2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

’பிரிந்துள்ள நாட்டை மீட்டு, முன்கொண்டுசெல்ல ஒன்றிணைவோம்’

Princiya Dixci   / 2021 மார்ச் 02 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

இனங்கள் அடிப்படையில் பிரிந்துள்ள நாட்டை மீட்டு, முன்கொண்டுசெல்ல அனைவரும் ஒன்றிணைவோம் என ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. 

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் எனவே, அனைவரும் ஒன்றிணைந்து, இந்த நாட்டை மீட்டு, முன்கொண்டுசெல்ல வேற்றுமைகளை மறந்து ஒன்றிணையவேண்டுமென, ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயசேகர தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் புனரமைப்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உறுப்பினர்களுடனான கலந்துரையாடல், நேற்று (01) நடைபெற்றது.

மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் லிங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜயசேகர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஆசுமாரசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் சரிவுக்கான காரணங்கள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ருவான் விஜயசேகர, “நாங்கள் ஒரு நாடு என்ற ரீதியில் ஐக்கியப்படாவிட்டால் எங்களுக்கு எந்தவித எதிர்காலமும் இருக்காது. நாங்கள் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபட்டு செயற்படாவிட்டால் இந்த நாட்டில் நாங்கள் எதையும் செய்யமுடியாத நிலையே ஏற்படும். 

“இன்றைய அரசாங்கம் படுபாதாளத்துக்குள் சென்றுகொண்டிருக்கின்றது. இனங்கள் அடிப்படையில் நாடு பிரிவடைந்து நிற்கின்றது. பொருளாதாரம் வீழ்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. பலர் வாழ்வாதாரத்தைக் கொண்டுசெல்லமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

“கல்வி நிலை வீழ்ச்சி நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது. கிராமங்களில் உள்ள பாடசாலைகளை சரியான முறையில் அபிவிருத்திகளை செய்யமுடியாத நிலையில் இந்த அரசாங்கம் நிற்கின்றது.

“நாட்டில் இருக்கின்ற பொக்கிசங்களை இந்த அரசாங்கம் அழிக்கின்றது. நாட்டில் உள்ள வனங்கள் அழிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன. நாட்டுக்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை குறைந்துவருகின்றது. அந்நிய செலாவாணி வீழ்ச்சி அடைகின்றது. இவ்வாறான நிலையில் எதிர்கால சந்ததிக்கு எவ்வாறு நாட்டினை கட்டியெழுப்பி, வழங்கப்போகின்றோம்.

“நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பவேண்டுமானால், முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டுமானால், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆளுமையையும் அதன் தேவையையும் மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். அதற்குரிய அனுபவமும் திட்டங்களும் எங்களிடம் இருக்கின்றது. அதன் காரணமாக கட்சியென்ற ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி எழுந்து நிற்கக்கூடிய காலம் வந்துள்ளது” என்றார்.

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்தான் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிளவடையச் செய்வதற்கு முன்னின்று உழைத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஆசுமாரசிங்க இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X