2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

’சஜித் தலைமையில் முஸ்லிம்கள் ஒன்றுபடுவது சாத்தியப்படாது’

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் செய்து கொண்ட தேசியப் பட்டியல் ஒப்பந்தத்தை உதாசீனம் செய்து துரோகம் இழைத்த ஐக்கிய மக்கள் சக்திக்குப் பின்னால் முஸ்லிம்களை அணிதிரளச் செய்வது இனிமேல் சாத்தியப்படாதென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

20ஆவது திருத்தத்தை ஆதரித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களை விமர்சித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்காருக்குப் பதிலளிக்கும் வகையில், நஸீர் அஹமட்  ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களைப் பற்றி விமர்சிக்குமளவுக்கு, மரிக்கார் எம்பிக்கு அரசியல் சாணக்கியம் இருக்கும் என நான் கருதவில்லை.

“சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளைப் புறந்தள்ளும் இலட்சணத்தில் உள்ள கட்சியில் இருக்கும்  மரிக்கார் எம்.பி எவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்வார்?  20ஐ ஆதரித்ததன் நோக்கத்துக்குப் பின்னால் சமூகங்களுடனான இணக்கப்பாடு உள்ளது. இதை, மரிக்கார் புரிந்துகொள்ளல் அவசியம். 

“ஏனைய சமூகங்களிடமிருந்து முஸ்லிம்கள் தனிமைப்படுதல் மற்றும் அந்நியப்படும் நிலைமைகளை இல்லாமல் செய்யும் சிந்தனைகளும் இந்த ஆதரவில் உள்ளன. அத்துடன், முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்புக்கான உத்தரவாதம், ஜனாஸாக்களை அடக்குதல் ஆகியவையும் இதில் தங்கியுள்ளன.

“அதுமாத்திரமன்றி இழந்துபோன முஸ்லிம் சமூகத்தின் பேரம்பேசல் சக்தியை வேறு வகையில் நிரூபிக்கும் இராஜதந்திரங்களும் இதில் அடங்கியுள்ளன. மரிக்கார் எம்.பி இவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார். 

மேலும் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களின் சுமார் 12 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஒரு தேசியப்பட்டியலையேனும் வழங்காமல் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்குப் பாரிய துரோகம் இழைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X