2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

’தமிழ் சமூகத்தின் எழுச்சியே பொத்துவில் - பொலிகண்டி பேரணி’

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமானது, நீண்டகாலத்தின் பின்னர் தமிழ் சமூகத்தில்  ஏற்பட்ட எழுச்சியாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,  “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமானது வரலாறு காணாத வெற்றியைக் கண்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் அதற்குக் கிடைத்த ஆதரவு என்பது தமிழ் சமூகத்தில் நீண்டகாலத்தின் பின்னர் ஏற்பட்ட எழுச்சியாகவே இருந்தது.
 
“எமது மக்களின் பிரச்சினைகள் உற்றுநோக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இதனை நாம் செய்திருந்தோம். ஆனால், சிலர் நான் தெரிவித்த கருத்துகளை வைத்து சாணக்கியன் ஏமாற்றிவிட்டார் என்று சொல்லுகின்றார்கள். உண்மையில் இந்தப் போராட்டம் என்பது தமிழ் மக்களின் எழுச்சியை, சர்வதேச சமூகம் அனைத்துக்கும் தெரியப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது.

“உண்மையில் இந்தப் போராட்டம் வெற்றியடைந்தமைக்கு பலரின் பங்களிப்பு இருந்தது. அனைத்துப் பிரதேசங்களிலும் கிராமங்களிலும் இருந்து எமக்கு ஆதரவளித்த எமது சகோதரங்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும். அத்தோடு, பல அரசியற் பிரமுகர்களும் பல்வேறு உதவிகளைச் செய்திருந்தார்கள். இந்தப் போராட்டமானது தமிழ் மக்களினதும், தமிழ்பேசும் மக்களினதும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கான போராட்டமாகவே நடத்தியிருந்தோம். இதனை எவரும் திசைதிருப்பக்கூடாது.

“இந்தப் போராட்டத்தின் வெற்றியை மாத்திரம் கருதி நாங்கள் பல விடயங்களை அலசாமல் இருந்தாலும் கூட ஒரு சிலர் தொடர்ச்சியாக ஊடக சந்திப்புகள் நடத்தி, இந்தப் போராட்டத்தைப் பற்றிய கருத்துகளைச் சொல்வதைப் பார்க்கும் போது. சில அடையாளம் இல்லாதவர்கள் தங்களின் அடையாளத்தை உருவாக்குவதற்காக இதனைப் பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் இருக்கின்றது. ஏனெனில், உண்மையில் சட்டரீதியான சிக்கல் வரும் போது அனைவருக்கும் சேர்த்துத் தான் வந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு ஏதும் வந்ததாக நான் அறியவில்லை” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X