத்துடன், மாவட்டத்தில் இதுவரை 7,199 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 100 பேர் மரணமடைந்துள்ளனர்.   

கொரோனா 3ஆவது அலையில் 6,214 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதுடன் 91 பேர் மரணித்துள்ளனர்.

கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் இருந்து  4,995 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதுடன் தொடர்ந்தும் 1,060 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

மாவட்டத்தில், கரடியனாறு, வாகரை, நாவற்காடு, பெரியகல்லாறு போன்ற வைத்தியசாலைகள் கொரோனா இடைத்தங்கல் முகாம்களாக  அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், காத்தான்குடி, வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி ஆகிய வைத்தியசாலைகள் சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கபட்டு வருவதுடன், மாவட்டத்தில் 700 நோயாளர்களைப் பராமரிக்க கூடிய கட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், கோறளைப்பற்று மத்தி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி  ஆகிய 6 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் தொடர்ந்தும் சிவப்பு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

முதற்கட்டமாக வழங்கப்பட்ட 3 ஆயிரம் தடுப்பூசிகள் சுகாதாரதுறையினருக்கு ஏற்றப்பட்டன. தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கிடைக்கப்பெற்ற 25 ஆயிரம் தடுப்பூசிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ஏனைவர்களுக்கும் ஏற்றப்பட்டன.

3ஆவது கட்டமாக தற்போது 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.  இதுவரையில் 30 ஆயிரத்து 176 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

இரண்டாம் தடுப்பூசி 5 ஆயிரம் பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன், சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய மாவட்டத்திலுள்ள 12,000 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது 

மாகாண சுகாதார திணைக்களத்தினாலும் நன்கொடைகளாலும்  ஒட்சிசின் சிலிண்டர்கள் கிடைக்கப் பெற்றதையடுத்து தேவையான அளவு ஒட்சிசன் இருப்பில் இருக்கின்றது.

சுகாதார அமைச்சினால் கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டபோதும் மக்கள் தேவையற்று வெளியில் வராமல் ஒன்றுகூடல்களை தவிர்த்து  சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .