2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

“தமிழர்களால் முஸ்லிம்கள் பாதிக்கப்படவில்லை” -சந்திரநேரு சந்திரகாந்தன் காட்டம்

Johnsan Bastiampillai   / 2021 ஜூன் 07 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

உண்மையை அறியாமல்  வரலாறுகளைத் திரிபுபடுத்தி, விளம்பரங்களுக்காக வாய் போன போக்கில் வார்த்தைகளை அள்ளி வீசாது, வரலாறுகளைப் படித்த பின்னர் பொதுவெளியில் பேசுவது சிறந்ததாகும் என்று அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி  நிகழ்ச்சி ஒன்றில், அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்  தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் வழங்கிய செவ்வியில், "தமிழர்களால் முஸ்லிங்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்" என கூறிய கருத்துக்கு மறுப்புத் தெரிவித்தே, சந்திரநேரு சந்திரகாந்தன்  மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய  மாவட்டங்களிலும் கடந்த மூன்று தசாப்த காலமாகத்  தமிழ் மக்கள்  சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். தமிழர்களின் நிலங்களும் அவர்களின் இருப்புகளும் வாழ்வாதாரங்களும் மற்றைய இனங்களால் கேள்விக்கு உட்டுத்தப்பட்டே வருகின்றன.

தமிழர்களின்  கலாசாரம், மரபுரிமை, வரலாறு சார்ந்த விடயங்களும் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு  வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் 30 க்கு மேற்பட்ட தமிழ்க்  கிராமங்கள் பறிபோயுள்ளன. 50க்கு மேற்பட்ட கோவில்கள் இடித்தழிக்கப்பட்டுள்ளன.  

அதிலும் ​அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரையில்,  90 ஆம் ஆண்டிலிருந்து சம்பவங்களக்கு நேரில்  முகங்கொடுத்தவன் என்ற வகையில், தமிழர்களால் முஸ்லிங்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களை நான் அறிந்திருக்கவில்லை.

பாணமை தொடக்கம் பெரியநீலாவணை வரை, குறிப்பாக மீனோடைக்கட்டு, திராய்கேணி, சாய்ந்தமருது தமிழ் பிரிவு, வீரமுனை, சம்மாந்துறை, கோரக்கோவில் கிராமம், மல்வத்தை புதுநகரம், கணபதிபுரம், வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, வீரன்சோலை, இறக்காமம் என அம்பாறை மாவட்டத்துக்குள் பல  கிராமங்கள் தமிழர்களிடமிருந்து  பறிபோயுள்ளன.

இக்கிராமங்கள் யாரால், எச்சந்தர்ப்பத்தில், எவ்வாறு திட்டமிட்டு பறிபோயுள்ளன என்பது எல்லோருக்கும் தெரியும்.  அம்பாறை மாவட்டத்தில் அழிக்கப்படட கிராமங்களிலே 2,000க்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவை சரியான முறையில் விசாரிக்கப்படாது, குற்றவாளிகள் தண்டிக்கப்படாது காலவோட்டத்தில்  மறைக்கப்பட்டு அழிக்கப்பட்டும் விட்டன.

இது போன்று, கிழக்கு மாகாணம் முழுவதிலும் பல சோக வரலாறுகளும், கறைபடிந்த சம்பவங்களும் உள்ளன. குறிப்பாகச் சொல்லப்போனால், கிழக்கு மாகாணத்தில் தமிழ்க் கிராமங்களே அழிக்கப்பட்டன; அத்துமீறிய குடியேற்றங்களும் செய்யப்பட்டன.

யுத்த காலத்தில் சில பாதிப்புகள் நடந்திருக்கலாம். ஆனால் திட்டமிட்ட முறையில் தமிழர்களால் வேறு எந்த இனத்தவருடைய கிராமங்களும் அழிக்கப்படவோ ஆக்கிரமிக்கப்பட்டதாகவோ இதுவரை இல்லை என்பதே உண்மையாகும்.

தமிழர்கள் முஸ்லிம் சமூகத்துக்கோ ஏனைய சமூகத்தவருக்கோ எதிரானவர்களல்ல. ஆனால்,  எமது தமிழ்ச் சமூகத்தைக் கைநீட்டி  பழிசொல்லும் போது, வெறுமனே கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே,  விளம்பரங்களுக்காக வாய் போன போக்கில் வார்த்தைகளை அள்ளி வீசாது, வரலாறுகளை அறிந்துகொண்ட பின்னர், பொதுவெளியில் பேசுவது சிறந்ததாகும் என்றார்.

 

--


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .