2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

‘நல்லாட்சியிலே மிகப் பெரிய காணி ஊழல்’

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

நல்லாட்சிக் காலத்தில் களுவன்கேணி பகுதியில் 300 ஏக்கர் காணிகள், ஏறாவூர் மற்றும் காத்தான்குடியை சேர்ந்தவர்களால் பிடிக்கப்பட்டு, சிங்கப்பூர் நிறுவனத்துக்கு விற்பனை செய்த மிகப் பெரிய ஊழல் நடைபெற்றதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அதனை அன்றிருந்த அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணியில் எரிபொருள் நிலையம் மற்றும் ஐஸ் உற்பத்தி நிலையங்களுடனான மீனவர் கட்டடம், நேற்று (26) மாலை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்தின் பணிப்பாளர் குரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய சந்திரகாந்தன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

“நல்லாட்சிக் காலத்தில் இப்பகுதியில் பெருமளவு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய காணி ஊழல் நடைபெற்றுள்ளது. சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று 300 ஏக்கருக்கும் அதிகமான காணியை, காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் 50 ஏக்கர்களாக பிரித்து, சிங்கப்பூர் நிறுவத்துக்கு விற்பனை செய்த மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.

“இப்பகுதியில் உள்ள ஐஸ் தொழிற்சாலை காணி மற்றும் இராணுவ முகாம் காணிகளை அடைத்து விற்பனை செய்யும் வரைக்கும் இங்கிருந்த அரசியல்வாதிகள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். இது எங்களது காலத்தில் நடைபெறவில்லை, நல்லாட்சிக் காலத்திலேயே நடைபெற்றது. அப்பகுதியில் மிகப்பெரும் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.

“பாரம்பரிய கிராமங்களையும் கலாசாரங்களையும் தொழிலையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் சும்மா பேசிக்கொண்டிருக்காமல் சிந்தனை ரீதியான மாற்றத்தை கொண்டு முன்னேற வேண்டும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .