2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸாரால் பதட்டம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு

Princiya Dixci   / 2021 மார்ச் 16 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

சர்வதேசத்திடம் நீதி கோரி, மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கும் கைதுசெய்வதற்கும் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட முயற்சி காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம், 13வது நாளாகவும் இன்றும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாகஅன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீர்த்த மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் கோவில் முன்றிலில் 13ஆவது நாளாகவும் நேற்று (15) நடைபெற்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், நேற்றுப் பிற்பகல் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வருகைதந்த பெருமளவு பொலிஸார், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைந்துசெல்லுமாறும் இல்லாவிட்டால் கைதுசெய்யப்படுவீர்கள் என மிரட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் 50க்கும் மேற்பட்ட பொலிஸார், போக்குவரத்து பொலிஸார் என பல தரப்பினர் பஸ்களுடன் வந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற தடையுத்தரவு கட்டளை உள்ளதன் காரணமாக போராடமுடியாது எனவும் கொரோனா நடைமுறைகளை மீறிய வகையில் போராட்டம் நடைபெறுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி, குறித்த பகுதியில் போராட்டம் நடத்தமுடியாது எனவும் அதற்கான நீதிமன்ற தடையுத்தரவு உள்ளதாகவும் மீறி போராட்டம் நடத்தினால் கைதுசெய்யப்படுவீர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாம் அமைதியான முறையில் போராடும்போது, ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுப்பதாகவும் இதுதான் இன்றைய இலங்கையின் நிலைமையெனவும் இதை சர்வதேச சமூகம் சிந்தித்து தமிழ் மக்களுக்கான நீதியை வழங்கவேண்டும் எனவும் இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். 

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காட்டிய கடுமையான எதிர்ப்புக் காரணமாக பொலிஸார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போராட்டத்துக்கு நீதிமன்றத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்த போதிலும் எந்தத் தடையுத்தரவும் தங்களிடம் காண்பிக்கவில்லையெனவும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்துக்கு பொலிஸார் ஏற்படுத்திவரும் இடையூறுகளுக்கு எதிராக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X